

அறியாமல் செய்த தவறால் சீர் குலையும் தம்பியின் வாழ்வைத் தூக்கிநிறுத்த அண்ணன் செய்யும் தியாகம்தான் ‘அண்ணாதுரை’ (ஒற்றுப்பிழை எமதல்ல) படத்தின் கதை.
அண்ணாதுரையும் தம்பிதுரை யும் (விஜய் ஆண்டனி) இரட்டைச் சகோதரர்கள். காதலியின் மரணத் தைத் ஏற்க முடியாமல் மது போதையில் முழ்குகிறார் அண்ணாதுரை. அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவர் நல்லவர். உடற்கல்வி ஆசிரியரான இவரது தம்பியான தம்பிதுரை, குடும்பப் பொறுப்பை சுமக்கும் நல்ல பிள்ளை.
அண்ணனை இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள். தம்பிக்கோ உள்ளூரிலேயே திருமணம் முடிவாகிறது. இந்நிலையில் நண்பன் தொழில் தொடங்குவதற்காக (காளி வெங்கட்) வட்டிக்கு விடும் சேரன் ராஜிடம் கடன் வாங்கித் தருகிறார் அண்ணாதுரை. பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடி உருவாக, வருங்கால மாமனாரிடம் இருந்து தொகை யைப் பெற்று அண்ணன் வாங்கிய கடனை அடைக்கிறார் தம்பிதுரை.
இந்நிலையில் அண்ணா துரையால் நிகழும் எதிர்பாராத விபத்தில் ஒருவர் இறந்துவிட, அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கிறது. சிறையில் இருந்து திரும்பிவந்தால், தம்பிதுரை மிகப் பெரிய ரவுடியாக ஆகியிருக்கிறார். தம்பியின் அமைதி யான வாழ்க்கை தன்னால் தடம்மாறிவிட்டதை எண்ணி வருந்தும் அண்ணாதுரை, அதைச் சரிசெய்ய என்ன செய்கிறார் என்பதே மீதிக் கதை. பல படங்களில், பல காலமாக பயன்படுத்தப்பட்ட கதைக்களம், அதில் நம்பகத்தன்மையற்ற திரைக்கதைத் திருப்பங்கள், சுவாரசியமற்ற காட்சிகள் ஆகியவற்றால், ஆக்ஷன் கலந்த, உணர்வுபூர்வமான ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற தன் இலக்கை அடைவதில் கோட்டைவிட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜி.சீனிவாசன்.
தன் அம்மாவை அவமானப்படுத்திய மாமா வீட்டுக்குக் கோபத்துடன் செல்லும் அண்ணாதுரை, அங்கு அவரிடம் சமாதானமாகப் பேசுவது, தம்பிதுரையின் வேடத் தில் இருப்பது அண்ணாதுரைதான் என்ற உண்மையைத் தெரிந்துகொண்டே, தம்பிதுரையின் மாம னார் உதவுவது, பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பித்த பெண், போலீஸ் அதிகாரி ஆவது என்று ஆங்காங்கே சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் மட்டுமே கொஞ்சம் ரசிக்க வைக்கின்றன.
இரட்டைக் கதாபாத்திரங்களுக் கான வேறுபாட்டைக் காட்ட ஒரு விஜய் ஆண்டனி தாடி வைத்துக்கொண்டும் மற்றொருவர் அது இல்லாமலும் வருவதாக காட்டியிருப்பதில் எவ்வித தோற்றப் புதுமையும் இல்லை. ஆனால் விஜய் ஆண்டனி நடிப்புத்திறமையால் இதை ஈடு செய்துவிடுகிறார். அண்ணாதுரையாக, துக்கத்தை கச்சிதமாக வெளிப்படுத்தி பரிதாபம் கொள்ள வைக்கிறார். தம்பிதுரை வேடத்திலும் குறை சொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்.
நாயகிகளில் மஹிமா, நடிக்கக் கிடைத்த வாய்ப்பை ஓரளவு நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார். டயானா சம்பிகா வழக்கமான அழகும் குழந்தைத்தனமும் மிக்க நாயகி வேடத்துக்குத் தேவையானவற்றை சரியாகத் தருகிறார். ஜுவெல் மேரி, படத்தில் எதற்காக இருக்கிறார் என்றே தெரியவில்லை.
விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் அவரது பழைய பாடல்களை நினைவுபடுத்துகின்றன. பின்னணி இசை பரவாயில்லை. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்ப விஷயங்களில் குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை.
நாயகனின் இரட்டைக் கதாபாத்திர டெம்பிளேட்டுக்குள், தனது முந்தைய படங்களில் குடும்ப சென்டிமென்ட்டை மையமாக்கி வெற்றி கண்ட விஜய் ஆண்டனி, தனக்கு ஏற்ற திரைக்கதை பாணியை இதிலும் பின்பற்ற நினைத்தது, காட்சிகள், திருப்பங்களுக்கான தர்க்கங்களை வலுவாக அமைக்காதது ஆகிய மெத்தனமான காரணங்களால் ‘அண்ணாதுரை’ ஈர்க்க முடியாமல் போய்விடுகிறது.