

இ
ருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்னர் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்த படம் ‘ஜுமான்சி’. அந்தப் படத்தின் தொடர்ச்சியாக, வரும் டிசம்பர் 20 அன்று வெளியாக உள்ளது ‘ஜுமான்சி: வெல்கம் டு த ஜங்கிள்’(Jumanji: Welcome to the Jungle) திரைப்படம்.
குழந்தை எழுத்தாளரான க்ரிஸ் வான் ஆல்ஸ்பர்க் 1981-ல் எழுதிய ‘ஜுமான்சி’ படக்கதையைத் தழுவி, அதே பெயரிலான திரைப்படம் 1995-ல் வெளியானது. குழந்தைகள் பரிவாரத்துடன் ராபின் வில்லியம்ஸ் நடித்த இப்படம் அவருக்காகவும் அப்போதைய ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் உத்திகளுக்காகவும் பெரிதாகப் பேசப்பட்டது. உலகம் முழுக்க வசூலையும் வாரிக் குவித்தது. மேஜிக் போர்டு ஒன்றில் விளையாடத் தொடங்கும் சிறுமி ஒருத்தியும் அவளுடைய தம்பியும் வன விலங்குகளைக் கண் முன்னர் உயிர்ப்பிக்கிறார்கள். கூடவே 26 ஆண்டுகளுக்கு முன்னர் அதுபோன்று விளையாடி உள்ளே இழுக்கப்பட்டவர்களையும் மீட்கின்றனர். வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும் கவர்ந்த இந்தப் படத்தின் மூலக்கதையைத் தழுவி அதன் பின்னர் நிறைய படங்கள் எடுக்கப்பட்டபோதும் ஏனோ அவை சோபிக்கவில்லை. தற்போது 22 ஆண்டுகள் இடைவெளியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஜுமான்சியின் 2-ம் பாகம் இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பரிசாக வெளியாகிறது.
முதல் படத்தின் கதை முடிந்த 20 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. மாணவர்கள் சிலர் பள்ளியின் பாழடைந்த கிடங்கில் தட்டுப்படும் வீடியோ கேம் மீது ஆர்வமாகிறார்கள். அதில் ஜுமான்சி மேஜிக் போர்டு விளையாட்டு உத்திகள் வீடியோ கேமாக விரிய, அதை இயக்குபவர்கள் ‘பாடி ஸ்வாப்பிங்’ முறையில் வளர்ந்த மனிதர்களாக அடர் கானகத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் நிஜ உலகுக்குத் திரும்பும் முயற்சியில் தொடர்ந்து நிகழும் சாகச, சுவாரசியங்களை ‘3டி’ தொழில்நுட்பத்தில் புதிய ஜூமாஞ்சியில் பார்த்து ரசிக்கலாம்.
ஜேக் கேஸ்டன் இயக்கிய இப்படத்தில் ‘ராக்’ ட்வெய்ன் ஜான்சன் உடன் ஜேக் பிளாக், கெவின் ஹார்ட், நிக் ஜோனஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மறைந்த ராபின் வில்லியம்ஸ் பாத்திரத்தையும் மீட்டுருவாக்கி உலவச் செய்திருக்கிறார்களாம்.