

இ
யக்குநர், எழுத்தாளர், செயற்பாட்டாளர் அம்ஷன் குமார் பல குறிப்பிடத்தக்க ஆவணப் படங்களை எடுத்துள்ளார். அவரது ‘எல்லைகள் கடந்த இசை’ என்ற தவில்மேதை யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி பற்றி இவர் எடுத்த ஆவணப்படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. ஏற்கெனவே கி.ராஜநாராயணன் எழுதிய ‘கிடை’ குறுநாவலைத் தழுவி ‘ஒருத்தி’ திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படம் புதுவை அரசின் சிறந்த திரைப்பட விருதைப் பெற்றது.
தமிழகத்தில் வணிக சினிமாவுக்கு அப்பாற்பட்டுத் திரைப்படங்கள் பெற வேண்டிய வளர்ச்சி பற்றி அதிகம் எழுதியும் மாற்றுப் படங்கள் எடுத்தும் தொடர்ந்து இயங்கி வருபவர். முக்கியமான தலித் அரசியலைப் பேசும் இவரது சமீபத்திய படமான ‘மனுசங்கடா’ மும்பை, கோவா, கெய்ரொ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுப் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது. சென்னைத் திரைப்பட விழாவிலும் கலந்துகொண்ட இந்தத் திரைப்படம் குறித்து அம்ஷன் குமாரிடம் பேசியதிலிருந்து…
ஆவணப் படங்கள் எடுப்பதற்குத் தமிழ்நாட்டின் பல கிராமங்களுக்குப் பயணித்திருக்கிறேன். அந்தப் பயணங்களில், தலித் மக்களிடம் அவர்களது வசதிக்குறைபாடுகள் பற்றி எப்போதும் விசாரிப்பேன். கிராமத்தில் பள்ளிக்கூடங்கள், மருத்துவம், தண்ணீர் போன்ற வசதிகள்தாம் இல்லாமல் இருக்கும் என நாம் நினைப்போம். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் சொன்னது, மயான வசதியின்மை குறித்துதான். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இறந்தவர்களை உரிய மரியாதையுடன் புதைக்கவே அவர்களுக்குச் சிக்கல்.
ஏன் இந்தச் சம்பவத்தைப் படமாக்கத் தீர்மானித்தீர்கள்?
நான் ஏற்கெனவே ‘ஒருத்தி’ என்றொரு படம் எடுத்தேன். அதுவும் தலித் பெண்ணொருத்தி கல்வியின் மூலம் தன் சமூகத்துக்கு நல்லது வந்துவிடும் என நினைப்பாள். ஆனால், கல்வி, அதிகாரம் கிடைத்தாலும் தலித் மக்களின் நிலையில் மாற்றம் வரவில்லை. இறந்தவர்களைக்கூட உரிய மரியாதையுடன் அவர்களால் புதைக்க முடியவில்லை. இது இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்தப் படத்தை எடுப்பதற்கு என்ன மாதிரியான சிக்கல்களை எதிர்கொண்டீர்கள்?
இந்தக் கதையை சென்னையிலே செட் போட்டு எடுத்திருக்கலாம். ஆனால், கிராமப்புறத்தில் படமாக்கினால்தான் இயல்பாக இருக்கும் என நினைத்தோம். பிரச்சினைகள் வரக் கூடும் எனச் சிலர் எச்சரித்தார்கள். எல்லாவற்றையும் மீறி எடுத்தோம். எதிர்பார்த்த அளவு பிரச்சினைகள் எதுவும் வரவில்லை.
படத்தின் காட்சிகள் முழுவதிலும் க்ளோஸ்-அப் காட்சிகளைத் தவிர்த்திருக்கிறீர்கள்?
இந்தப் படம் ஒரு தனி மனிதனின் பிரச்சினையைப் பேசவில்லை. தனி மனிதன் மூலமாக ஒரு சமூகப் பிரச்சினையைப் பேசுகிறது. பொதுவாகத் தமிழ் சினிமாக்களில் அது சமூகப் பிரச்சினையைப் பேசினாலும் நாயகனை மையமாக வைத்தே நகரும். ‘மனுசங்கடா’ அப்படிப்பட்டதல்ல. அதனால்தான் க்ளோஸ்-அப் காட்சிகளைத் தவிர்த்தேன்.
நடிகர்கள் பெரும்பாலானோர்கள் புதியவர்கள் இல்லையா?
இந்தப் படத்துக்கு துடிப்பான இளைஞர்கள் தேவைப்பட்டார்கள். இதில் நடித்த எல்லோரும் நாடகத் துறையில் அனுபவம் பெற்றவர்கள். இந்தப் படத்துக்காகத் தனியாகப் பயிற்சிப் பட்டறையும் நடத்தினோம்.
குக்கர் விசில், நாய் குறைக்கும் சத்தம், தொழுகை ஓசை போன்றவற்றையும் பின்னணி இசையாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?
தனியாக டப்பிங் பேசும்போது உணர்ச்சிகள் விடுபட வாய்ப்பும் உள்ளது. அதனால் இதில் தமிழில் அரிதாகப் பயன்படுத்தப்படும் ஸ்பாட்- ஒலிப்பதிவைப் பயன்படுத்தியிருக்கிறோம். இம்மாதிரி ஸ்பாட் ஒலிப்பதிவு செய்யும்போது, அந்தக் காட்சிகளில் உள்ள ஓசைகளையே பயன்படுத்துவதால் பார்வையாளர்களுக்கு அந்தக் காட்சியை இன்னும் நெருக்கமாக உணரவைக்க முடியும். உதாரணமாக, காலையைக் குறிப்பதற்காக குக்கர் ஓசையைப் பயன்படுத்தியிருக்கிறோம்.
சமூகப் படமான இதில் கனவுக் காட்சி ஒன்றின் மூலம் அதை வேறொரு திசைக்கும் நகர்த்தியிருக்கிறீர்கள்...
ஆமாம். இந்தப் படம் ஒரு பக்கம் தலித்துகளின் போராட்டத்தைச் சொன்னாலும் இன்னொரு பக்கம் மனித இழப்பை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் சொல்கிறது. தன் தந்தை இறந்ததை மகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதற்காகத்தான் அந்தக் கனவுக் காட்சி. நீதிமன்றத்தில் போய், உத்தரவு வாங்கி நம்பிக்கையுடன் வந்துவிடுகிறான். ஆனால், ஊர்த் தெருவுக்குள் நுழைந்ததும் நம்பிக்கையெல்லாம் போய்விடுகிறது. இதைத்தான் அந்தக் கனவுக் காட்சி சித்திரிக்கிறது.
உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் ‘மனுசங்கடா’ கலந்துகொண்டுள்ளது. அந்த அனுபவம் குறித்து?
‘கிராமம்ன்னா எல்லாரும் ஒன்றாகக்கூடி பொங்கல் கொண்டாடுவாங்கன்னு நினைச்சீயா’ என்று ஒரு வசனம் இந்தப் படத்தில் இருக்கிறது. அதுபோலத்தான் எல்லோரும் கேட்டார்கள். சிலர் தமிழ்நாட்டில் அப்படியாக இருக்கும் என்றார்கள். வட இந்தியாவில் தலித் ஒருவர் மீசைவைத்துக்கொண்டதற்காகவே கொல்லப்பட்டார் என்றேன். எகிப்தில் கெய்ரோ திரைப்படவிழாவில் ‘மனுசங்கடா’ குறித்து நுட்பமாகக் கேள்விகள் கேட்டார்கள். முக்கியமாகப் பெண் பார்வையாளர்கள்.
இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் ஒரு விதமான உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருக்கிறார்கள்?
தந்தை இறந்துவிட்டார். அவரது உடலை எடுத்துச் செல்ல வழி இல்லை. அதற்கு முன்பும் ஒருவரது தாய்க்கும் இதே நிலை ஏற்பட்டது. அவர்கள் கொந்தளிப்பாகத்தானே இருப்பார்கள். அது திட்டமிட்டுச் செய்ததுதான்.
இந்தப் படத்தைப் போராட்டம் எனக் கொண்டால், அது தோல்வியில் முடிகிறதே?
அதுதான் யதார்த்தம். ஆனால், இந்தத் தோல்வி நிரந்தரம் இல்லை. அதற்காகத்தான் கவிஞர் இன்குலாப் எழுதிய ‘மனுசங்கடா’ பாடல் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே எழுதிப் பிரபலமான இந்தப் பாடலில் இந்தப் படத்துக்காக சரணங்கள் சில வரிகள் சேர்த்து எழுதித் தந்தார். சென்னைத் திரைப்படவிழாவில் இப்படம் திரையிடப்பட்டபோது மறைந்த இன்குலாப்புக்கு நினைவஞ்சலி செலுத்துவதுபோல பாடல் முடியும்வரை காத்திருந்து அதன் பிறகே பார்வையாளர்கள் கலைந்து சென்றனர்.