

இசையமைப்பாளர் இளையராஜா 1980-களின் இறுதியில் திரைப்பாடல்களை மெட்டமைத்துத் தள்ளும் ஒரு தொழிற்சாலையாகவே மாறிப்போயிருந்தார். அந்தப் பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன என்றபோதும், அதில் தொனித்த ஒரே விதமான தாள லயம் ஒருவிதச் சலிப்பை ஏற்படுத்தியிருந்தது. 1989-ல் அறிமுகமான தேவாவும் இளையராஜாவின் சாயலைவிட்டு விலக முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார். அந்தச் சூழலில் 1992-ம் வருடம் திரைத்துறையில் இளையராஜாவின் சாயல் துளியுமின்றி அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஆதித்தியன்.
கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘அமரன்’தான் இவரது முதல் படம். மாறுபட்ட தாள லயமும் வித்தியாசமான ஒலியமைப்பும் கொண்டிருந்த அப்படத்தின் பாடல்கள் கேட்டவுடனே அனைவரையும் கவர்ந்திழுத்தன. இளையராஜாவின் ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடலுக்கு இணையான வரவேற்பை இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக் பாடிய ‘வெத்தல போட்ட சோக்கில’ பாடல் பெற்றது. அந்தப் பாடலை முணுமுணுக்காத இளைஞர்களே அன்றில்லை எனலாம்.
யூடியூப் போன்ற வலைத்தளங்கள் அன்று இருந்திருந்தால் அது ‘கொலவெறி’ பாடலையும் மிஞ்சியிருக்கும். அந்தப் பாடலைத் திரையுலகின் கானா பாடல்களுக்கு முன்னோடி என்றும் சொல்லலாம். அந்தப் படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள். ஒவ்வொன்றும் முற்றிலும் வேறுபட்ட இசை பாணியைச் கொண்டிருந்தன. சலிப்படைந்துபோயிருந்த திரைப் பாடல் ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியாய் ஆதித்தியன் அன்று தெரிந்தார்.
பாணியில் சிக்காத கலைஞர்
ஆதித்தியனின் இயற்பெயர் டைட்டஸ். இவர் 1954 ஏப்ரல் 9 அன்று தஞ்சாவூரில் பிறந்தார். இவர் கோயம்புத்தூரில் மணி உயர் நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து சென்னைக்கு வந்தார். இசையை முறையாகப் பயின்றவர் அல்ல. ஆனால், அதைச் சுவாசமாகக் கொண்டு வளர்ந்தவர். இவர் முதலில் ஒலி வடிவமைப்புப் பொறியியலாளராகத் தான் திரைத்துறைக்குள் நுழைந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறையில் நுழைவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பாக இவர் இசையமைப்பாளரானார்.
ஆதித்தியனின் இரண்டாவது படம் ஜி.பி. விஜய் இயக்கத்தில் வெளியான ‘நாளைய செய்தி’. அந்தப் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் இடம்பெற்ற ‘பொன்மாலை நேரம் வந்தாச்சு’ என்ற பாடல் அந்தக் காலகட்டத்தை மிஞ்சிய ஒன்று. ஆனால், அதே படத்தில் இடம்பெற்ற பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடிய ‘உயிரே உன்னை இதயம் மறந்துவிடுமோ’ என்ற பாடல் மனதை வருடும் மெலடி. அதன் இசையமைப்பாளர் ஆதித்தியன் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. ஆதித்தியனிடம் உள்ள பிரச்சினையே அதுதான்.
ஒரு பாடலைக் கேட்டவுடனே அதன் இசையமைப்பாளர் இளையராஜாவா ரஹ்மானா என்று நம்மால் சொல்ல முடியும். ஏனென்றால், இளையராஜாவிடம் நாட்டுப் புற இசையின் தாக்கம் பெரிதாக இருக்கும். ரஹ்மானிடம் சூஃபி மற்றும் ரெகே வகை இசையின் தாக்கம் பெரிதாக இருக்கும். இதனால் அவர்களுக்கென்று ஒரு தனி பாணியும் இருந்தது. ஆனால், ஆதித்தியனிடம் குறிப்பிட்டுச் சொல்லும்படி எவ்வித இசையின் தாக்கமும் இருக்கவில்லை. இதனால் இசையில் இவருக்கென்று ஒரு தனிப் பாணி உருவாகாமல் போனது. அவர் இசையில் பெரிய அளவில் சாதிக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இவர் மொத்தம் முப்பது படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களும் அதில் அடங்கும். இயற்கையிலேயே சிறந்த குரல் வளமும் கொண்டிருந்ததால் தான் இசையமைத்த பாடல்களை மட்டுமின்றி பிற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் இவர் பாடியுள்ளார். 1994-ல் வெளியான ‘சீவலப்பேரி பாண்டி’யை இவரது மைல்கல் எனலாம். அதில் இடம்பெற்ற ‘கிழக்குச் செவக்கையிலே’ பாடல் அன்றைய காலகட்டத்தில் பெரிதும் கொண்டாடப்பட்டது. இருப்பினும், ‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த அளவு அங்கீகாரம் இதற்குக் கிடைக்கவிலை. அதே போன்று 2000-ல் கே. ராஜேஷ்வர் இயக்கத்தில் வெளியான ‘அதே மனிதன்’ படத்துக்கு மிகச் சிறப்பான பாடல்களை அளித்திருந்தார். ஆனால், அந்தப் படத்தின் தோல்வி காரணமாக அந்தப் பாடல்கள் ரசிகர்களின் கவனத்துக்கே வராமல் போயின. இதை இவரது அதிர்ஷ்டமின்மை என்றுதான் சொல்ல வேண்டும்,
திரை இசையின் வெற்றி என்பது இசையமைப்பாளரின் திறமையை மட்டும் சார்ந்ததல்ல. அது இயக்குநரின் திறமையையும் சார்ந்தது. அதைவிட முக்கியம் அந்தப் பாடல்களை இயக்குநர் காட்சிப்படுத்தும் விதம். ஆதித்தியனின் மிகச் சிறந்த பாடல்கள்கூட வெகு சுமாராகத் தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இசையைப் பொறுத்தவரை அந்நாட்களில் புதிய இசையமைப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுவது மிகவும் அரிதாக இருந்தது. பெரிய இயக்குநர்கள், உச்ச நடிகர்கள் எல்லாம் இளையராஜா, ரஹ்மான் என்ற வட்டத்தை விட்டு மீறி வெளியே வர விரும்பவில்லை.
இளையராஜாவுக்குக் கிடைத்த பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றோ ரஹ்மானுக்குக் கிடைத்த மணிரத்னம், ஷங்கர் போன்றோ இவருக்கு எந்தக் கூட்டணியும் அமையவில்லை. ‘நாளைய செய்தி’ படத்தின் பாடல்களும் இசையும் வரவேற்பைப் பெற்றபோதும், அதன் இயக்குநர் ஜி.பி. விஜய் தனது இரண்டாவது படமான கமல் நடித்த ‘கலைஞன்’ படத்துக்கு இளையராஜாவைத்தான் நாடினார். ஆதித்தியனை அறிமுகப்படுத்திய ராஜேஷ்வர் மட்டும்தான் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பளித்தார். 2003-ல் அவரது இயக்கத்தில் வெளியான ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ தான் ஆதித்தியனின் கடைசி திரைப்படம்.
ஒருவேளை ராஜேஷ்வர் ஒரு வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்திருந்தால் ஆதித்தியன் தமிழின் சிறந்த இசையமைப்பாளராக நீண்ட நாட்கள் இருந்திருப்பார். ஆனால், அப்படி நடக்கவில்லை. ரஹ்மானின் வருகைக்குப் பின்னான ஆர்ப்பாட்டத்திலும் தேவாவின் எழுச்சியிலும் இவரது திறமை மறைந்துபோனதுதான் நடந்தது. தமிழ்த் திரை உலகுக்கு நிச்சயம் இது ஒரு இழப்புதான்.
ஆனால், தன்னம்பிக்கை கொண்ட இவர் அதற்கெல்லாம் துவண்டுவிடவில்லை. திரைப்பட வாய்ப்பு குறைந்த பின், நிறையத் தமிழ் பாப் ஆல்பங்களுக்கு இசையமைத்தார். அவற்றைத் தானே தயாரித்து இந்தியாவிலும் மலேசியாவிலும் வெளியிட்டார். அது தவிர நிறைய ரீமிக்ஸ் ஆல்பங்களையும் தயாரித்து வெளியிட்டார். அவை பெருத்த வரவேற்பையும் பெற்றன. இன்றும் அவை விரும்பிக் கேட்கப்படுகின்றன. ‘கோவில்பட்டி வீர லட்சுமி’ படத்துக்குப் பிறகு ஆதித்யன் சின்னத் திரை மட்டுமில்லாது விளம்பரப் படங்களுக்கும் இசை அமைப்பு செய்தார். குறிப்பாக மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சந்தனக்காடு’ என்ற தொடருக்கும் அதே தொலைக்காட்சியில் கவனம் பெற்ற ‘காலம்’, ‘ஒத்திகை’ ஆகிய ஆவணப்படத் தொடர்களுக்கும் இசை அமைத்தார்.
ஆதித்தியனின் இசை இந்த மூன்று தொடர்களையும் கவனம் பெற வைத்தது. அதில் ‘சந்தனக்காடு’ தொடர் 2008-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சின்னத்திரை விருதைப் பெற்றது. அந்த விருதின் வெற்றியில் ஆதித்தியன் இசையின் பங்கு கணிசமானது. அதேபோல் ‘காம்ரேட்’ என்ற ஆவணப்படத்துக்காக அவர் இசை அமைத்த ... ‘கருவேலங் காட்டு மண்ணில் சந்தனமாய்ப் பிறந்தவரே’ என்ற பாடல் மிக பிரபலமாகப் பேசப்பட்டது. அந்தப் பாடல்தான் ஆதித்தியன் இசை அமைத்த கடைசி பாடல்.
இவற்றுக்குப் பிறகு ஜெயா தொலைக்காட்சியில் இவர் எட்டு வருடங்கள் தொடர்ந்து வழங்கிய ‘ஆதித்தியன் கிச்சன்’ எனும் சமையல் நிகழ்ச்சி மிகப் பிரசித்தி பெற்றது. ஒரு சாதாரண சமையல் நிகழ்ச்சி என்று அதை அவர் எடுத்துக்கொள்ளவில்லை. அதிலும் புதுமையைப் புகுத்தித் தன் முத்திரையைப் பதித்தார்.
ஆதித்தியன் ஒரு சிறந்த ஓவியர் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம். இன்றும் திரையுலக பிரபலங்கள் பலரின் வீடுகளை இவரது ஓவியம் அலங்கரித்துக்கொண்டிருப்பது அதற்குச் சான்று. பிற கலைஞர்களை ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே. கவிஞர் தாமரை, இசையமைப்பாளர் இமான் என்று நீளும் அந்தப் பட்டியலின் நீளம் மிக அதிகம்.
இவ்வுலகை விட்டுப் பிரியும் வயதில்லை 63. ஆனால், 2017 டிசம்பர் 5 அன்று அவர் காலமானார். காலன் கலைஞன் என்றோ இளைஞன் என்றோ பார்ப்பதில்லையே. ‘கிழக்கு செவக்கையிலே’, ‘தாழமடல் ஓலக்குள்ள’ போன்ற சாகா வரம் பெற்ற பாடல்களைக் கொடுத்த அவர் தன் இசையால் வாழ்ந்துகொண்டேயிருப்பார். அவர் இசையமைத்த ‘அதே மனிதன்’ படத்தில் லிவிங்க்ஸ்டன் பாடிய ‘ஜனனம் உண்டு மரணமில்லை, இறுதியென்று ஒன்றுமில்லை’ என்ற பாடலின் வரிகள் கண்டிப்பாக இவருக்குப் பொருந்தும்.
படங்கள் உதவி: ஞானம்