

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘கதாநாயகன்’, ‘சின்ன மாப்ளே’ தொடங்கி தற்போது படப்பிடிப்பில் இருந்துவரும் ‘மகளிர் மட்டும்’ வரை தனது முத்திரை நகைச்சுவை வசனங்களால் உயிரூட்டி வரும் கிரேஸி மோகனின் (1993இல் வெளியான நேர்காணல்) நேர்காணல் இது.
நீங்கள் இப்போது திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ‘மகளிர் மட்டும்’ படத்தின் கதையில் குறிப்பிடத்தக்க அம்சம் ஏதாவது உண்டா? - ‘மகளிர் மட்டும்’ அடிப்படையில் நகைச்சுவை படமாக இருந்தாலும் பெண் விடுதலையின் எல்லைகளைச் சுட்டிக்காட்டுகிறது. அலுவலகம் செல்லும் பெண்களின் கஷ்டங்கள், பிரச்சினைகளை ரேவதி, ஊர்வசி, ரோகிணி ஆகியோர் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்கள் மூலம் காட்டுகிறோம்.
‘இப்படி இருந்தால் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பலவிதங்களில் வசதியாக இருக்குமே' என்று சில தீர்வுகளையும் பார்வைக்கு வைக்கிறோம். மொத்தத்தில் படம் முழுவதும் மெசேஜ் நகைச்சுவையுடன் தூவப்பட்டிருக்கிறது.
முதல் முறையாக திரைக்கதை எழுதுகிறீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது? - படப்பிடிப்பின்போது நிறைய வசனங்களை மாற்றுவதும் சேர்ப்பதும் - ஏன் அப்போதுதான் எழுதுவதும்கூடத் திரையுல கில் சகஜம். ஆனால் ‘மகளிர் மட்டும்’ கதை, வசன ஸ்கிரிப்ட் முழுவதும் தயாரான பிறகுதான் படப்பிடிப்பே தொடங்கியது.
இயக்குநராகும் ஆர்வமோ, வாய்ப்போ உண்டா? - ஆறு மாதங்களுக்கு முன் ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், அப்போது இந்த வருடம் முழுவதும் திரைக்கதை, வசனம் ஆகிய விஷயங்களில்தான் முழுக் கவனமும் செலுத்த வேண்டும் என்று முடிவுசெய்திருந்ததால் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை. இப்போது பல படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்திருக்கிறது. திரைக்கதை அமைத்த பிறகு இயக்கு நராகும் ஆர்வம் அதிகமாகி இருக்கிறது என்பது உண்மை.
‘சின்ன மாப்ளே’ படம் விமர்சனம் ஒன்றில் 'மூளையைக் கழற்றி ஆணியில் மாட்டி விட்டால் படத்தைச் சிரித்து ரசிக்கலாம்' என்று எழுதி இருந்தார்கள். அதை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்? - இரண்டு விதமாகவும் எடுத்துக்கொள்ள லாம் என்பதுபோல் விமர்சனம் இருந்தால் அதை நான் எனக்குச் சாதகமாக எடுத்துக்கொள் வேன். குழந்தையைப் பார்த்து ‘செல்லக் கடன்காரா' என்று சொல்வதுபோல்தான் இதுபோன்ற விமர்சனங்கள்.
உங்களுக்கு ‘சென்டிமென்ட்’கள் உண்டா? - நிறைய உண்டு. எல்லாம் தெய்விகம் சம்பந்தப்பட்டவை. என் கைப்பையைப் பாருங்கள். எல்லாவித சாமி படங்களும் தவறாமல் இருக்கும். திரையுலகில் நான் காலூன்றியதே தெய்வாதீனமாகத்தான். டெல்லியில் தொடர்ந்து நாடகங்களை நடத்திவிட்டு அன்றுதான் சென்னை வந்திருந்தேன்.
மறுநாள் திருவனந்தபுரத்துக்குக் கிளம்பிப் போக வேண்டும். நல்ல பேண்ட் சட்டைகள் எல்லாம் அழுக்காகி விட்டன. அவற்றை டிரை கிளீனிங்க்கு போட்டுவிட்டு லுங்கியும் அழுக்கு சட்டையுமாக நடந்து கொண்டிருந்தபோது எங்கள் ஏரியாவில் உள்ள மயானத்தில் ‘சத்யா’ பட ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
படத்துக்காக தலையெல்லாம் மாற்றிக்கொண்டு வித்தியாசமான கெட்டப்பில் இருந்த கமலை முதலில் அடையாளமே தெரியவில்லை. அவர் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு அழைத்தார். எங்களது ‘மிடில் கிளாஸ் மர்டர்’ நாடகத்தின் நூறாவது காட்சிக்குத் தலைமை தாங்க அவரை அழைத்தேன்.
உடனே ஒப்புக்கொண்டார். தலைமை தாங்கிய கமல் ஐந்தாறு நாட்கள் கழித்து தன்னை வந்து பார்க்கச் சொன்னார், ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்திற்கு வசனம் எழுதும் அருமையான வாய்ப்பு கிடைத்தது.
திரையுலகில் உங்கள் குறிக்கோள் என்ன? - நீண்டகால குறிக்கோள் எல்லாம் கிடையாது. மூளையைக் கழற்றி வைக்காமலேயே சிரிக்க வைக்க வருங்காலத்தில் முயல்வேன்.