

சிறு வயது முதல் ஒரு கத்தோலிக்கராக எப்படி வளர்ந்தார் - அதன்பின் அவரது கடவுள் நம்பிக்கை என்னவாக மாறியது என்பதை வைத்து மைக் ஃப்ளானகன் (Mike Flanagan) எழுதி இயக்கிய சீரீஸ் ‘மிட்நைட் மாஸ்’. அது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானபோது அதற்குப் பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் சீரீஸ் எதிர்பார்த்த அளவு மக்களிடம் போய்ச் சேரவில்லை.
இந்த சீரீஸில் மிக நீளமான வசனங்கள் உண்டு. சீரீஸ் உரிய வெற்றியை அடைய முடியாமல் போனதற்கு அவையும் ஒரு காரணம். மைக் ஃப்ளானகன், தனது மனதில் இருந்ததையெல்லாம் கொட்டி இந்த சீரீஸை எடுத்ததில் கிட்டத்தட்ட அவரது தனி வாழ்க்கை பற்றிய ஒரு படைப்பாக அமைந்துபோனது இந்த சீரீஸின் இன்னொரு பாதகமான அம்சம். இருப்பினும் பல காட்சிகளில் இந்த சீரீஸ் பயத்தைக் கிளப்பும் தன்மையையும் உடையது.
இதுவரை மைக் ஃப்ளானகன் எடுத்த சீரீஸ்கள் எல்லாமே ஒரே ஒரு சீஸனுடன் முடிந்துவிடும். இரண்டாம் சீஸன் என்பதே இருக்காது. ஆனால் ‘மிக்நைட் மாஸ்’ எடுத்து முடித்ததும் மைக் ஃப்ளானகன், இரண்டாவது சீஸனும் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தது ‘தி மிட்நைட் கிளப்’ (The Midnight Club) வெளியானபோது அவரது ரசிகர்களுக்குத் தெரிய வந்தது.
இரண்டு விதிகள்: இரண்டாம் சீஸனின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு பழங்கால மருத்துவமனையில் உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் இருக்கிறார்கள். எப்படியும் ஒரு நாள் இந்த உயிர்க்கொல்லி நோய்கள் தங்களைப் பலி வாங்கிவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதுவரை தினமும் இரவு மருத்துவமனையின் சிப்பந்திகள் அனைவரும் உறங்கியபின் ஒரு ரகசிய இடத்தில் சந்திக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் ஒரு பேய்க்கதை சொல்ல வேண்டும் என்பது அந்தச் சந்திப்பில் முக்கிய விதிமுறை. அவர்களுக்குள் இன்னொரு விதிமுறையும் உண்டு. தங்களில் யார் இறந்தாலும் ஆவியாக வந்து, மரணத்துக்குப் பிறகு என்ன நடந்தது என்பதைக் கிளப்பில் தோன்றி சொல்ல வேண்டும். இந்த விடுதிக்கு ஒரு பதின்ம வயதுப் பெண் வருகிறாள். அவளுக்கும் ஓர் உயிர்க்கொல்லி நோயுண்டு. இவர்கள் எல்லாரும் சேர்ந்து என்ன செய்தார்கள் என்பதே சீரீஸ்.
முதல் சீஸன் பெரிதாக வரவேற்பு பெறாமல் போனதில், நெட்ஃபிளிக்ஸ் இரண்டாம் சீஸனை ரத்துசெய்துவிட்டது. அதனால், ‘மிட்நைட் மாஸை’த் தொடர்ந்து ‘மிட்நைட் கிளப்’பும் தோல்வி.
இதன் பின்னர்தான், எழுத்தாளர்களில் மிக முன்னால் தோன்றி, உலகின் முதல் துப்பறியும் கதையை எழுதிய ‘எட்கர் அலன் போ’வின் பின்னால் சென்றார் மைக் ஃப்ளானகன். எட்கர் அலன் போ மிக வித்தியாசமான கதைகளை எழுதியவர். கவிஞர், அகால மரணம் அடைந்தவர்.
அவரது படைப்புகளில் ஆழமான இருண்ட தன்மை இருக்கும். அவரது ‘The Fall of the House of Usher' என்கிற சிறுகதையை இம்முறைக் கையிலெடுத்து புதிய சீரீஸ் படைத்திருக்கிறார் மைக் ஃப்ளானகன். அதனுடன் எட்கர் அலன் போவின் பிற கதைகளில் இருந்தும் சில விஷயங்களை எடுத்திருக்கிறார். அக்டோபர் 12ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவிருக்கும் நிலையில், இதன் டிரெய்லர் சில நாள்களுக்கு முன்னர் வெளியாகி அவரது ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.
ரசிகர்களின் அன்பு: எட்கர் அலன் போ எழுதிய சிறுகதையை மைக் ஃப்ளானகன் சற்றே மாற்றியிருக்கிறார் என்று தெரிகிறது. தனது இரட்டைப் பிறவியான தங்கை, ஒரு நோயினால் இறந்துவிட அந்தத் தங்கையின் உடலை இரண்டு வாரங்கள் பாடம் செய்துவைக்கும் ஒரு அண்ணன் பற்றிய கதை இது.
ஆனால் இந்தக் கதையை மைக் ஃப்ளானகன் எடுக்கவில்லை. ஒரு மிகப்பெரிய முதலாளியின் குடும்பத்தில் அவரது வாரிசுகள் மிக மர்மமாகவும் கோரமாகவும் இறந்துகொண்டே வருகிறார்கள். அந்த முதலாளி அதை எப்படித் தடுக்கிறார் என்பதே மைக் ஃப்ளானகன் எழுதியிருக்கும் கதை என்று தெரிகிறது. ஆனால் ஒரிஜினல் கதையைப் போல் இதிலும் இரட்டையர்கள் (ஒரு ஆண் - ஒரு பெண்) இருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. எனவே, இது எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.
இந்த சீரீஸ் மைக் ஃப்ளானகனுக்கு மிகப்[பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. காரணம், திடும் திடும் என்று பயமுறுத்தக்கூடிய தடாலடியான திகில் (jump scares) காட்சிகளை மைக் ஃப்ளானகன் நம்புவதில்லை. மாறாக அழுத்தமான கதையை எழுதி, அந்தக் கதை மூலமாகவேதான் இதுவரை அறியப்பட்டுவருகிறார். இந்தப் பாணியில் திகில் கதைகள் எடுப்பவர்கள் உலகிலேயே மிகக் குறைவு. இதனால் மைக் ஃப்ளானகன் மீது திரை ரசிகர்களுக்கு அலாதியான ஒரு தனிப்பட்ட அன்பு உண்டு.
மீண்டும் திரைப்படம்: இந்த வெப் சீரீஸுக்குப் பிறகு மைக் ஃப்ளானகன் நீண்ட காலம் கழித்துத் திரைப்படம் ஒன்றை இயக்கப்போகிறார். ஸ்டீஃபன் கிங் எழுதிய ‘Life of Chuck’ என்கிற ஒரு சிறுகதையை மையமாகக் கொண்டு அந்தத் திரைப்படம் இருக்கிறது. இதில் லோகியாக ‘மார்வெல்’ படங்களில் நடித்த டாம் ஹிட்டில்சனும் ‘ஸ்டார் வார்ஸ்’ படங்களில் லூக் ஸ்கைவாக்கராக நடித்த மார்க் ஹாமில்லும் நடிக்கிறார்கள். இதுவும் திகில் படமாகவேதான் இருக்கப்போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைக் ஃப்ளானகன் இயக்கிய படங்களும் வெப் சீரீஸ்களும் அவரது மனதுக்குள் ஆழமாகப் புதைந்திருக்கும் பல்வேறு விதமான கதைகளையும் பிறர் எழுதியிருக்கும் கதைகளைத் தனது பார்வையில் எப்படி நமக்குச் சொல்கிறார் என்பதையும் விளக்குகின்றன. அவரது படங்களையும் சீரீஸ்களையும் ஒருமுறை பாருங்கள். அதன்பின் அவை கொடுக்கும் வித்தியாசமான அனுபவம் புரியும்.
தனது நாற்பத்தைந்து வயதுக்குள் 8 திரைப்படங்கள் மற்றும் 5 முழுநீள வெப் சீரீஸ்களை எடுத்திருக்கும் மைக் ஃப்ளானகன் உலகின் சிறந்த கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் படவேண்டியதில்லை. எடுத்துக்கொண்ட திரைப்பட வகையில் அவர் போல் அழுத்தமாகவும் ஆழமாகவும் கதாபாத்திரங்கள், காட்சிகளை எழுதி எடுத்தவர்கள் குறைவே. ‘திகில்’ என்றால் திரை ரசிகர்களுக்கு இவர் பெயர் அவசியம் நினைவுக்கு வந்தே தீரும்.
- rajesh.scorpi@gmail.com