

ம
னித எதிர்பார்ப்புகளை நையாண்டி செய்யும் அறிவியல் புனைவுப் படங்கள் எப்போதும் ரசிக்கப்பட்டே வந்திருக்கின்றன. டவுன்சைஸிங் (Downsizing) அதுபோன்ற வகைதான். திரைக்கதையில் ஆங்காங்கே அங்கதம் தூவி, சமூகத்துக்கு மறைமுக அறிவுரை சொல்ல முயலும் இந்தப் படம், டிசம்பர் 22-ல் வெளியாகிறது.
2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 980 கோடி. அதுவே அதற்கடுத்த 50 ஆண்டுகளில் 1120 கோடியாக பயமுறுத்துமாம். இது ஐ.நா வெளியிட்ட புள்ளிவிவரம். இப்படி மக்கள் தொகை வெடிப்பாக பெருகினால் பூமியின் வளங்கள் யாவும் மனித நுகர்வுகளால் மோசமாக சூறையாடப்பட, அவற்றின் தொடர் பாதிப்பாக சுற்றுச்சூழல் கேடுகள், பேரழிவு அபாயங்கள் நமக்குக் காத்திருக்கின்றன. இந்த சவால்களுடன், கட்டுக்கடங்காத செலவினங்கள், மாற்றம் தேடும் மனித மனம் என அனைத்துக்கும் விடையாக மருத்துவ அறிவியலாளர்கள் தீர்வு ஒன்றினைக் காண்கின்றனர்.
அதன்படி மனித உடல் அணுக்களை அளவில் சுருக்கி ஆறடி மனிதனை அரையடிக்கும் குறைவாக மாற்றும் மருத்துவ நுட்பம் அறிமுகமாகிறது. நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தத்துடன் வாழும் படத்தின் ஹீரோவும் இதில் ஆர்வம் கொள்கிறார்.
பழைய உருவதுக்குத் திரும்ப முடியாத அந்த போன்சாய் மாற்றத்துக்கு மனைவியுடன் சேர்ந்து உடன்படுகிறார். ஆனால் ஆரம்பம் முதலே தயங்கித் தவிக்கும் அவரது மனைவி கடைசி நேரத்தில் நழுவுகிறார். அது தெரிய வரும்போது ஹீரோ ’5 இஞ்ச்’ அவதாரம் எடுத்திருக்கிறார். வேறுவழியின்றி தனிக்கட்டையாய், சக மினியேச்சர் மனிதர்களுடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குட்டி நகரத்தில் வாழ்க்கையைத் தொடங்குகிறர்.
உள்ளே துளித்துளி நுகர்வுகளினால் அங்கே வெளியுலகைவிட நூறில் ஒரு பங்கே செலவாகிறாது. அவர் கனவு கண்ட படோடப வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்குகிறார். ஆனால் அங்கேயும் மனிதர்களுக்கே உரிய வேறுபாடுகள், நடைமுறை பிரச்சினைகள் விஸ்வரூபமெடுக்க நாயகனுக்கும் நமக்குமாக உருப்படியான செய்தி சொல்லப்படுகிறது.
எழுத்து, தயாரிப்பில் பங்கெடுத்து படத்தை இயக்கியிருப்பவர் அலெக்ஸாண்டர் பெய்ன் (Alexander Payne). மேட் டேமன், கிறிஸ்டோஃப் வால்ட்ஸ், கிறிஸ்டன் விக், ஹாங் சௌ(Hong chau) உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.