கோடம்பாக்கம் சந்திப்பு: பேயுடன் டுயட்
‘மொட்டை’ ராஜேந்திரனை ஒரு காட்சியிலாவது நடிக்க வைக்க விரும்புகிறது கோடம்பாக்கம். இந்த கேமியோ வேடங்களுக்கு வெளியே அவர் தனக்கு ஏற்ற வேடங்களில் நடித்துவருகிறார். அறிமுக இயக்குநர் அருண்.சி என்பவர் இயக்கியிருக்கும் ‘ஆறாம் திணை’ என்ற படத்தில் பெண் என்று நினைத்து பேயைக் காதலிக்கும் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறாராம். விஜய் டி.வி தொகுப்பாளர் வைஷாலினி நாயகியாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் தனக்கு பிரேக் கிடைக்கும் என்கிறார் ‘மொட்டை’ ராஜேந்திரன். ஜீவாவின் நாயகி
ஜீவா தற்போது ‘கீ’, ‘கலகலப்பு-2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 29-வது படத்தை இயக்க இருப்பவர் ‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி. காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில் ஜீவாவின் ஜோடியாக நடிக்க ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படப் புகழ் ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகியிருக்கிறார். ஷாலினி பாண்டே தற்போது ஜி.வி.பிரகாஷுடன் ‘100% காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தயாரித்து நாயகனாகவும் நடிக்கவுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதில் அவருக்கு ஜோடி தமன்னா. இதனிடையே விஷால் நடித்து முடித்துள்ள ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதில் அவருக்கு ஜோடி ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடித்துமுடித்திருக்கும் படம் ‘காலா’. படப்பிடிப்பு முடிந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அதன் டப்பிங் பணிகள் தொடங்கப்படாமல் இருந்ததாம். இந்நிலையில் தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சென்னையிலுள்ள நாக் ஸ்டூடியோவில் டப்பிங் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. ரசிகர்களுடனான சந்திப்பு முடிந்துவிட்ட நிலையில் இன்றுமுதல் தனது காட்சிகளுக்கு டப்பிங்பேச இருக்கிறாராம் ரஜினி. ரஜினிக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ‘கபாலி’க்கு இசை அமைத்த சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ராணா உள்ளிட்ட பலர் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. தர்புகா சிவா இசை அமைக்கும் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில் மூன்றாவது சிங்கிள் டிராக்கை ஆங்கிலப் புத்தாண்டு அன்று வெளியிட இருப்பதாக கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘விசிறி’ என்று தொடங்கும் இப்பாடலை தாமரை எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளாராம்!
ஏ.எல்.விஜய் இயக்கும் ‘கரு’ படத்தில் பெண் மையக் கதாபாத்திரமாக நடித்துவரும் ‘பிரேமம்’ பட நாயகி சாய் பல்லவிக்குத் தமிழில் வாய்ப்புகள் அதிகரித்துவருகின்றன. சூர்யாவின் 36-வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி, கதாநாயகனுக்கு இணையாக தனது கதாபாத்திரம் அமைந்திருப்பதாலும் சூர்யா தனக்குப் பிடித்தமான நடிகர் என்பதாலும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறியிருக்கிறார். இதற்கிடையில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.
