சினிமா ரசனை 2.0: வாழ்க்கை வழங்கும் இரண்டாம் வாய்ப்பு!

சினிமா ரசனை 2.0: வாழ்க்கை வழங்கும் இரண்டாம் வாய்ப்பு!
Updated on
3 min read

திருடன் கையில் சாவியைக் கொடுத்தால் என்ன ஆகும்? அதிலும் பல ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டு சமீபத்தில்தான் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும் திருடனிடம்?

வாழ்க்கை நம்மில் பலருக்கு இரண்டாம் வாய்ப்பைக் கொடுக்கிறது. அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து வாழ்க்கை மாறுகிறது. அப்படியொரு முன்னாள் திருடனின் வாழ்க்கையில் எதிர்பாராமல் கிடைத்த இரண்டாம் வாய்ப்புதான் ‘பேன்ஷீ’ (Banshee) இணையத் தொடர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ளது. பேன்ஷீ ஒரு சிற்றூர். அந்த ஊருக்குப் பெயர் இல்லாத ஒரு மனிதன் வருகிறான். அங்கே ஒரு விடுதியில் அந்த ஊருக்குப் புதிதாக வந்து பொறுப்பேற்றிருக்கும் புதிய ஷெரீஃபைப் பார்க்கிறான் (சட்டக் காவலர்). ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த ஷெரீஃப் கொல்லப்படுகிறார்.

ஒரு கணம் தயங்கும் அந்த மனிதன், ஒரே நொடியில் அந்த ஷெரீஃபின் அடையாள அட்டை முதலியவற்றை எடுத்துக்கொண்டு அந்த ஷெரீஃபாக ஆள் மாறாட்டம் செய்துவிடுகிறான். இறந்துபோன ஷெரீஃபின் பெயர் லூகாஸ் ஹுட். அன்றிலிருந்து பேன்ஷீ அந்த ஊரின் புதிய ஷெரீஃப் லூகாஸ் ஹுட்டாகவே ஆகிவிடுகிறான் அந்த மனிதன்.

காதலியைத் தேடி… ஆனால் அவனுக்கு ஓர் இருண்ட இறந்த காலம் உண்டு. சிறையில் பல்லாண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டே வெளியில் வந்திருக்கிறான். சும்மா வரவில்லை. ஒரு கொடிய மாஃபியா தலைவனுக்காகப் பல லட்சங்கள் விலையுள்ள வைரங்களைத் திருடி மாட்டியிருக்கிறான். ஆனால் வைரங்கள் அவனிடம் இல்லை. அவனது காதலி வைரங்களை எடுத்துக் கொண்டு தப்பிவிடுகிறாள். மாஃபியா பாஸ் இவன்மீது கொலைவெறியில் இருக்கிறான்.

பல வருடங்கள் கழித்து சிறையிலிருந்து விடுதலை ஆகும் அவன், தனது பழைய காதலியைத் தேடிச் செல்கிறான். அதுதான் பேன்ஷீ என்கிற அந்த ஊர். அந்த ஊரின் தலைமை வழக்கறிஞரை மணந்துகொண்டு, பதினைந்து வருடங்களாக அங்கேதான் அவள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறாள். அவளது கணவர் முன்னாள் ராணுவ வீரரும் கூட.

இந்த பேன்ஷீ என்கிற ஊருக்கு வந்தபோது ஷெரீஃப் கொல்லப்பட்டதைப் பார்த்து, ஷெரீஃபின் அடையாளத்துக்குள் ஒளிந்துகொண்டவன், அதன்பின் தனது முன்னாள் காதலியைச் சந்திக்கிறான். ஆனால் அந்த ஊரில் ஒரு வில்லன் உண்டு. அவன் பெயர் காய் ப்ராக்டர் (Kai Proctor). ‘Amish’ என்று சொல்லக்கூடிய மிகத் தீவிர கிறிஸ்துவர்களில் இருந்து வந்தவன் அவன். ஆனால் கள்ளக் கடத்தலில் இறங்கியவுடன் தனது மதத்தைத் துறந்துவிட்டவன்.

அவனுக்கும் உள்ளூர் சட்டப் பாதுகாவலர் என்கிற முறையில் புதிய ஷெரீஃப் லூகாஸ் ஹுட்டுக்கும் உரசல்கள் வருகின்றன. இருவரும் ஒருவரையொருவர் கொன்றே ஆகவேண்டும் என்கிற அளவுக்குப் பொறி பறக்கும் பிரச்சினைகள் உருவாகின்றன. இச்சமயத்தில் பெயரில்லாதவனைத் தேடி அலையும் பழைய மாஃபியா பாஸ் ராபிட், இவன் பேன்ஷீயில் இருக்கிறான் என்று அறிந்துகொள்கிறான். இவனுக்கும் லூகாஸ் ஹுட்டின் முன்னாள் காதலிக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதுதான் இந்த சீரீஸின் பின்னணி, முன்கதை. இப்படித்தான் இந்த சீரீஸ் தொடங்குகிறது.

மாறுபட்ட ஆடுபுலி ஆட்டம்: இந்த சீரீஸின் சிறப்பம்சம் என்னவென்றால், முதல் சீசனில் தொடங்கி, இறுதி சீசனான நான்காவது சீசனின் கடைசி எபிசோட் வரை பற்றவைத்த பட்டாசு போலப் பறக்கும் என்பதே. தவிர. இது படுபயங்கர கமர்ஷியல் சீரீஸ். இத்தனை நாள்கள் வித்தியாசமான சீரீஸ்களை நாம் பார்த்து வந்திருப்பதால், இந்த முறை அட்டகாசமாக எழுதி, எடுக்கப்பட்ட ஒரு கமர்ஷியல் சீரீஸை அது எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனித்து ரசிக்க வேண்டும் என்பதே நோக்கம்.

கமர்ஷியல் என்பதால் வெறும் அடிதடி ஆக்‌ஷன் மட்டுமே என்று நினைக்க வேண்டாம். நல்ல உணர்வுப் பூர்வமான இடங்களும் உண்டு. ஒருவரையொருவர் கொல்லத் துடிக்கும் இரண்டு பேர்தான் ஹீரோ லூகாஸ் ஹூட்டும் அதே பேன்ஷீயில் இருக்கும் முன்னாள் வில்லன் காய் ப்ராக்டரும்.

தனது அரசாங்கத்துக்குள் வந்துவிட்ட புதிய ஷெரீஃப் தனது விஷயத்தில் மூக்கை நுழைக்கிறான் என்கிற கோபம் காய் ப்ராக்டருக்கு. அதேசமயம் போலிப் பெயரில் ஷெரீஃபாக ஆள் மாறாட்டம் செய்யும் ஹீரோவுக்கோ, அவ்வப்போது வந்து குறுக்கிடும் வில்லன் மீது கோபம். இந்த இருவரின் ஆடுபுலி ஆட்டம் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது.

ஹீரோ - வில்லன் இணைந்தால்.. அதேபோல், இந்த சீரீஸில் வரும் ஹீரோ - வில்லன் பிரச்சினை சற்றே அபூர்வம். ஊருக்குள் ஒரு புதிய கெட்ட சக்தி நுழையும்போது, ஒருவர் மீது ஒருவர் கொலைவெறியில் இருக்கும் ஹீரோவும் வில்லனும் இணைந்து செயல்பட்டு அந்தக் கெட்ட சக்தியை வீழ்த்த வேண்டும் என்கிற நிலை உருவாகிறது. அப்போது இருவரும் என்ன செய்கிறார்கள் என்பதுமே மிகவும் நன்றாக எழுதப்பட்டிருக்கும்.

இதில் பெயரில்லாத மனிதனாக வந்து ஷெரீஃப் லூகாஸ் ஹுட்டாக ஆள் மாறாட்டம் செய்யும் நபராக நடித்திருப்பவர் ஆண்டனி ஸ்டார் (Antony Starr). இப்போதைய வெப் சீரீஸ் ரசிகர்களில் இவர் பெயரைத் தெரியாத நபரே இருக்க முடியாது. இதுவரை மூன்று சீசன்கள் முடிந்திருக்கும் ‘The Boys’ சீரீஸில் சூப்பர்மேனைப் பகடி செய்திருக்கும் ஹோம்லாண்டராக நடித்துக்கொண்டிருப்பவர். ‘பேன்ஷீ’ தொடரின் நாயகி ‘ஆனா’வாக நடித்திருப்பவர் இவானா மிலிசெவிக் (Ivana MiliĆeviĆ).

மிகப் புகழ்பெற்ற நடிகை. ‘ஃப்ரெண்ட்ஸ்’ டிவி சீரீஸில் இவர் ஒரே ஒரு எபிசோடில் நடித்திருந்த கோரி வெஸ்டன் என்கிற கதாபாத்திரத்தைப் பற்றி இருபது வருடங்கள் கழித்து இன்றும் கூகிள் செய்துகொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இந்தத் தொடரில் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கும் ‘The 100’ சீரீஸில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இவானா மிலிசெவிக் நடித்திருக்கிறார்.

ஒதுக்குப்புறமான ஊர் ஒன்றில் நடக்கும் பிரச்சினைகள் என்பது ஹாலிவுட் தொலைக்காட்சி சீரீஸ்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வகைமை (Genre). இதன்கீழ் பல புகழ்பெற்ற சீரீஸ்களும் படங்களும் உண்டு. அவற்றில் ‘Sons of Anarchy’, ‘Justified’, ‘Longmire’ ஆகியவை மிகவும் புகழ்பெற்றவை. இவை ஒவ்வொன்றையும் பற்றியே நிறைய எழுத முடியும். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த சீரீஸ்கள் இவை.

‘பேன்ஷீ’ சீரீஸுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது பல சாதனைகளை முறியடித்திருக்கிறது. அப்போதைய நேரத்தில் அது ஒளிபரப்பான சேனலில் மிக அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட எபிசோட் இதில் உண்டு (இது பின்னாளில் முறியடிக்கப்பட்டுவிட்டது). HBO தயாரிப்பான ‘பேன்ஷீ’, இப்போது ஜியோ OTT சேனலில் கிடைக்கும்.

- rajesh.scorpi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in