

க
ணவர் மறைவுக்குப் பிறகு, அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பொறுப்பேற்கும் ராதிகாவின் மூத்த மகன் உதயநிதி ஸ்டாலின். சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். காவல் துறை இணை ஆணையரின் தங்கை மஞ்சிமா மோகனும் இவரும் காதலிக்கின்றனர். சாப்ட்வேர் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் உதயநிதியின் வேலை போகிறது. அம்மா வருத்தப்படுவார் என்பதால் அதைச் சொல்லாமல் மறைக்கிறார். வட்டிக்குக் கடன் வாங்கியும், காதலியின் உதவியுடனும் வீட்டுக் கடனுக்கு இஎம்ஐ செலுத்துகிறார். இதற்கிடையில், இவர்களது காதல் விவகாரம் மஞ்சிமாவின் அண்ணனான காவல் துறை அதிகாரி ஆர்.கே.சுரேஷுக்கு தெரியவர, பிரச்சினையாகிறது. இதனால், பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர். இன்னொருபுறம், டப்பிங் கலைஞர் சூரி. இவர்கள் இருவரது வாழ்க்கையும் தனித்தனியே பயணிக்கிறது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச சிறையில் குண்டு வைத்து அங்கிருந்து தப்பிக்கிறார் தீவிரவாதி சோட்டா. அடுத்த குண்டுவெடிப்புக்கான திட்டத்துடன் சென்னைக்கு வருகிறார். எதேச்சையாக சூரியும், உதயநிதியும் அவரை வெவ்வேறு தருணங்களில் சந்திக்கின்றனர். இதனால், இவர்கள் மீதும் போலீஸுக்கு சந்தேகம் வருகிறது. சோட்டாவுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என இவர்கள் நிரூபிப்பதும், உதயநிதி, சூரி, மஞ்சிமா மோகன் கூட்டணி, போலீஸாருடன் சேர்ந்து சென்னையில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து, மக்களைக் காப்பதும் மீதிக் கதை.
குண்டுவெடிப்பு தீவிரவாதத்தை மையமாக வைத்து திரைக்களத்தை நகர்த்தியிருக்கிறார், இயக்குநர் கவுரவ் நாராயணன். தோற்றம், நடிப்பு என்று உதயநிதியும் வழக்கமான பார்முலாவில் இருந்து இந்த முறை மாறியிருக்கிறார். படம் முழுவதும் பல்வேறு சிக்கல்களில் இருந்து சாதுர்யமாக தப்பிப்பது, வேலைகளை கச்சிதமாக முடிப்பது என அவரது போக்கு ரசிக்கும்படி இருக் கிறது.
தமிழகத்தின் முதல் அரசுப் பேருந்து பெண் ஓட்டுநராக வரும் ராதிகா, காமெடியோடு கலந்து டப்பிங் கலைஞராக அசத்தும் சூரி, நாயகி மஞ்சிமா மோகன் உள்ளிட்ட கதாபாத்திரங்களும் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. குறைவான காட்சிகளே வந்தாலும் ராதிகாவும் முத்திரை பதிக்கிறார். அவரது அறிமுகக் காட்சியில் ‘தமிழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் கண்மணி’ என்ற வாசகம், திரையில் படர்கிறது. ஆனால், தமிழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமாரி. திரைப்படம்தான் என்றாலும், வரலாறு முக்கியம் இயக்குநரே! சூரியின் நகைச்சுவை வழக்கம்போல திரையரங்கை சிரிப்பில் ஆழ்த்துகிறது. அதிலும் சூரியை பயங்கரவாதி என நினைத்து உதயநிதி பேசும்போது திரையரங்கமே அதிர்கிறது.
தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிற காவல் துறை அதிகாரி சுரேஷிடம் உதயநிதி தானாக வந்து மாட்டிக்கொள்வது, கர்ப்பமாக இருக்கும் மனைவி மீது சூரி காட்டும் பாசம், வில்லனும் ஹீரோவும் ஒரே அபார்ட்மென்ட்டில் கீழ் தளத்திலும், மேல் தளத்திலும் இருந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் அடுத்தடுத்த வியூகங்களை வகுப்பது என்பது போன்ற காட்சிகள் அருமை. ‘‘இன்னிக்கு தெருவுக்கு நாலு இன்ஜினீயர் இருக்கான். கொத்தனார் கிடைக்கிறதுதான் கஷ்டம்’’ என உதயநிதியின் தங்கை பேசும் வசனம் சிறப்பு.
துரத்தல் காட்சிகள், சம காலத்தோடு பொருந்துகிற கந்துவட்டி தொடர்பான காட்சிகள் ஆகியவை அருமையாக உள்ளன. இதேபோல, திரைக்கதை நகரும் போக்கிலும் இயக்குநர் இன்னும் சற்று கூடுதலாக மெனக்கெட்டிருக்கலாம். நாயகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நினைத்து தீவிரவாதிகளைப் பிடிப்பதில் காவல் துறையின் அணுகுமுறையை மெத்தனமாக்கி, மொத்த பாரத்தையும் உதயநிதி தலையில் ஏற்றியது பலவீனம்.
ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு, எடிட்டர் பிரவின் கே.எல் ஆகிய இருவரும் கவனத்தை ஈர்க்கிறார்கள்.டி.இமான் இசையில் பாடல்கள் சுமார் ரகம். இறுதிக்காட்சிகளின் வேகத்தை மொத்த படம் முழுவதும் படரவிட்டிருந்தால் இப்படை வென்றிருக்கும்!