

அனிமேஷன் என்பது எப்போதுமே பார்ப்பவர்களின் கவனத்தைக் கவரக்கூடியது. வால்ட் டிஸ்னியில் தொடங்கி இன்றுவரை இவ்வகைமையில் எவ்வளவோ படங்கள் வந்திருக்கின்றன. ‘அனிமேஷன் என்பது கார்ட்டூன்’ என்கிற சட்டகத்தை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உடைத்துக்கொண்டு வெளியேறிப் பல காலம் ஆகிவிட்டது. உயிரை உருக்கும் அனிமேஷன்கள் பல உண்டு.
இந்த ‘ஜான’ரின் சிறப்பியல்பு என்னவெனில், எடுத்துக்கொண்ட விஷயத்தை அனிமேஷனில் பகடி செய்வதற்கு எல்லையே இல்லை. படைப்புத்திறனுக்குச் சாத்தியங்களைக் கடலளவு விரித்து வைத்துள்ள அனிமேஷனில் முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும் பகடியாகவும் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு சீரீஸ் ‘டிஸ்என்சாண்ட்மெண்ட்’ (Disenchantment).
இந்தப் பதத்துக்கு ‘எதிர்பார்த்து ஏமாறுவது’ என்று பொருள். முன்னர் நமக்குப் பிடித்த ஒரு விஷயத்தைப் பற்றிய உண்மைகள் தெரியவந்ததும் அந்த விஷயத்தின் மீதான விருப்பம் ஒருவித ஏமாற்றமாக மாறிவிடுவதுதான் இந்த ‘டிஸ்என்சாண்ட்மெண்ட்’. சரித்திரக் காலத்தில் ஐரோப்பாவில் ‘Dreamland’ என்கிற ஒரு நாடு. இந்த நாட்டின் மன்னர் ஸாக் (Zog). பல வருடங்களாக மன்னராக இருந்து வருகிறார்.
அவருடையது ஒரு கொடுங்கோல் ஆட்சி. நாட்டில் ஏழைகள் தினமும் பல மணி நேரம் உழைத்தால்தான் உணவு கிடைக்கும் என்கிற சூழல். ஆனால் அது எதுவுமே மன்னருக்குத் தெரியாது. அவரைச் சுற்றியுள்ள ஜால்ரா கூட்டம் எதையும் அவரிடம் சொல்வதில்லை. எனவே தனது ஆட்சி, ட்ரீம்லேண்டின் சரித்திரத்திலேயே மிகப்பெரிய பொற்கால ஆட்சி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் ஸாக்.
கதாபாத்திரங்களின் காட்சி சாலை: மன்னர் ஸாக்குக்கு ஒரு மகள். வயது 19. அவள் பெயர் டியபீனீ. சுருக்கமாக பீன் (Bean). பீனுக்குப் பெரிய லட்சியங்கள் எதுவும் இல்லை. ஊருக்குள் இருக்கும் மதுபான விடுதியிலேயே நாள் முழுக்க இருக்கவேண்டும்; நன்றாக நடனமாடவேண்டும்; ஊர்சுற்றவேண்டும் என்பது மட்டுமே அவளது அபிலாஷை. ஸாக்குக்குப் பின் அரசியாக வேண்டும் என்றெல்லாம் அவள் நினைத்தே பார்ப்ப தில்லை.
ஸாக்குக்கோ தன்னுடைய மகள் இவ்வாறு இருந்தால் பிரச்சினை ஆகிவிடுமே, பிற மன்னர்கள் காறித் துப்பிவிடுவார்களே என்கிற பயம். இதனால் அவளை யாராவது ஒரு சோம்பேறி இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்துவிடவேண்டும் என்பது அவரது எண்ணம். அதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறார். மன்னர் ஸாக்குக்கு ஒரு மனைவி. அரசியாகிய அவளது பெயர் ஊனா.
அவளுக்கும் ஸாக்குக்கும் ஒரு குட்டி மகன் உண்டு. அவன் பெயர் டெரெக். ஜமக்காளத்தில் வடிகட்டிய சோம்பேறி. இந்த அரசாங்கத்துக்கு மந்திரி என்று ஒருவர் இருக்கவேண்டுமல்லவா? பிரதான அமைச்சராகப் பல வருடங்களாக ஒருவர் இருந்துவருகிறார். தொண்டு கிழவராகிய அவரது பெயர் ஆட்வால். அவருக்கு நிஜமாகவே மூன்று கண்கள் என்பது சிறப்புச்செய்தி. ஆனால் மன்னனிடம் தனது மூன்றாவது கண்ணை அவர் காட்டமாட்டார். அதனை ரகசியமாகப் பாதுகாத்து வருகிறார்.
ஸாக்கின் அரசாங்கத்தில் பிரதான மருத்துவர் என்றும் ஒருவர் உண்டு. எப்போது பார்த்தாலும் விதவிதமான மருந்துகளை ஒன்றாகக் கலக்கிப் பரிசோதனைகள் மேற்கொள்வதே அவரது வேலை. இவர்களைத் தவிர, ஒற்றைக் கண்ணுடன் சுற்றிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பெண் பூதம், மந்திரத்தால் பேசும் பன்றியாக மாற்றப்பட்ட வேற்று நாட்டு இளவரசன், எப்போதும் மன்னனுக்குச் சொம்பு தூக்கிக்கொண்டிருக்கும் இரண்டு ஜால்ராக்கள், நாட்டிலேயே மிகப்பெரிய மந்திரவாதி, மன்னனுக்கும் நாட்டுக்கும் எதிராகச் சதி செய்யும் மன்னனின் முன்னாள் முதல் மனைவி, சொர்க்கத்தில் அமர்ந்திருக்கும் கடவுள், அவரை எதிர்த்து நிற்கும் சாத்தான், மிகப்பெரிய தொழிற்சாலை வைத்திருக்கும் பயங்கரமான வில்லன் என்று ஏராளமான கதாபாத்திரங்களின் மாபெரும் காட்சி சாலை இத்தொடர்.
சந்திப்பும் சாகசங்களும்: இந்த சீரீஸின் பிரதானக் கதை என்னவென்றால், இளவரசி பீன், தங்க மனம் படைத்த எல்ஃபோ என்கிற ஓர் அப்பாவியையும் (உருவில் குறைந்த மனிதர்கள் - தேவதைக் கதைகளில் வருபவர்கள்) லூசி என்கிற ஒரு குட்டிச் சாத்தானையும் சந்திக்க நேர்கிறது. இந்த மூவரும் சேர்ந்து செய்யும் சாகசங்கள்தான் இத்தொடரின் முக்கியமான கதை. இவர்கள் செய்யும் சாகசங்களில் மேலே சொன்ன கதாபாத்திரங்கள் வந்து போவார்கள்.
அந்தச் சாகசங்களின் ஊடாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது. இந்த சீரீஸின் சிறப்பு என்னவென்றால், நாம் நடைமுறையில் பார்க்கும் அத்தனை பிரச்சினைகளும் இந்தச் சரித்திரக் காலக் கதையில் வருகின்றன. அவற்றை நகைச்சுவையான பகடி மூலம் அலுக்காத முறையில் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இந்த சீரீஸைப் பார்க்கையில் ஒரு தற்காலத் தன்மை எளிதில் வந்துவிடும்.
கூடவே சீரீஸில் வரும் ட்ரீம்லாண்ட் நாட்டுக்குள் அந்த நாட்டுக்கான விதிகள் இருக்கும். அந்த விதிகளைப் பற்றிக் கேட்டாலே சிரிக்கும் வகையில்தான் இருக்கும். கண் முன்னர் இருக்கும் அவ்வளவு அபத்தங்களையும் வாழ்க்கையில் முதன் முறையாக இளவரசி பீன் பார்க்க நேர்கிறது. அவளுக்கு அவையெல்லாம் அதிசயமாகவும் பரிதாபகரமாகவும் இருக்கின்றன. அவளுடன் பயணிக்கும் குட்டிச்சாத்தான் லூசியோ பல யுகங்களாக அத்தனையையும் பார்த்து வருபவன் என்பதால் அவனுக்கு எதுவுமே அதிசயமாக இல்லை. மாறாக, தனது கண் முன்னால் வருபவர்களை வாயில் போட்டு விழுங்கிவிடவேண்டும் என்பதே அவனது விருப்பமாக இருக்கிறது.
இயக்குநரால் புகழ்பெற்ற தொடர்: இந்த இருவருடனும் பயணம் செய்யும் எல்ஃபோவுக்கோ அவனது தங்கமான குணத்தால் எப்போதும் தன்னை வருத்திக்கொண்டு அடுத்தவர்களுக்கு உதவி செய்தே ஆகவேண்டும் என்கிற லட்சிய மனம். இத்தனை வேறுபாடுகளைக் கொண்ட மூவரும் சேர்ந்து பல சாகசங்கள் செய்யும்போது, பார்க்கும் நமக்கு அது அலுக்காத ஒரு ஜாலி பயணமாக இருக்கிறது.
இந்த சீரீஸை உருவாக்கியவர் மாட் க்ரோய்னிங் (Matt Groening). உலகெங்கும் பிய்த்துக்கொண்டு 1989இல் இருந்து இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கும் ‘சிம்ப்சன்ஸ்’ என்கிற அனிமேஷன் தொடரை உருவாக்கியவர். அவரே ஒரு தேர்ந்த கார்ட்டூனிஸ்ட். ‘சிம்ப்சன்ஸ்’ தொடரிலும் தற்காலத் தன்மை ஏராளமாக உண்டு. அதில் வரும் பழைய எபிசோடுகளைப் பார்த்தால் கூட இன்று நடப்பதுபோலவே எழுதப்பட்டிருக்கும் என்பதே அதன் சிறப்பு.
அதேபோல் ‘டிஸ்என்சாண்ட்மெண்ட்’ தொடரையும் உருவாக்கியிருக்கிறார் மாட் க்ரோய்னிங். இவரது பெயராலேயே இந்தத் தொடர் புகழ்பெற்றது. இவரோடு சேர்ந்து ஜாஷ் வெய்ன்ஸ்டீன் (Josh Weinstein) என்கிற இன்னொரு திறமைசாலியும் இணைந்து இந்த சீரீஸில் பணிபுரிந்திருக்கிறார். ஜாஷ் பற்றி இணையத்தில் தேடிப்பாருங்கள். எத்தனையோ படைப்புகளில் இவரது திறமை தெரியும்.
இதுவரை டிஸ்என்சாண்ட்மெண்ட் தொடரில் மூன்று சீசன்கள் வந்திருக்கின்றன. நான்காவது இறுதி சீசன் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஒளிபரப்பாகிறது. இறுதி சீசன் வருமுன்னரே cult என்று சொல்லத்தக்க வகையில் பிரபலமாகிவிட்டது இந்த சீரீஸ். இந்த சீரீசை உருவாக்கிய ‘சிம்ப்சன்ஸ்’ புகழ் மாட் க்ரோய்னிங்கின் இன்னொரு சீரீஸ் ‘Futurama’. அதுவும் அனிமேஷனே. அதுவும் மிகவும் புகழ்பெற்றது.
உண்மையில் ‘டிஸ்என்சாண்ட்மெண்ட்’ சீரீஸின் சில எபிசோட்களில் ‘Futurama’ சீரீஸின் சில கதாபாத்திரங்கள் வந்துபோவார்கள். அதாவது இரண்டும் ஒரே யூனிவர்ஸ். ‘டிஸ்என்சாண்ட்மெண்ட்’ தொடரை நீங்கள் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணலாம்.
- rajesh.scorpi@gmail.com