

உளவுத்துறை காவல் அதிகாரிக்கும், முகநூலில் பெண்களுக்கு வலை வீசும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் 'திருட்டுப் பயலே 2'.
உளவுத் துறையில் தொலைபேசி ஒட்டுக் கேட்கும் பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் செல்வம் (பாபி சிம்ஹா). அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் ஆகியோரின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்பதின் மூலம், அவர்களது அன்றாட நடவடிக்கைகளை ரகசிய அறிக்கையாகத் தனது உயர் அதிகாரியிடம் கொடுப்பது இவரின் வாடிக்கையான பணி. மிக ரகசியமான இந்த வேலையைத் தனது சுய லாபத்துக்காகவும் பயன்படுத்தி பணம் சேர்க்கும் செல்வம், ஒட்டுக் கேட்கும் வேலையில் ஒருநாள் தனது மனைவி அகல்யாவின் (அமலா பால்) குரலைக் கேட்டு அதிர்ந்து போகிறார். முகநூல் வழியே பெண்களை மயக்கி, தன் பாலியல் வேட்கைக்கும் பணப் பறிப்புக்கும் அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் பால்கி (பிரசன்னா) என்பவனது வலையில் அகல்யா சிக்கித் தவிப்பது தெரிய வருகிறது. மனைவியை மீட்க அவர் என்ன செய்தார்? பால்கியை அவரால் நெருங்க முடிந்ததா என்பது மீதிக் கதை.
முதல் பாகத்தின் மையக் கருத்தான ‘எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் திருட்டுத்தனம்’ என்கிற ஐடியாவை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு, அடுத்தவர் கணினிக்குள் ஊடுருவித் தகவல்களைத் திருடுதல், அதை முறைகேடாகப் பயன் படுத்துதல், முகநூல் நட்பைப் பயன் படுத்தி அத்துமீறுதல் என நவீன தகவல் யுக வளர்ச்சியின் பக்க விளைவுகளைக் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருத்தி, திரைக்கதையைத் த்ரில்லர் ஆக்கிக் கதை சொல்லியிருக்கிறார் இயக் குநர் சுசி கணேசன்.
‘பணம், பவர், பெண், புகழ் ஆகியவற்றின் மூலம் யாரையும் நாம் வெற்றிகொள்ளலாம் என்கிறான் சாணக்கியன். அவன் இன்று இருந்திருந்தால் ஐந்தாவதாகப் போனையும் சேர்த்திருப்பான்’ என்று ‘எச்சரிக்கை’ விடுப்பதில் இருந்து தொடங்குகிறது படம்.
ஆனால், இரண்டு வில்லன்களுமே மாறி மாறி ஒருவரை ஒருவர் ஹேக் செய்துகொள்வதில் நடத்தும் தகவல் தொழில்நுட்ப யுத்தம், ஒரு கட்டத்தில் சலிப்பைத் தருகிறது. திரைக்கதையில் தேவையில்லாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் பாடல்களும் இரண்டாம் பாதியின் நீளமும் அயர்ச்சியைக் கொடுக்கின்றன. அதே போல் தகவல் வளர்ச்சி எல்லாவகையிலும் ஆபத்தானது எனும் ஒற்றைப் பரிமாணத்தை மட்டும் ஊதிப் பெரிதாக்கியிருப்பது இயக்குநரின் குறுகிய பார்வையைக் காட்டுகிறது.
இணையம் மூலம் பெண்களைத் தன் வலையில் வீழ்த்தும் பால்கியாக நடித்திருக்கும் பிரசன்னாதான், ‘ஷோ ஸ்டீலர்’. ‘கொஞ்சம் சிரிங்க பாஸ்’ என்று பாபி சிம்ஹாவிடம் அடிவாங்கிக்கொண்டே புன்னகையுடன் அவரை மிரட்டும் இடங்களில் எல்லாம் அசரடிக்கிறார் பிரசன்னா.
பால்கி, தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்வதாகக் காட்டப்படுகிறது. அவனுடைய செயல்பாடுகள் ஒருவித மான மனநோயாகச் சொல்லப்படுகிறது. அவன் ஏன் அப்படி ஆனான் என்பதற்குக் கதையில் அழுத்தமான காரணங்கள் இல்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்திருக்கும் வலுவான கதாப்பாத்திரத்தை அப்படியே அல்வா போல தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார் அமலா பால். குறும்பு நிறைந்த காதலியாகவும், பாசம் மிகுந்த மனைவியாகவும், கூடா நட்பில் சிக்கி திணறும்போதும், அதை வெளியே சொல்லாமல் உள்ளுக்குள்ளே மருகும்போதும் 'அட' போட வைக்கிறார்.
நேர்மையான போலீஸ் அதிகாரியாகக் கம்பீரம் காட்டும்போதும், தொலைப்பேசி உரையாடல்களை அம்பலப்படுத்தி தெனாவட்டு காட்டும்போதும், பால்கியிடம் கோபம் காட்டும்போதும் அசர வைக்கிறார் பாபி சிம்ஹா.
கதாபாத்திரங்களின் வாழிடம், பணியிடம் இரண்டையும், அவற்றின் வேலை மற்றும் தனிப்பட்ட ரசனையையொட்டி உருவாக்கிய கலை இயக்கம், அழகு உணர்ச்சியுடன் காட்சிப்படுத்த உதவி இருக்கிறது.
ஆதார் அட்டையைக் கட்டாயமாகி வரும் இந்தச் சமயத்தில், ‘பிரைவஸி’ என்று சொல்லப்படும் தனி நபர் உரிமையில், அரசு தலையிட்டால் என்னவெல் லாம் நடக்கும் என்பதைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் விறுவிறுப்பாகச் சொல்லி விழிப்புணர்வு ஊட்டிய விதத்தில் மனதைத் திருடிவிடுகிறார் இயக்குநர் சுசி கணேசன்.