

உலகெங்கும் திரைப்படங்களில் பல கில்லாடிகள் தோன்றி இருக்கிறார்கள். அவர்கள் எடுத்துக்கொள்ளும் திரைப்பட வகை (Genre) என்பதில் அவர்களே கில்லிகளாக விளங்குவார்கள். தங்களுக்கு முன்னர் அதே திரைப்பட வகையில் இருந்த மாஸ்டர்களின் மேதைமையை அடியொற்றி, ஆனால் சொந்தமாகச் சிந்தித்து, தங்களுக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டு அதில் பட்டையைக் கிளப்பி வந்திருக்கிறார்கள். அப்படித் தற்காலத்தில் ஹாரர் என்னும் திகில் ஜானருக்காகவே பிறந்து வந்தவர் என்று மைக் ஃப்ளானகனை (Mike Flanagan) குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இவரை ஜீனியஸ் என்று சொல்லமாட்டேன். ஆனால் தேர்ந்த திறமைசாலி என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஏனென்றால் இவர் எடுக்கத் தொடங்கிய திரைப்படங்கள், வெப் சீரீஸ்கள் (இப்போது வெப் சீரீஸ்களில்தான் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்) ஒவ்வொன்றாகப் பெயர் வாங்கிவரும்போது, திடீரென்று சுவாரஸ்யமே இல்லாமல் எதையாவது, எப்போதாவது எடுத்துவைப்பது இவர் வழக்கம். ஆனால் அப்படிப்பட்டவை மிகக்குறைவுதான். இன்னும் சில வருடங்கள் சென்றபின்னர் மைக் ஃப்ளானகனை துல்லியமாகக் கணிக்க இயலும்.
எனவே இம்முறை ஒரு குறிப்பிட்ட வெப் சீரீஸ் இல்லாமல், மைக் ஃப்ளானகனின் படைப்புகளைப் பற்றிப் பார்க்கலாம். அவற்றின்மூலம் மைக் ஃப்ளாகனைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். சுருக்கமாகச் சொன்னால் இந்த அத்தியாயம் மைக் ஃப்ளானனின் ஹாரர் ஸ்பெஷல்’ என்று வைத்துக்கொள்ளலாம்.
நடுங்க வைத்த தொடக்கப் படங்கள்: திரைப்படக் கலையை முறையாகப் படித்த மைக் ஃப்ளானகன் எடுத்த முதல் படம் ‘ஆப்சென்டியா’ - Absentia (2011). திகில் படமான இதை உங்களில் சிலர் பார்த்திருக்கக்கூடும். ஓரளவு பரவலாகப் பேசப்பட்ட படமும்கூட. பல வருடங்களாகக் காணாமல் போன கணவனை இறுதியில் இறந்துவிட்டதாக நம்பத் தொடங்கும் ஒரு மனைவி, அவளுடைய காதலரான ஒரு போலீஸ்கார், அவளுடன் வாழ வரும் தங்கை ஆகிய மூவரைப் பற்றியும் இவர்களது வீடுகளுக்கு அருகே இருக்கும் ஒரு சுரங்கப்பாதை பற்றியும் விரிந்து செல்லும் ஓர் அமானுஷ்யமான படம். படம் பற்றி இவ்வளவுதான் சொல்லமுடியும்.
இந்தப் படம் சரியாகப் போகாவிட்டாலும் ஓரளவு பேசப்பட்ட படம். ஆனால் இதற்கு அடுத்த படம்தான் மைக் ஃப்ளானகனைப் பிரபலம் ஆக்கியது. அதுதான் ‘ஆக்யூலஸ்’ - Oculus (2013. இந்தப் படம் வந்த புதிதில், தமிழ் நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் பரவலாக இதுபற்றிப் பேசினார்கள். உலகம் முழுதுமே அப்படித்தான் படம் குறித்துப் பேசினார்கள். வித்தியாசமான கதைக்களம் கொண்ட அமானுஷ்யமான படம் இது.
மைக் ஃப்ளானகன் தான் முன்னர் எடுத்த ஒரு குறும்படத்தை வைத்து, அவரே எடுத்த முழுநீளப் படம். ஒரு கொடூரமான பெரிய கண்ணாடி பற்றிய படம். அந்தக் கண்ணாடி, அதை வைத்திருப்பவர்களை எப்படியெல்லாம் தூண்டி வன்முறைக்கு உள்ளாக்குகிறது - இதனால் ஒரு சிறுவன் எப்படி அந்தக் கண்ணாடியின் அமானுஷ்யத்தால் பாதிக்கப்பட்ட தந்தையைச் சுட நேர்ந்தது - அதனால் எப்படி அவனது அக்காவைப் பிரிந்து மனநல விடுதிக்குச் செல்ல நேர்ந்தது - அவர்கள் இருவரும் தனித்தனியே வளர்வது - பத்து வருடங்கள் கழித்து அந்த அக்கா அந்தக் கண்ணாடியைக் கண்டுபிடித்து அந்தக் கண்ணாடிதான் பெற்றோர் இறந்ததற்குக் காரணம் என்று நிரூபிக்க நினைத்து அதை வாங்குவது - பிரிந்த தம்பியுடன் மீண்டும் ஒன்று சேர்வது - இருவரும் இணைந்து கண்ணாடியைச் சோதிப்பது - அதனால் என்ன நடந்தது என்பது பற்றிய படம். கடந்த காலம் - நிகழ்காலம் என்று நான் - லீனியராகச் சொல்லப்பட்ட கதை. உலகெங்கும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
நயன்தாராவுக்கும் பிடித்த ‘ஹஷ்’ - இதன்பின்னர் மைக் ஃப்ளானகன், தனது மனைவி கேட் சீஜெலுடன் இணைந்து எழுதி, மைக் ஃப்ளானகன் இயக்கிய ‘ஹஷ்’ (Hush) என்கிற படம் 2016இல் வெளிவந்தது. அந்தப் படம் தமிழில் நயன்தாரா நடித்து ‘கொலையுதிர்காலம்’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அதை இயக்கிய சக்ரி, இதே ‘ஹஷ்’ படத்தை இந்தியில் ‘Khamoshi’ என்று தமன்னா - பிரபுதேவா ஜோடியை வைத்து எடுத்தார். இரண்டு படங்களுமே சரியாகப் போகவில்லை. ஆனால் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்பட்ட ‘ஹஷ்’ படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படத்துக்கு முன்னரே மைக் ஃப்ளானகன் இயக்கியிருந்த ‘பிபோர் ஐ வாக்’ (Before I wake), தாமதமாக 2016இல் வெளியானது. அதே வருடத்தில் மைக் ஃப்ளானகனின் அடுத்த படம் ‘வீஜா: ஆரிஜன் ஆஃப் ஈவில்’ (Ouija: Origin of Evil) வெளியானது. இந்தப் படமும் தமிழ் ரசிகர்களுக்கு ஓரளவு பரிச்சயமானதே. இது 2014இல் வெளிவந்த Ouija படத்தின் முந்தைய பாகம் (Prequel). முதல் பாகத்தை விடவும் நல்ல பெயர் வாங்கிய படம் என்ற பெருமையைப் படம் பெற்றது.
விலங்கிடப்பட்ட மனைவி: மைக் ஃப்ளானகன் அடுத்து இயக்கிய படம் ‘ஜெரால்ட்ஸ் கேம்’ (Gerald's Game) (2017). ஒரே ‘லொகேஷ’னில்தான் பெரும்பாலும் படம் எடுக்கப்பட்டிருக்கும். தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ள, ஒதுக்குப்புறமான ஒரு ரிசார்ட்டுக்கு ஒரு தம்பதி வருகின்றனர்.
திடீரென்று கணவன் இதயம் நின்று இறந்துவிட்டபின், படுக்கையில் கைகால்கள் கைவிலங்கால் பிணைக்கப்பட்டு இருக்கும் மனைவி அனுபவிக்கும் உளவியல் கலந்த ‘சர்வைவல்’ போராட்டம் இப்படம். இது பல வருடங்களுக்கு முன்னர் புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டீவன் கிங் எழுதிய கதை. இந்தப் படமும் நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வந்த படமே. பலராலும் பாராட்டப்பட்டது. ஒரே வீடு என்பதால் அங்கங்கே திகிலைக் கூட்ட மைக் ஃப்ளானகன் வைத்திருக்கும் அம்சங்கள் நன்றாகவே இருக்கும்.
இணையத் தொடரில் குதித்தார்! - இந்தப் படத்தையும், மைக் ஃப்ளானகனின் முதல் படமான Absentia படத்தையும் பார்த்திருப்பவர்களுக்கு இரண்டும் ஒரே மாதிரியான கதையாகத் தோன்றக்கூடும். இரண்டு படங்களுக்கும் சில காட்சித் தொடர்புகள் உள்ளன என்பது என் கருத்து. இரண்டையும் பார்த்தால் தெரியும்.
இந்தப் படத்துக்குப் பின்னர்தான் தீவிரமாக மைக் ஃப்ளானகன் இணையத் தொடர்களின் பக்கம் குதித்தார். அப்படி அவர் எடுத்த வெப் சீரீஸ்களில் முதல் இரண்டு, அட்டகாசமானவை. மிகவும் அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கும். மூன்றாவது, கிளைமேக்ஸ் மற்றும் சில இடங்கள் தவிர நன்றாக இருக்கும். நான்காவதோ மிகவும் சாதாரணம். ஐந்தாவதை இப்போது எடுத்துக்கொண்டிருக்கிறார்.
உலகின் முதல் துப்பறியும் கதையை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் எட்கர் அலன் போ (இவர் பற்றி நமது சினிமா ரசனை புத்தகத்தில் விரிவான அத்தியாயம் ஒன்று உண்டு) எழுதிய கதையை முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கும் சீரீஸ் இது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மைக் ஃப்ளானகன் எடுத்த இந்த சீரீஸ்கள் பற்றி அடுத்த கட்டுரையில் மிக விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன்னர் தனது முதல் வெப் சீரீஸை இயக்கிய பின் அவர் எடுத்த ஒரு படம் முக்கியமானது. அந்தப் படத்துக்குப் பின் மைக் ஃப்ளானகன் திரைப்படங்கள் பக்கம் வரவே இல்லை. முழுமூச்சாக வெப் சீரீஸ்களில் குதித்துவிட்டார்.
அவர் எடுத்து 2019இல் வெளியான அந்த இறுதியான படம் ‘டாக்டர் ஸ்லீப்’ (Doctor Sleep) . இதுவும் ஸ்டீபன் கிங்கின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதே. ‘திகில் பல்கலைக்கழக’மாக விளங்கும் மைக் ஃப்ளானகனின் இணையத் தொடர்கள் குறித்து கட்டுரையில் விரிவாக அலசுவோம்.
- rajesh.scorpi@gmail.com