

2013
-ல் வெளியான ‘ஷாஹித்’ திரைப்படத்தில், வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி என்ற உண்மைக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காகத் தேசிய விருது பெற்றவர் நடிகர் ராஜ்குமார் ராவ். சமீபத்தில், ‘போஸ்: டெட்/அலைவ்’ என்ற வலைத் தொடரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படிச் சிலருடைய வாழ்க்கையைத் திரையில் கொண்டுவரும் உண்மை கதாபாத்திரங்களில் நடிப்பது அவருக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ராஜ்குமார்.
இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருக்கும் ‘நியூட்டன்’ திரைப்படத்தில் இவரது நடிப்புக்காகச் சமீபத்தில் இரண்டு ‘ஆசிய பசிஃபிக் ஸ்க்ரீன்’ விருதுகளைப் பெற்றிருக்கிறார். தற்போது நடித்திருக்கும் ‘போஸ்: டெட்/அலைவ்’ வலைத்தொடருக்காக, 13 கிலோ எடை ஏற்றி நடித்திருக்கிறார். இந்தத் தொடர் ‘ஏஎல்டிபாலாஜி’ (ALTBalaji) என்ற செயலியில் வெளியாகியிருக்கிறது.
“இந்த மாதிரி உண்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும்போது ஒரு பொறுப்புணர்வு தேவைப்படுகிறது. ஏனென்றால், மக்கள் உங்களது பணியைக் கவனிப்பார்கள். உங்கள் நடிப்பை ஒப்பிட்டுப்பார்த்துத் தீர்மானிப்பார்கள். அவர்களுக்கு அந்த உண்மையான மனிதரைத் தெரியும் என்பதால் இதைச் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அத்துடன், அவர்கள் அந்த மனிதருடன் பழகியிருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்கிறார் ராஜ்குமார் ராவ்.
“உண்மையைச் சொல்ல வேண்டுமானால், உண்மையான கதாபாத்திரங்களில் நடிப்பது ஒரு நடிகனாக எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஏனென்றால், உங்களுக்கு முன்னால் நிறைய ஆய்வு ஆவணங்கள் இருக்கும். ஒருவரைத் திரையில் மறு உருவாக்கம் செய்வது அற்புதமான அனுபவம். ‘நீங்கள் அவரைப் போலவே இருக்கிறீர்கள்’ என்று யாராவது சொல்லும்போது மகிழ்ச்சியாகவும் பரவசமாகவும் இருக்கும்” என்கிறார் அவர்.
- கனி