

வட ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்வீடன், நார்வே, டென்மார்க் நாடுகளை ‘ஸ்கேண்டினேவியன் நாடுகள்’ என்று அழைப்பார்கள். பழங்காலத்தில் இந்த நாடுகளைச் சேர்ந்த வைக்கிங்குகள் பல அந்நிய தேசங்கள் மீது படையெடுத்திருக்கிறார்கள். இதைப் பற்றி அறிய ‘வைக்கிங்ஸ்’ (Vikings) சீரீஸைப் பார்க்கலாம் - இது வைக்கிங்குகளின் பார்வையில் இருக்கும்; அதேபோல் ‘The Last Kingdom’ என்கிற சீரீஸ் இங்கிலாந்து நாட்டின் பார்வையில் இருக்கும்.
இரண்டிலும் பொதுவான சம்பவங்கள் உண்டு). வைக்கிங்குகள் வெற்றிபெற்றுப் பல வருடங்களுக்குப் பிறகு பிற நாடு களால் தோற்கடிக்கப்பட்டுச் சிதறினார்கள். அதன் பின் ஸ்கேண்டினேவியா கிறிஸ்தவ மதத்தைத் தழுவியது.
இந்த நாடுகளின் பொதுவான அம்சம், மனித நடமாட்டம் அதிகமில்லாத பனிப் பிரதேசங்களைக் கொண்டிருக்கும் அதீதக் குளிர். அதேபோல் ‘நார்டிக் தேசங்கள்’ என்கிற பதத்தையும் நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். டென்மார்க், நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளுடன் ஃபின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்த்தால் இவை அனைத்தும் நார்டிக் தேசங்கள் என்கிற குடையின் கீழ் சேர்ந்து விடும். இந்த தேசங்களுக்குள் சரித்திரக் காலத்தில் இருந்தே நட்பும் தொடர்புகளும் உண்டு.
நிலமும் குளிரும்: இந்த முன்னுரை எதற்கென்றால், ஸ்கேண்டினேவிய - நார்டிக் நாடுகளின் வெப் சீரீஸ்கள் ஓடிடி ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவை. அவை அமெரிக்க சீரீஸ்கள் போல இருக்காது. அமெரிக்க சீரீஸ்களில் வேகமாக ‘கட்’ செய்யப்படும் படத்தொகுப்பு, விறுவிறுப்பான காட்சிகள், சண்டைகள் என்று ஒருவிதமான சட்டகம் (டெம்பிளேட்) உண்டு. ஆனால், ஸ்கேண்டினேவிய - நார்டிக் சீரீஸ்கள் அப்படி இருக்காது.
அழுத்தமான கதாபாத்திரங்கள், ஆழமான கதை சொல்லல் முறை என்று, உணர்வு சார்ந்த அம்சங்களையே பொதுவாகக் கொண்டிருக்கும். காரணம், ஐரோப்பியப் படங்களின் தாக்கம். அமெரிக்க சீரீஸ்கள் பார்த்துவிட்டு, ஸ்கேண்டினேவிய - நார்டிக் சீரீஸ்கள் பார்க்கையில் ஒரு புதுவிதமான அனுபவம் நமக்குக் கிடைக்கும். காட்சிகள், ஊர்கள், மக்கள், உணவு, உறை பனி என்று மொத்தமாக நம்மைக் கவரும் சீரீஸ்கள் இவை. அதற்காக எல்லா சீரீஸ்களும் அருமை என்று சொல்ல முடியாது.
எப்படி மலையாளப் படங்கள், ‘லொக்கேஷன்’ என்கிற ஒன்றை முக்கியமாக வைத்துச் செயல்படுகின்றனவோ, அப்படி ஸ்கேண்டினேவிய - நார்டிக் சீரீஸ்களிலும் ‘லொக்கேஷன்’ பிரதானமாக இருக்கும். ஆனால், ‘லொக்கேஷ’னை மட்டும் வைத்தே ஒப்பேற்றினால் அலுப்புத்தானே? உண்மையில் பல மலையாளப் படங்கள் அந்த வேலையையும் செய்கின்றன. அப்படி சில சீரீஸ்கள் அலுப்பாகவும் இருக்கும்.
ஸ்கேண்டினேவியப் பின்னணியில் டென்மார்க்கின் டேனிஷ் மொழியில் எடுக்கப்பட்ட ஒரு நல்ல சீரீஸ்தான் ‘தி செஸ்ட்நட் மேன்’ (The Chestnut Man). ஒரு மணி நேரம் கொண்ட 6 எபிசோடுகள். ஒரே சீசன். சோரன் ஸ்வைஸ்த்ருப் (Soren Sveistrup) என்கிற டென்மார்க்கைச் சேர்ந்த புகழ்பெற்றத் திரைக்கதை எழுத்தாளர் (இவரது ‘The Killing’ பரவலாகப் பேசப்பட்ட இன்னொரு சீரீஸ்) எழுதிய முதல் நாவல் இது. அதிலிருந்து 2021இல் சீரீஸாக மாற்றப்பட்டது. நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது.
ஒரு தீவும் சில கொலைகளும்: பல வருடங்களுக்கு முன்னர் தென்கிழக்கு டென்மார்க்கில் இருக்கும் ‘Mon’ என்கிற தீவில் சில கொலைகள் நடக்கின்றன. ஓடிப்போன மாடுகளைத் தேடிச்செல்லும் போலீஸ்காரர் ஒருவர், தற்செயலாக இந்தக் கொலைகளைப் பற்றித் தெரிந்துகொள்கிறார். அந்த வீட்டில் ஒரு சிறுவனும் சிறுமியையும் தவிர மற்ற எல்லாரும் கொல்லப்பட்டிருப்பதை அறிகிறார். ஆனால், அவரும் இனந் தெரியாத ஒரு நபரால் கொல்லப்படுகிறார்.
அதன்பின் பல வருடங்கள் கழித்து இப்போதைய காலகட்டத்தில் டென் மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் நாடாளுமன்றம் விடுமுறை முடிந்து மீண்டும் கூடுகிறது. ஒரு வருடமாக யாரையும் பார்க்காமல் வீட்டிலேயே இருந்த பெண் அமைச்சர் ரோசா ஹார்த்துங் நாடாளு மன்றம் வரப்போகிறார். ஒரு வருடத்துக்கு முன்னர் அவருடைய பன்னிரண்டு வயது மகள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப் பட்டிருந்தார். ஒட்டுமொத்த டென்மார்க்குமே பின்பற்றிய முக்கியமான வழக்கு இது.
இந்தப் பின்னணியில், டென்மார்க் போலீஸைச் சேர்ந்த பெண் நையா துலின் என்பவரிடம் அவரது மேலதிகாரி ஒரு பெண்ணின் கொலை பற்றிய செய்தியைக் கொடுக்கிறார். அங்கிருந்து வேறொரு துறைக்குச் செல்வதாக இருந்த துலின், வேறு வழி இல்லாமல் இந்த வழக்கைத் துப்பறியச் சம்மதிக்கிறார். அவருடன் ஐரோப்பாவின் வேறொரு பகுதியிலிருந்து வந்திருக்கும் மார்க் ஹெஸ் சேர்ந்துகொள்கிறார். இவர் யூரோபோல் என்கிற (இண்டர்போல் போன்ற) அமைப்பைச் சேர்ந்தவர்.
இந்த இருவரும் இணைந்து கொலையை எப்படித் துப்புத் துலக்குகிறார்கள்? உண்மையில் அமைச்சரின் மகள் எப்படிக் கொலை செய்யப்பட்டார், அங்கிருந்து என்ன ஆகிறது, அந்தக் கொலைக்குப் பிறகு வேறு கொலைகள் நடந்தனவா என்பதைச் சொல்லும் சீரீஸ்தான் ‘செஸ்ட்நட் மேன்’.
ஈர்க்கும் இருண்ட தன்மை: பொதுவாகவே துப்பறியும் சீரீஸ்களில் கதை ஏதாவதொரு கொலையை நோக்கித்தான் இருக்கும். எனவே இந்தக் கதைச் சுருக்கத்தைப் படித்தால் பிற சீரீஸ்கள் - படங்கள் போலத் தோன்றலாம். ஆனால், உண்மையிலேயே மிக நன்றாக எழுதப்பட்டுள்ள சீரீஸ்களில் இதுவும் ஒன்று. நல்ல நடிப்பு, வித்தியாசமான இசை, அருமையான கேமரா, எடிட்டிங் என்று எல்லாத் தொழில்நுட்பங்களும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் சீரீஸ் இது.
தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டால், உலக நாடுகளின் சீரீஸ்களில் ஸ்கேண்டினேவியா-நார்டிக் பகுதிகளின் சீரீஸ் என்றால் முதலில் பார்ப்பேன். அவற்றுக்குப் பிறகுதான் பிற மொழிகள். காரணம் மேலே சொன்னதுதான். அவர்களின் படைப்புகளில் ஓர் இருண்ட தன்மை உண்டு. அவர்களின் வசனங்கள், இசை, காட்சிகள் என்று கதை, கதாபாத்திரங்களின் ஆழத்துள் நம்மைக் கடத்திவிடுவார்கள்.
அப்படி உலகப் புகழ்பெற்ற பல சீரீஸ்கள் அவர்களிடமிருந்து வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, புகழ்பெற்ற இயக்குநர் டேவிட் லிஞ்ச்சின் ‘The Twin Peaks’ என்கிற சீரீஸின் பாதிப்பில் எடுக்கப்பட்டது Forbrydelsen (The Killing) என்கிற மற்றொரு சீரீஸை ( ‘ட்வின் பீக்ஸ்’ சீரீஸைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்) கூறலாம். ‘செஸ்ட்நட் மேன்’ புத்தகம் எழுதிய அதே சோரன் ஸ்வைஸ்த்ருப் தான் திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். இதுவே பின்னால் அமெரிக்க சீரீஸாகவும் ரீமேக் செய்யப்பட்டது.
‘The Valhalla Murders’, ‘Bordertown’, ‘Ragnarok’, ‘The Bridge’, ‘Trapped’, ‘Deadwind’. அதேபோல் திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் ஏராளம் உண்டு. குறிப்பாக ‘Department Q’ வரிசையில் வெளியான முதல் மூன்று படங்கள். அவற்றில் முதலில் வந்த ‘The Girl with the Dragon Tattoo’ படத்தைத் தேடிப்பிடித்துப் பார்க்கலாம். முற்றிலும் ஒரு புதிய உலகம், அதன் தாக்கம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஸ்கேண்டினேவிய - நார்டிக் சீரீஸ்கள் சரியான தேர்வு.
- rajesh.scorpi@gmail.com