

உங்க முதல் படமான ‘பூவிலங்கு’ 1984இல் ரிலீஸ் ஆச்சு. அதற்குப் பிறகு பல வருடங்களாகியும் ‘டாப் ஹீரோ’ என்கிற லேபிள் உங்களுக்குக் கிடைக்கலியே? - ‘டாப் ஹீரோ’ என்கிற பட்டத்தைச் சூட்டுவது வியாபாரிகள்தான். ரசிகர்கள் மத்தியில் எனக்குனு ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கு. அது போதும். இன்னைக்கு நம்பர் ஒன்னுன்னு சொல்றவரை நாளைக்கு நம்பர் பத்துன்னு சொல்ல வியாபாரிங்க தயங்க மாட்டாங்க. நடிப்புக்கு நல்ல ஸ்கோப் இருக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்கிறேன். நல்ல நடிகன்கிற ‘லேபிள்’ போதும்.
சக ஹீரோ ஒருவர் நடிக்கும் படத்தில் ‘ஆக்டிங் ஸ்கோப்’ உள்ள கதாபாத்திரத்தை உங்களுக்கு அளித்தால் ஏற்று நடிப்பீங்களா? - இரண்டு கதாநாயகர்கள் படத்தில் நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனா நான் ஏற்கெனவே குறிப்பிட்ட மாதிரி சில வியாபாரப் புள்ளிகள் அந்த ரெண்டு பேரில் ஒருத்தருக்கு ஏதாவது ‘காம்ப்ளக்ஸ்’ ஏற்படுத்திட்டுதான் இருப்பாங்க. யாருடைய பெயர் முதல்ல வரணும் என்பதிலே பிரச்சினை தொடங்கும். என்னைப் பொறுத்தவரை என்னைவிட சீனியர் ஹீரோவின் பெயர் டைட்டில் முதலில் வர தாராளமா ஒப்புக்கொள்ளுவேன்.
ஆனா மத்தவங்களும் இப்படி இருக்கணுமே. ரெண்டு ஹீரோ படங்கள் சிலவற்றில் நான் நடித்தபோது எனக்கு அதிலே போதிய பப்ளிசிட்டி கொடுக்கலைன்னு என் ரசிகர்கள் வருத்தப்பட்டாங்க. பல வெற்றிப் படங்கள், வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்தும் ஏன் அந்தப் பட விளம்பரங்களிலே இருட்டடிப்பு செய்யுறாங்கன்னு எனக்கும் தோணிச்சு. அதனாலே ஒரு படத்தின் வெற்றியோ தோல்வியோ நாம மட்டுமே கதாநாயகனாக இருந்து சுமக்கலாமேன்னு படுது.
நீங்கள் எதிர்பார்த்து ஓடாத படங்களைப் பற்றி.. அதற்கு முக்கிய காரணம் ரிலீஸான காலகட்டம். பெரிய நடிகர் நடித்த படம் வெளியாகும்போது என் படமும் ரிலீசானால் சில சங்கடங்கள் வரும். இப்போ கோத்ரேஜ் பீரோன்னா கண்ணை மூடிட்டு வாங்கிடுவாங்க. வேற பிராண்டுன்னா யோசிச்சுச் சீர்தூக்கிப் பார்த்து, நல்லா இருக்கான்னு உறுதிசெய்து விட்டுத்தான் வாங்குவாங்க.
அந்த மாதிரி நான் சொன்ன உதாரணத்தில் பெரிய நடிகரின் படம் திருப்தி தராமல் இருந்து, என் படம் பிடிச்சிருந்தா அது ஹிட் ஆகும். தவிர முதல் இரண்டு வாரங்களுக்கு எப்படியும் படத்தை ஓட்டுவது என்கிற உறுதி விநியோகஸ்தருக்கும் தியேட்டர்காரங்களுக்கும் இருக்கணும். ‘இதயம்’, ‘புது வசந்தம்’ ஆகிய படங்கள்கூட ‘லேட் பிக்கப்’ தான். பிறகு ஓஹோன்னு வரவேற்பு கிடைச்சது.
அஜித், விஜய் போன்ற இளைய கதாநாயகர்கள் எல்லாம் வந்துட்டாங்க. இதனால் உங்க வாய்ப்புகள் குறையும்னு நினைக்கிறீங்களா? - அந்த ஸ்டேஜை நான் தாண்டிட்டேன். ‘இதயம்’ மாதிரி சில படங்களைத் தவிர குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தில்தான் அதிகம் நடிக்கிறேன். எனக்கு மூணு குழந்தைகள்னு எல்லோருக்கும் தெரியும். எனக்கு வரும் பெரும்பாலான ரசிகர்கள் கடிதம்கூட ‘அன்பு சகோதரரே'ன்னுதான் தொடங்குது. அதனால நீங்க குறிப்பிட்டவங்களையும் என்னையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கக் கூடாது.
அப்படியென்றால் அவங்களைப் பற்றின உங்கள் விமர்சனத்தைச் சொல்லலாமே? - விஜய்க்கு சண்டையும் டான்ஸும் நல்லா வருது. ‘பூவே உனக்காக’வில் நல்லா செய்திருந்தார். பெர்ஃபார்மென்ஸில் இன்னும் கவனம் செலுத்தினால் நல்லா முன்னுக்கு வருவாரு. அஜித்குமார்கிட்ட ஒரு கவர்ச்சி இருக்கு. அவரும் நல்லா வருவாருன்னு நினைக்கிறேன்.
உங்கக் கூட நடிச்ச சக கலைஞர்களில் சிறப்பா நடிக்கக் கூடியவரென்று யாரைச் சொல்வீங்க?
ரேவதி.