

தொண்ணூறுகள் தொடங்கி இரண்டாயிரத்தின் மத்தியப் பகுதி வரை வீரப்பனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரைப் பிடிக்கத் தமிழக - கர்நாடக அரசுகள் செலவிட்ட தொகை 220 கோடி ரூபாய்க்கு மேல். 36 ஆண்டுகள் நீடித்த இந்தத் தேடுதல் வேட்டை காரணமாக, வீரப்பனின் சொந்த ஊர், அதைச் சுற்றியுள்ள பல கிராம மக்கள், கர்நாடக - தமிழ்நாட்டு அதிரடிப் படைகள் செய்த அட்டூழியங்களால் மக்கள் பட்ட இன்னல்கள் சொல்லில் அடங்காதவை. இப்படி இரு மாநில உறவு, சமூக வாழ்வு ஆகிய இரண்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரப்பனின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் ’தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ என்கிற தலைப்பில் 4 அத்தியாயங்களைக் கொண்ட ஆவணப்படத் தொடராகத் தந்திருக்கிறார் இயக்குநர் செல்வமணி செல்வராஜ். நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் இதில், ஒரு த்ரில்லர் வெப் தொடருக்கு உண்டான விறுவிறுப்புக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை. அதற்கான காரணமும் இல்லாமல் இல்லை.
வீரப்பனுடன் தொடர்புடையவர்கள், குறிப்பாக அவரது மனைவி, அவரை வேட்டையாட அதிகார மையத்தால் அமர்த்தப்பட்ட அதிகாரிகள், காட்டுக்குள் நுழைந்து முன்னேறி, உயிரைப் பணயம் வைத்து வீரப்பனைச் சந்தித்து அவரது முதல் பேட்டியை எடுத்ததுடன், வீரப்பனின் தற்போதைய தோற்றம் எப்படியிருக்கும் என்பதற்கு ஆதாரமாக எண்ணற்ற புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வந்த பத்திரிகையாளர் எனப் பலரும் வீரப்பன் குறித்த தங்களது பார்வையை பேட்டிகளாக அளித்திருக்கிறார்கள். அவை கச்சிதமான படத் தொகுப்பின் வழியாக விறுவிறுப்பு கூட்டுகின்றன.
அதனோடு சிறப்பான ஒளிப்பதிவு, டார்க் லைட்டிங், நெகிழ்வான இசை, மேக்கிங் என ஈர்க்கிறது தொடர். இதனால் திரையில் பேசும் மனிதர்களின் மனநிலையுடன் பார்வையாளர்களால் எளிதில் ஒன்ற முடிகிறது. ஆனால் இந்த மேற்பூச்சுகள் யாவும் வீரப்பனை பெரும்பாலும் ஒரு ஹீரோவாகச் சித்தரிக்க முயல்வதாக ஏற்படும் தோற்றத்தை தவிர்க்க இயலவில்லை. 2000க்குப் பிறகு பிறந்தவர்களோ அல்லது வெளிநாட்டவர்களோ இந்த ஆவணத் தொடரை பார்க்க நேர்ந்தால் அவர்களுக்கு வீரப்பன் ஒரு ராபின் ஹூட் என்கிற எண்ணம் எழக்கூடும்.
இத்தொடரின் பெரும்பாலான காட்சிகள் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியின் பார்வையில்தான் சொல்லப்பட்டுள்ளன. தன் கணவர் செய்த கொலைகள் யாவுமே எதிராளிகளின் அத்துமீறல்களுக்கான எதிர்வினைகளே என்பதில் முத்துலட்சுமி உறுதியாக இருப்பதை அவர் விவரிக்கிறார்.
வழக்கறிஞர் ச.பாலமுருகன் எழுதிய ’சோளகர் தொட்டி’ நாவல்தான் இந்த ஆவணத் தொடரை இயக்குவதற்கான உந்துசக்தி எனப் பேட்டி ஒன்றில் இத்தொடரின் இயக்குநர் கூறியிருந்தார். ஆனால் அந்த நாவலின் மையக்கருவான பழங்குடி மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அதிரடிப்படைகளின் அராஜக வன்முறை பற்றி அழுத்தமாகப் பேசப்படவே இல்லை. அதுவே இத்தொடரை சமூக ஊடகங்களில் தற்போது ஒரு விவாதப் பொருளாக மாற்றியிருக்கிறது.