

ஆறு தமிழ்ப் படங்களில் நடிப்பதாக அறிகிறோம். இவற்றில் குறிப்பிடத்தக்க வேடம் என்று எதைச் சொல்வீர்கள்? - எதுவுமில்லை.
எந்தக் குறிப்பிடத்தக்க வேடமும் இப்போது தமிழில் அமையவில்லையா! இந்த நிலையை மாற்றிக்கொள்ள நீங்கள் எந்தவித முயற்சிகளும் எடுத்துக்கொள்ளவில்லையா? - நடிக்க வந்த முதல் நாளில் இருந்தே நான் அப்படியெல்லாம் முயற்சிகள் எடுத்துக்கிட்டதில்லையே. தமிழ் சினிமாவுலகில் அப்படியெல்லாம் ‘சாய்ஸ்’ இருப்பதில்லை. நல்ல படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள் மிகக் குறைவு. பணம் பண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் அதிகம். தவிர இது கதாநாயகர்களின் ஆதிக்கம் நிறைந்த திரையுலகம்.
தவறாக நினைக்கக் கூடாது. அதிகமான எடையின் காரணமாகத்தான் உங்களுக்குக் கதாநாயகி வேடங்கள் தொடரவில்லையோ? - இயற்கையிலேயே எனக்குச் சற்று பருமனான, அகலமான உடல்வாகுதான். என் முதல் படமான ‘திருவருட்செல்வ’ரில் நடித்தபோது எனக்கு வயது 13தான் என்பதைப் பலரும் நம்பவில்லை. அப்போது பதினேழு வயதுப் பெண்போல் தோற்றமளித்தேன். என்றாலும் ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘மதுரகீதம்’, ‘ரவுடி ராக்கம்மா’ இப்படிப் பல படங்களில் நான் கதாநாயகியாக நடிக்கவில்லையா என்ன? சொல்லப்போனால் கே.ஆர்.விஜயாவும் ராதிகாவும் தொடக்கக் காலத்தில் இன்னமும் பருமனாக இருந்தவர்கள்தானே!
பின் என்னதான் காரணம்? - ‘அபூர்வ ராகங்கள்’தான் காரணம்! அதில் நடிக்கும்போது எனக்கு வயது 22 தான். ஆனால் நாற்பது வயதுப் பெண்ணின் வேடம். அதற்குப் பொருந்தும்படியான மேக்கப். இந்த ரோல் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டது. ஆனால் ஒன்று, ‘பவர்ஃபுல்’லான அக்கா, அண்ணி வேடங்களை ஏற்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. சொல்லப்போனால் மனோரமாவைப் போல் பேர் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உண்டு. காரணம் ‘கிளாம’ரை விட உணர்ச்சிகரமான வேடங்களில் தான் எனக்கு எப்போதுமே நாட்டம்.
‘ஸ்ரீ வித்யாவா இப்படி?’ என்று கேட்க வைத்ததே ‘ரசிகன்’ படக்காட்சி. அது குறித்து? (தன் காதலி என்று எண்ணிக்கொண்டு அப்படத்தின் நாயகன் விஜய் தன் மாமியாரான ஸ்ரீ வித்யாவுக்கு முதுகு தேய்க்கும் காட்சி) - பொதுவாக யாராவது நம்மைத் தவறான ஷாட்டில் காண்பித்துக் கெட்ட பேர் வாங்கி தருவார்கள் என்கிற பயம் ஏற்பட்டால் அந்த இயக்குநர்களின் படங்களைத் தவிர்த்து விடுவது என் வழக்கம்.
ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகரை நான் அப்படி நினைத்திருக்கவில்லை. ‘அபூர்வ ராகங்க’ளில்கூட குளியலறையிலிருந்து நான் வெளிவரும் காட்சி ஒன்று உண்டு. ஆனால் ரசிகனில் நீங்கள் குறிப்பிடுகிற காட்சி பாலிஷுடன் எடுக்கப்படவில்லை. ஆபாசமான வசனச் சேர்க்கையால், நகைச்சுவையாக மட்டுமே இருந்திருக்க வேண்டிய அந்தக் காட்சி, தரம் இழந்து போய்விட்டது. இதைப் பற்றி இயக்குநரிடம் கேட்டேன். சிரித்தபடி தலையைக் குனிந்து கொண்டார்.