

ஒடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்துவரும் இன்றைய காலகட்டத்தில் வெப் சீரீஸ்கள் பார்வையாளர்களின் விருப்பத்துக்குரிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இவை பெரும்பாலும் த்ரில்லர் வகையைச் சேர்ந்தவையே. ஆனால், அது சினிமா த்ரில்லர் வகையிலிருந்து மாறுபட்டது. மனித உணர்வுகளையும் இந்த த்ரில்லர் அம்சத்தையும் சரியாகக் கையாண்டுள்ள வெப் சீரீஸ்கள் குறைவு. இதற்கு முன்னுதாரணமான ஒன்றுதான் ‘மணி ஹெய்ஸ்ட்’. இதன் இயக்குநர் அலெக்ஸ் பினா.
ஸ்பெயினில் பணம் அச்சடிக்கும் நாணயச் சாலை ஒன்றைக் கொள்ளையடிக்கச் செல்லும் ஒரு கும்பலின் கதைதான் இது. ‘ல காசா தே பாப்பல்’ (காகிதக் கட்டிடம்) என்கிற தலைப்பில் ஸ்பானிய மொழியில், ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற ‘ஆண்டனா 3’ என்கிற தொலைக் காட்சியில் முதலில் வெளியானது. வெளியான இரண்டு வருடங்களுக்குப் பிறகு நெட்பிளிக்ஸ் தளத்தில் இடம்பெற்றதும் சர்வதேசக் கவனம் பெற்றது. உலகின் பல மொழிகளிலும் தமிழ் உட்படத் தற்போது இந்த வெப் சீரீஸ் கிடைக்கிறது.
ஸ்பெயின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த வெப் சீரீஸுக்கு இருக்கும் ஒரு சர்வதேசத்தன்மை, இதன் பெரிய வெற்றிக்குக் காரணம் எனலாம். டோக்கியா கதாபாத்திரம் வழி இந்த வெப் சீரிஸின் கதை திறக்கிறது. அவளது குரலே இதன் கதையைக் குறுக்கிட்டுச் சொல்கிறது. அவள் வழி புரொபஸர் கதாபாத்திரம் அறிமுகமாகி உலகத்தின் மிகப் பெரியக் கொள்ளைத் திட்டம் தொடங்குகிறது. இந்தக் கதாபாத்திர வடிவமைப்புகளில் ஏதேனும் ஒன்றுடன் பார்வையாளன் தன்னைப் பொருத்திப் பார்க்க முடியும். தனித்த இயல்பு கொண்ட நகரங்களின் பெயர்களைக் கதாபாத்திரங்கள் தங்களுக்குத் தாங்களே வைத்துக்கொள்கின்றன.
பெர்லின் பெயர் கொண்டவன் அந்தக் கொள்ளைக் கும்பலின் கட்டளைத் தளபதி ஆவது பொருத்தமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்திடம் சக கொள்ளையர்கள் பின்பாதியில் ஜனநாயகத்தைக் கோரும்போது அது நிராகரிக்கப்படுகிறது. துள்ளிக்குதிக்கும் அந்தப் பெண்ணுக்கு டோக்கியோ என்று பெயர். இந்தப் பெயர்களை அவர்களின் இயல்புடன் பொருத்திப் பார்க்க முடிகிறது.
ஒரு நாணயச் சாலையைக் கொள்ளையடிக்கப் போகும் கதையில், அது ஒரு கொள்ளை என்கிற மேற்பரப்புக்குப் பின்னால் பார்வையாளர்களை உணர்வுபூர்வாகத் தக்கவைப்பதற்காகக் கிளைப் பூக்கள் இந்தக் கதையில் பல உள்ளன.
நாணயச் சாலைக்கு வெளியே காதலுக்காகக் காத்திருக்கும் தனியே வாழும் 40 வயது அம்மாவான காவல் துறை அதிகாரி, பெண்களிடம் தள்ளியே இருக்கும் வசீகரமான புரொபசஸர், தன்னைவிட மூத்த டோக்கியோவிடம் உன்மத்தமாக இருக்கும் ரியோ, டென்வரிடம் காதல்வயப்படும் நாணயச் சாலை இயக்குநரின் காதலி என உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களின் வழி பல தருணங்களை நம்பகத்தன்மையுடன் உருவாக்கியதால் இந்த சீரீஸ் வெற்றிபெற்றுள்ளது. இத்தருணங்கள் ஆண்-பெண் உறவு குறித்த கேள்விகளை எழுப்பக்கூடியவையாகவும் உள்ளன.
இந்த நாணயச் சாலைக் கொள்ளைத் திட்டத்தின் ஒவ்வொரு திருப்பத்தையும் புரொபஸர் தீர்மானித்துள்ளார் என்பதை டோக்கியோவின் குரல் நான்-லீனியராக வெளிப்படுத்தும்போது பார்வையாளருக்குக் கிடைக்கும் சுவாரசியம் திரைக்கதை அமைப்பின் வெற்றிகரமான உத்திக்குச் சான்று.
வாழ்க்கையின் மோசமான தோல்விக்குப் பிறகு ஓர் அற்புதம் அந்தத் தெருமுனையின் திருப்பத்தில் நமக்காகக் காத்திருக்கிறது என்று சொன்னால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அந்த நம்பிக்கையை இந்த வெப் சீரீஸின் ஒவ்வொரு எபிசோடும் நமக்குச் சொல்கிறது.