Published : 21 Dec 2017 07:43 PM
Last Updated : 21 Dec 2017 07:43 PM

விடைபெறும் 2017: தனித்து நின்ற படங்கள்

தமிழில் 2017-ல் 200-க்கு மேற்பட்ட நேரடிப் படங்கள் வெளியாகிவிட்டன. ஆண்டின் கடைசி இரண்டு வெள்ளிக்கிழமைகளில் தலா இரண்டு படங்களாவது வெளியாக இருக்கின்றன. வழக்கம்போல் இந்த ஆண்டிலும் ஏதேனும் ஒரு காரணத்துக்காகவாவது ‘நல்ல படம்’ என்று வகைப்படுத்தத் தகுதியான படங்கள் மொத்தமாக வெளியான படங்களின் 10 சதவீதம் அல்லது அதைவிடக் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் புதிய திறமைகளின் வருகையாலும் பழையவர்கள் சிலரின் விடாமுயற்சியாலும் பல ஆண்டுகளுக்கு நினைவுகூரப்பட வேண்டிய படங்கள் இந்த ஆண்டும் வெளியாகியுள்ளன. ஆண்டு நிறைவை எட்டப்போகும் தருணத்தில் அவற்றை நினைவுகூரும் தொகுப்பு இது:

மாநகரம்

வேலைக்காகச் சிற்றூரிலிருந்து சென்னைக்கு வரும் இளைஞனையும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் கோபக்கார இளைஞனையும் மையமாக வைத்து ஒரு அருமையான த்ரில்லர் படத்தைக் கொடுத்திருந்தார் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ். வெவ்வேறு சூழ்நிலைகள், பல வகைப்பட்ட கதாபாத்திரங்கள், பல்வேறு முடிச்சுகள், திடீர் திருப்பங்கள் நிறைந்த சிக்கலும் சுவாரசியமும் நிறைந்த திரைக்கதையின் வழியே பெருநகர வாழ்க்கையின் ஆபத்துகளையும் அதையும் தாண்டிச் சுடர்விடும் மனிதநேயத்தையும் பதிவுசெய்தது இந்தப் படம். படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் சென்னையை வன்முறைக் களமாகச் சித்தரிப்பதாக இருந்தாலும் இதே நகரத்தில்தான் முன்பின் தெரியாதவர்களுக்காக எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளும் நல் உள்ளங்களும் இருக்கின்றன என்றும் சொன்ன வகையில் தனித்து நின்றது ‘மாநகரம்’.

பாகுபலி 2

கற்பனையிலும் படமாக்கத்திலும் தென்பட்ட பிரம்மாண்டத்தால் உலக அரங்கில் இந்திய சினிமாவுக்கு மகுடம் சூட்டிய ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டத்துக்குப் புதிய இலக்கணம் வகுத்தது. குறிப்பாக, இடைவேளைக்கு முன்னதாக வரும் போர்க்காட்சியின் பிரம்மாண்டம் ரசிகர்களை வியப்பில் வாய்பிளக்கவைத்தது. இந்தப் பாகத்தில் தொங்கலில் விடப்பட்ட கேள்விகளுக்கு விடைகிடைத்ததோடு கதையம்சமும் மேம்பட்டிருந்தது.

குறிப்பாக, ராஜமாதா சிவகாமி மற்றும் தேவசேனாவின் பாத்திரங்களை அழுத்தமாகப் படைத்ததும் அந்த இரண்டு பெண் பாத்திரங்களை எதிரெதிர் துருவங்களாக நிறுத்தி சட்டம் மற்றும் தர்மத்துக்கிடையிலான முரணைக் கோடிட்டுக் காட்டிய விதமும் எதிர்பாராத ஆச்சரியங்கள். ‘கட்டப்பா பாகுபலியைக் கொன்றது ஏன்’ என்ற கேள்விக்குத் தரப்பட்ட பதிலும் இறுதிப் போர்க்காட்சியும் அவந்திகா கதாபாத்திரத்தைக் காற்றில் விட்டதும் ஏமாற்றம் அளித்தன. இருந்தாலும் ஒட்டுமொத்தப் படமாக எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தது ‘பாகுபலி 2’

லென்ஸ்

இன்றைய இணைய யுகத்தில் நம் அந்தரங்கம் பொதுக் கண்காட்சியாக எப்போது வேண்டுமானலும் மாறிவிடக்கூடிய ஆபத்தை இப்படிப்பட்ட கதைக்குத் தேவையான துணிச்சலுடனும் நேர்மையுடனும் காத்திரமாகப் பதிவுசெய்த படம் ‘லென்ஸ்’. இத்தகைய கீழ்த்தரமான இணையப் பாலியல் குற்றங்களைச் செய்பவர்கள் நம்மிடையே மிகவும் இயல்பாக உலவுபவர்கள் என்பதையும் நாம் அனைவரும் இவர்களது இணையச் செய்கைகளின் நுகர்வோராக இருக்கிறோம் அல்லது நுகர்வுப் பொருளாக்கப்படும் ஆபத்தில் இருக்கிறோம் என்ற எச்சரிக்கை மணியை உரக்க அடித்த விதத்திலும் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது ‘லென்ஸ்’. இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கி எதிர்மறையான மையப் பாத்திரத்தில் நடித்தும் இருந்த ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் துணிச்சலும் சமூக அக்கறையும் பாராட்டத்தக்கவை.

ஒரு கிடாயின் கருணை மனு

ஒரு கிராமத்தில் நடக்கும் திருமணத்தை அடுத்து அதற்காக ஒட்டுமொத்தக் கிராமமும் குலதெய்வக் கோவிலுக்குக் கிடாவெட்டச் செல்லும்போது, நடக்கும் ஒரு விபத்தால் அந்தக் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வைத்து கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்வியலையும் உண்மைக்கு மிக நெருக்கமாகச் சித்தரித்த படம் அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. ‘உண்மைக்கு நெருக்கமான’ என்றாலே ஆவணத்தன்மை, சோகக் காட்சிகள், வன்முறை என்றிருக்க வேண்டியதில்லை என்று நிரூபித்த படம் இது. கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தித்தனமும் குசும்பும் இயல்பான நகைச்சுவையை வாரி வழங்க அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டாலும் ஆபத்து நேர்கையில் யாரையும் கைவிட்டுவிடாதவர்களாக இருப்பது உணர்வுபூர்வமான விதத்தில் மனதைத் தொட்டது.

விக்ரம் வேதா

குற்றவாளிகளை அழித்து சமுதாயத்தைக் காப்பாற்றுபவனாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் காவல்துறை அதிகாரி ஒருவன், ஒரு ரவுடியின் மூலமாகத் தனது துறையில் மலிந்திருக்கும் ஊழலையும் தன் சித்தாந்தத்தின் ஓட்டைகளையும் உணர்ந்து திருந்தும் படம். விக்ரமாதித்யன்-வேதாளம் என்ற தொன்மத்தின் கதைவடிவத்துடன், மெதுவாக நகரும் திரைக்கதையும் ரசிகர்களுக்கு சுவாரசியம் அளிக்க முடியும் என்று நினைக்கவைத்த படம். தமிழ் வெகுஜன சினிமாவில் என்கவுண்டர் கொலைகளுக்கு எதிரான காத்திரமான குரலைப் பிரச்சார நெடியின்றிப் பதிவுசெய்த அரிதான படம் என்ற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

தரமணி

சமூகம் எவ்வளவு நவீனமடைந்திருந்தாலும் பெண்களைத் தங்களின் உடைமையாகக் கருதும் ஆண்களின் மனநிலை மாறாமல் இருப்பதையும் முதிர்ச்சியற்ற ஆண் மனத்தின் சந்தேக நிழல் பெண்ணுக்கு ஏற்படுத்தும் வலிகளையும் நகரத்து நவீன வாழ்க்கையின் மையமாகத் திகழும் தரமணியைக் கதைக்களமாக வைத்துச் சொன்ன படம். ஐ.டி. துறையில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கும் பெண், சிகரெட், மது அருந்தும் பெண் ஆண்களுக்கு எளிதான பாலியல் இலக்கு என்ற கற்பிதத்தை உடைத்தாள் இந்தப் படத்தின் நாயகி ஆல்தியா. ஆண்கள் என்ன தவறு செய்தாலும் பெண்கள் அவர்களை ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்பது போன்ற சித்தரிப்பும் பல பெண்கள் ஆண்களுக்கு எளிதில் வசமாகும் நிலையில் இருக்கிறார்கள் என்ற கருத்துக்கு இடமளித்த இரண்டாம் பாதிக் காட்சிகளும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இடையிடையே இயக்குநர் ராமின் குரலில் வெளிப்பட்ட சமூக அவலங்களைப் பகடி செய்யும் வசனங்கள், தேவையற்ற இடைச்செருகல் என விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டாலும் ரசிகர்களை அவை கவர்ந்தன.

மகளிர் மட்டும்

நடுத்தர வயதை எட்டிவிட்ட மூன்று பெண்கள் பள்ளிப் பருவத்துடன் துண்டிக்கப்பட்ட தங்களது நட்பைப் புதுப்பித்துக்கொள்ளும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம் ‘மகளிர் மட்டும்’. இந்தப் படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் தென்பட்ட புரட்சிகர அம்சங்கள் திணிக்கப்பட்டவையாகத் தெரிந்தன. ஆனால், மற்ற மூன்று பெண் கதாபாத்திரங்களின் படைப்பும் அவர்களுக்கு இடையிலான நட்பு சித்தரிக்கப்பட்ட விதமும் இதைப் பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் முக்கிய இடத்தைப் பெற வைக்கின்றன. அதோடு பெண்களின் அன்பும் தியாகமும்தான் குடும்பம் என்ற அமைப்பைத் தாங்கி நிற்கிறது என்பதையும் அதற்கான அங்கீகாரத்தை மறுப்பதோடு அவர்களை மேலும் மேலும் அடிமைப்படுத்தும் ஆண்களின் சுரணையின்மையையும் பதிவுசெய்தது இந்தப் படம். பெண்களுக்கிடையிலான நட்பும் அவர்களது அன்பு செலுத்தும் குணமும் ஜிப்ரானின் பின்னணி இசையுடன் சேர்ந்து கண்களைப் பனிக்க வைக்கும் காட்சிகளாக உருப்பெற்றதும் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.

அறம்

நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகையை மையமாகக்கொண்ட படத்தில் பஞ்ச் வசனங்கள், சாகசக் காட்சிகள் எதுவும் இல்லாமல் எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மனதை உருக்கும் விதத்தில் பேசிய முதல் படம். விண்ணுக்கு ஏவுகணைகளைச் செலுத்தி, பெருமிதம் கொள்ளும் நாட்டில், மூடாமல் விடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளைக் காப்பாற்றத் தேவையான தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை என்பதைப் போட்டுடைத்த இந்தப் படம் பல போராட்டங்களைக் கடந்து இயக்குநராகியுள்ள கோபி நாயினாரின் முதல் படம். நீராதாரங்கள் கார்ப்ரேட்டுகளுக்குத் தாரை வார்க்கப்படுவதால் மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட சமூக அவலங்களும் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தன. நல்லெண்ணம் கொண்ட மாவட்ட ஆட்சியர் மையக் கதாபாத்திரமாக இருந்தாலும் பிரச்சினைக்கான தீர்வும் மக்களிடமிருந்தே உதித்து அவர்களாலேயே செயல்படுத்தப்படுவதாகக் காண்பித்தது, இதை உண்மையான ‘மக்களின் சினிமா’ ஆக்குகிறது.

தீரன் அதிகாரம் ஒன்று

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்கள் கோரும் தீவிரமான ஆராய்ச்சியும் கடுமையான உழைப்பும் செலுத்தப்பட்டு எடுக்கப்பட்ட அரிதான படங்களில் ஒன்று ‘தீரன் அதிகாரம் ஒன்று’. 1990-களின் இறுதியிலும் புத்தாயிரத்தின் தொடக்கத்திலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் உட்படப் பலரது வீடு புகுந்து கொள்ளையடித்துக் கொலைகளைச் செய்த குழு காவல்துறையிடம் பிடிபட்டதைப் பற்றிய படம் இது. குற்றச் சம்பவங்களும் குற்றவாளிகளின் பின்னணியும் காவல்துறை நடைமுறைகளும் அவர்கள் இதுபோன்ற பணிகளில் எதிர்கொள்ளும் சவால்களும் இழப்புகளும் விளக்கப்பட்டிருந்த விதம் இயக்குநர் ஹெச்.வினோத்தின் அபாரமான உழைப்பைப் பறைசாற்றின. குற்றவாளிகளின் பின்னணி சித்தரிக்கப்பட்ட விதம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ஒட்டுமொத்தமாகக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதாக இந்தப் படம் விமர்சிக்கப்பட்டது. இதையடுத்துச் சில வசனங்களும் காட்சிகளும் நீக்கப்பட்டன.

அருவி

அறிமுக இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமனின் ‘அருவி’, தமிழ் சினிமா இதுவரை தொடத் தயங்கிய எய்ட்ஸ் நோய் பற்றிப் பேசியது. அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கற்பிதங்களை உடைத்ததோடு அவர்களுக்குத் தேவையான அன்பையும் அரவணைப்பையும் கோரும் காத்திரமான குரலை முன்வைத்தது. இப்படி ஒரு கதைக் களத்தில் சமூக அவலங்கள் நகைச்சுவை நிரம்பிய பகடிக் காட்சிகளாக மாற்றப்பட்ட விதம் நம்மைச் சிரிக்கவைத்ததோடு அந்த அவலங்களில் நம் பங்கைப் பரிசீலித்துக்கொள்ளவும் தூண்டியது. அனைத்துக் கீழ்மைகளையும் கடந்து அன்பும் நேசமும் மனிதர்களை இணைக்கும் புள்ளிகளாக இருப்பதைப் பதிவுசெய்ததற்காகவும் இந்தப் படம் இந்தப் பட்டியலில் இடம்பெறுகிறது. முற்றிலும் புதிய நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் வைத்துக்கொண்டு இப்படி ஒரு படம் கொடுத்தது பெரும் சாதனை.

மேலும் சில படங்கள்

இந்தப் பட்டியலில் இடம்பெறாவிட்டாலும் கவனம் ஈர்த்த மேலும் சில படங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் கடுகு- ஒரு எளிய மனிதன், சூழ்நிலையால் நாயகனாக உருமாறுவதைச் சித்தரித்த படம்.

பண்டிகை - சென்னையில் நிழலுலகில் நடக்கும் மல்யுத்தப் பந்தயங்களை அசலாகக் காட்சிப்படுத்திய படம்.

எட்டு தோட்டாக்கள்- ஒரு தொலைந்துபோன துப்பாக்கியின் பயணத்தினூடாக ஆதரவற்ற முதிய ஆண்களின் வலியைப் பதிவுசெய்த படம்.

நிசப்தம்- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை மனதை உலுக்கும் வகையில் காட்சிப்படுத்திய படம் (சீனப் படத்தின் அப்பட்டமான காப்பி என்று விமர்சிக்கப்பட்டது).

ரங்கூன் – வட சென்னையில் பர்மா காலனியில் வாழும் மக்களின் வாழ்வியலைக் காட்சிப்படுத்திய படம்

ப. பாண்டி - ஒரு முதியவர் தன் பழைய காதலியைத் தேடிச் செல்லும் உணர்வுப்பூர்வமான பயணத்தை அழகியலுடனும் மிகை உணர்ச்சிகள் இல்லாமலும் சொன்ன படம்.

அவள் - பயத்தில் அலற வைத்த காட்சிகளாலும் உயர்தரமான படமாக்கத்தாலும் அசத்திய திகில் படம்.

துப்பறிவாளன் – தொடக்கம் முதல் இறுதிவரை சஸ்பென்ஸைத் தக்க வைத்த துப்பறிவுக்கதை. ஒரு நட்சத்திர நாயகனுக்கான சமரசங்கள் இல்லாமல் இருந்ததும் பாராட்டத்தக்கது.

வெருளி- சாலைகளில் இருக்கும் சிறு குழிகளால் பல உயிர்கள் பலியாகும் முக்கியப் பிரச்சினையை மையமாக வைத்த திரில்லர் படம். மரகத நாணயம் - அமானுஷ்ய சக்திகளை மாறுபட்ட விதத்தில் சித்தரித்து அதன் மூலம் கலகலப்பூட்டிய ஃபேண்டசி படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x