ஆடுகளத்திலிருந்து மேடைக் களம்! - பூஜா தேவரியா நேர்காணல்

ஆடுகளத்திலிருந்து மேடைக் களம்! - பூஜா தேவரியா நேர்காணல்
Updated on
2 min read

“நா

ன் கேட்கும் கதைகள், தேர்வு செய்யும் கதாபாத்திரங்களை வைத்து சீரியஸான கலைப் படங்களில்தான் இவர் நடிப்பாரோ என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனால், நான் அதிகம் விரும்புவது காமெடி கலந்த லைட் சப்ஜெக்ட் கதைகளைத்தான். அதை ஏற்பது எளிதான விஷயம் அல்ல. காமெடி கதாபாத்திரங்கள் பண்ணும்போது எல்லாவற்றையும் கடந்து, பொது அறிவு சார்ந்த விஷயங்களில் தெளிவாக இருந்தால்தான் அது சாத்தியம். இதற்கு நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என கண்கொத்திப் பாம்பாக உலகத்தைக் கவனித்துக்கொண்டிருக்க வேண்டும்’’ எனும் பூஜா தேவரியா, “படங்களின் எண்ணிக்கைக்காக நடிப்பது சரியாக இருக்காது” என அழுத்திக் கூறும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்.

அவருடன் பேசியதிலிருந்து…

தமிழில் உங்களது அடுத்தடுத்த படங்களின் தேர்வு தாமதமாகவே இருக்கிறதே, ஏன்?

அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவசரமில்லாமல் நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்போம் என்பதுதான் முதல் காரணம். இங்கே புதிதாக நடிக்க வருபவர்களில் சிலர் தொடர்ந்து முகம் தெரிய வேண்டும், அதன் வழியே ஒரு இடத்தைப் பிடித்துவிடலாம் என்று உடனுக்குடன் வரும் கதைகளில் எல்லாம் நடித்துவிட நினைக்கிறார்கள். நான் அந்த ஓட்டத்தில் இல்லை. இது எனக்குச் சரியாக இருக்கும் என்று தோன்றும்போது அதில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘இறைவி’ ஆகிய மூன்று படங்களுமே அந்த அடிப்படையில் ஒப்புக்கொண்டவைதான். எனக்குக் கதாபாத்திரம், கதை, குறிப்பாக அந்தப் படத்தின் குழு ஆகியவை ரொம்பவே முக்கியம். இது படங்களின் தேர்வுக்கு மட்டுமல்ல, கதை பிடித்திருந்தால்தான் நாடகங்களில் நடிக்கவும் ஒப்புக்கொள்வேன்.

தமிழில் அடுத்த படத்தில் நடித்து முடித்துவிட்டீர்களாமே?

ஆமாம். படப்பிடிப்பு முடிந்தது. இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. ‘குற்றமே தண்டனை’ மாதிரி, வேறொரு கோணத்தில் திரில்லர் வகைப் படம் இது. தலைப்பை விரைவில் படக் குழுவினர் அறிவிப்பார்கள். அறிமுக இயக்குநர் விவேக் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அவர் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உள்ள சியாட்டில் நகரில் கணினித் துறையில் பணியாற்றி வருகிறார். இவர்கள் ஒவ்வோர் ஆண்டும் அங்கே நாடகங்கள் நடத்துவார்கள். இந்த முறை படம் எடுத்துள்ளனர். படத்தில் சார்லி, விவேக் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படம் முழுக்க அமெரிக்காவில் நடக்கிறது.

நீங்கள் நடிக்கும் கன்னடப் படம் எந்த நிலையில் உள்ளது?

‘கதையொண்டு சுருவாகிடே’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் கன்னடப் படம் அது. கதை ஒன்று உருவாகிறது என்பது அதன் தமிழ் அர்த்தம். படத்தின் இயக்குநர் ஷென்னா ஹெக்டே. இவர் ‘0-41’ என்ற தலைப்பில் மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். அதை இந்தியா முழுவதும் அனுராக் காஷ்யப் வெளியிடவிருக்கிறார். படத்தின் ஹீரோ திகாந்த் மஞ்சேல். என்னோட கதாபாத்திரம் நன்றாகப் பேசப்படும். படத்துடைய எல்லாக் காட்சிகளும் லைவ் ரெக்கார்டிங்தான். டப்பிங் வேலையே இல்லை. எனக்கு எப்பவுமே நானே டப்பிங் கொடுக்க வேண்டும் என்று விரும்புவேன். நம்முடைய 50 சதவீத நடிப்பு, குரலில்தான் இருக்கிறது என்பது என் நம்பிக்கை. அதனால்தான் நான் யாரையும் எனக்குக் குரல் கொடுக்கவிட மாட்டேன். மலையாளத்தில் இன்னும் களமிறங்காமல் இருப்பதற்குக்கூட அந்த மொழியை நன்றாகக் கற்றுக்கொண்டு உள்ளே போக வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.

சினிமா அடையாளம் கிடைத்த பிறகும்கூட நாடக நடிப்புக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறீர்களோ?

சினிமாவாக இந்தாலும் நாடகமாக இருந்தாலும் அதில் நடிப்பை மட்டும்தான் பார்க்கிறேன். பள்ளி நாட்களில் இருந்தே எனக்கு நடிப்பு, விளையாட்டு மீது அதிகக் காதல் உண்டு. வகுப்பில் அமைதியாகவே இருக்கும் என்னை, நடிப்பு, விளையாட்டு என்று இறக்கிவிடும்போது ஒரு எனர்ஜி வரும். அதுதான் நான். என்னை முழுமையான பூஜாவாக அங்கேதான் பார்க்க முடியும். நடிப்புதான் என் பேஷன். அந்த ஆர்வத்தில் எங்களது குழுவினர் சேர்ந்து நடத்திவரும் ‘மை நேம் இஸ் சினி – மா’, ‘கற்பூரம்’ உள்ளிட்ட எங்களுடைய நாடகங்களுக்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

நீங்கள் ரோயிங் (Rowing) விளையாட்டு வீராங்கனையாமே?

ரோயிங் விளையாட்டில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வாங்கியிருக்கிறேன். ஒலிம்பிக் வரைக்கும் செல்ல வேண்டும் என்ற கனவும் உண்டு. இடையில் காலில் சிறு காயம்பட்டு அறுவை சிகிச்சை வரைக்கும் சென்றதால் என்னால் தொடர்ந்து அப்போது அதில் இயங்க முடியவில்லை. அந்தக் கவலையில் இருந்த நேரத்தில்தான் நடிப்புக்கான வாய்ப்பும் சூழலும் அமைந்தது. அதிலிருந்து நடிப்பைப் பிரதானமாக்கிக்கொண்டேன்.

படங்கள்:கிரண்குமார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in