

கும்பகோணத்தைச் சேர்ந்த சிவா என்ற இளைஞனாக நடிக்கிறார் சிம்பு. கும்பகோணத்துக்கு மிக அருகில் உள்ள திருவையாற்றைச் சேர்ந்த மைலா என்ற அழகுப் பெண்ணாக நடிக்கிறார் நயன்தாரா. இவர்கள் இரண்டு பேருமே சென்னையின் பிரபலமான ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார்கள். பழகிய பிறகுதான் இருவருமே காவிரித் தண்ணீரைக் குடித்து வளர்ந்த அக்கம் பக்கத்து ஊர்க்காரர்கள் என்பது தெரிகிறது.
ஒரே துறை, ஊர்ப்பாசம், கைநிறையச் சம்பளம், அப்புறமென்ன? காதலிக்க வேண்டியதுதானே? அதுதான் இல்லை. இருவருக்கும் நிச்சயதார்த்தமே நடக்கிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு பையன் - பொண்ணு இரண்டு பேரும் காதல் தோல்வி பயமில்லாமல் காதலிப்பார்கள், ஊர் சுற்றுவார்கள் அல்லவா? ‘இது நம்ம ஆளு’ படத்தில் அதைத்தான் சிம்புவும் நயன்தாராவும் செய்கிறார்கள். “இத்தனை நாளும் நீ எங்கேடா இருந்தே?” என்று நயனும் “ நான் ஸ்கூல்ல படிச்சிட்டிருந் தப்போ நீ படிச்சிட்டு இருந்த கேர்ள்ஸ் ஸ்கூலைத் தாண்டித்தான் போவேன் தெரியுமா?” என்று சிம்புவும் உருகும் நேரத்தில்தான் அவர்களது காதலுக்கும் திருமணத்துக்கும் இருவீட்டாரும் தடா போடுகிறார்கள்.
கதையில்தான் இத்தனை பெப்பான திருப்பங்கள் என்றால் 80 சதவீதப் படம் முடிந்த நிலையில், இந்தப் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாமல் சிம்புவின் அப்பா அடம்பிடிக்கிறார் என்ற அரசல் புரசலான தகவல் கிடைக்கிறது.
சிம்பு சினி ஆர்ட்ஸும் பாண்டிராஜின் பசங்க புரடெக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துவரும் இந்தப் படத்தில் இன்னொரு ஜோடியும் உண்டு. இரண்டாவது கதாநாயகியை ஒரு பக்கம் தேடிக்கொண்டே, குழந்தைகளை வைத்து இயக்கும் தனது அடுத்த படத்துக்குத் தயாராகி விட்டார் பாண்டிராஜ். அதற்கு முன் இது நம்ம ஆளு படத்தின் தலைப்பு உரிமை பாக்யராஜிடம் இருப்பதால், அவரது உதவியாளர் என்ற உரிமையில் பாக்யராஜைச் சந்தித்திருக்கிறார். “ உனக்கு இல்லாத தலைப்பா? எடுத்துக்கோய்யா” என்று தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பியிருக்கிறார். இதைச் சொல்லி நெகிழ்ந்துபோகிறார் பாண்டிராஜ்.
இது நம்ம ஆளு படத்தில் சிம்புவும் நயன்தாராவும் காட்டியிருக்கும் நெருக்கம் பட்டையைக் கிளப்பும் என்ற பரபரப்பு இன்னும் ஆறாமல் அப்படியே இருக்க, சிம்புவின் தம்பி குறளரசன் இன்னொரு யுவன்போல இசையமைத் திருப்பதும், பாலசுப்ரமணியத்தின் நேட்டிவிட்டி ஒளிப்பதிவும் இது நம்ம படம் என்று சொல்ல வைக்குமாம்.