

அட்டக்கத்தி இயக்குநர் ரஞ்சித்தும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படத்தில் மீண்டும் கைகோத்திருக்கிறார்கள். தங்கள் முதல் படத்தில் வெற்றி பெற்று முத்திரை பதித்த கூட்டணி ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி.
“காகிதக் கப்பல் கடலுல கவுந்துடுச்சா, காதலுல தோத்துட்டு கன்னத்துல கைய வைச்சிட்டான்” எனக் காதல் தோல்வியைச் சொல்லும் கானா பாலாவின் பாடலில், பின்னணியில் ஒலிக்கும் டிரம்ஸும் கிதாரும் பாடலுக்கு மேற்கத்திய வண்ணம் தருவது புதுமை.
கானா பாலா பாடியுள்ள “இறந்திடவா”, சென்னைவாழ் எளிய மக்களின் இசையான கானாவுக்குச் சமர்ப்பணம். இடையில் ஒலிக்கும் பறை இசையின் அதிரலும் அதை அழுத்தமாகச் சொல்கிறது.
சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ள “நான் நீ”, இனிய மென் மெலடி. சந்தோஷ் நாராயணன் முத்திரையை உணர முடிகிறது. வரிகள் “தாபப் பூவும் நீதானே, பூவின் தாகம் நீதானே” என உணர்ச்சிகளைப் புதிதாகப் பேசுகின்றன. பாடலை எழுதியிருப்பவர் உமா தேவி என்ற புதிய பெண் பாடலாசிரியர்.
பிரதீப் குமார் பாடியுள்ள “ஆகாயம் தீப்பிடிச்சா” பாடலில், அவரே இசைத்துள்ள கிதார்களின் மீட்டல் காதலின் வலியைச் சோகமாக மீட்டிச் செல்கிறது. நாயகன் காளி யின் காதலுக்கான தீம் இசையைத் தந்திருப்பது தி ஸ்டுடியோ ஆர்கெஸ்ட்ரா ஆஃப் சிட்னி.ஹரிஹரசுதன் பாடியுள்ள “மெட்ராஸ்” என்ற முதல் பாடல் அமர்க்களமும் அதிரடியும் கலந்தது.
அட்டக்கத்தியில் எளிமையான பாடல்கள் மூலம் ரசிக்க வைத்த பாடல்களைத் தந்த இந்தக் கூட்டணி, இந்த முறை அதற்கு ஈடாகப் பாடல்களைத் தந்ததாகச் சொல்ல முடியவில்லை.