

சென்னையில் ஓர் இரவு. சாதி ஆணவக் கொலை செய்த ஒரு கும்பலுக்கும், புலனாய்வு பத்திரிகையாளர் எஸ்.பி.பி.சரணுக்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதே இரவில் சொந்த ஊருக்குக் கிளம்பிச்செல்லும் கால் டாக்ஸி ஓட்டுநர் கிருஷ்ணாவின் பர்ஸ் திருடு போகிறது. பேருந்து கட்டணத்துக்குக் கூட காசில்லாத சூழலில், அந்த இரவில் பகுதிநேர வேலையாக பத்திரிகையாளர் சரணை அழைத்துச் செல்ல, சரண் எதிரிகளால் கொல்லப்படுகிறார். சாகும் நேரத்தில் முக்கிய ஆவணத்துடன் அவர் காரில் ஏறிவிட, சாட்சியையும், சாட்சியத்தையும் அழிக்க விடிய விடியத் துரத்துகிறது வில்லன் கும்பல்.
ஒரு பழைய பங்களாவுக்குத் திருடச் செல்லும் விதார்த், அங்கே அடைபட்டுக் கிடக்கும் தன்ஷிகாவை மீட்டு அழைத்து வருகிறார். பங்களாவின் சொந்தக்கார ரான தம்பி ராமைய்யா தன்ஷிகாவை துரத்த, விதார்த்தை கழற்றிவிட்டு, தன்ஷிகா தப்பிக்க ஓடுவது இரண்டாம் கதை.
தொலைந்துபோன தன் நாய்க்குட்டியை, கண் தெரியாத அப்பா வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து தேடும் சிறுமி சாரா, சிக்கக்கூடாத கும்பலிடம் சிக்குகிறார். இப்போது மகளைத் தவிப்புடன் தேடித் திரிகிறார் தந்தை.
பெரும் தொழில்குழுமம் ஒன்றின் ஓரே வாரிசான பணக்கார இளைஞன் ராகுல், எரிக்கா என்ற அழகியைப் பார்த்ததுமே விரும்புகிறான். அவள் மனதில் இடம்பிடிப்பதற்காக அவளைத் தன் காரில் அழைத்துக்கொண்டு சென்னை நோக்கிக் கிளம்புகிறான்.
நான்கு தனித் தனி சரடுகளாகத் தொடங்கும் இக்கதைகளின் கதாபாத்திரங்கள் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களும், அவர்கள் எந்தப் புள்ளியில் எப்படி இணைகிறார்கள்? எதிர்கொண்ட பிரச்சினைகளில் இருந்து அவர்களால் வெளியே வரமுடிந்ததா என்பதுதான் விழித்திரு.
நான்கு தனித்தனிக் கதைகளை, விறுவிறுப்பான இணைவெட்டுக்கள் கொண்ட திரைக்கதையின் மூலம் இணைத்து, கதாபாத்திரங்களுக்கு இடையில் எதிர்பாராத புள்ளிகளில் தொடர்புகளையும் முரண்களையும் உருவாக்கி, கதை நிகழும் மாநகரின் சித்திரத்தையும் வரைந்து காட்டுகிறது படம்.
கார் ஓட்டுநர் கிருஷ்ணாவுக்கு உதவி செய்ய முன்வரும் பண்பலை வானொலி அறிவிப்பாளர், தன் உயிரைக் காக்க ஓடும் நிலையிலும் சிறுமியையும் மற்றவர்களையும் காக்க முற்படும் அவரது குணம். காப்பாற்றியவனையே போட்டுத் தள்ள நினைத்து பின் திருந்தும் திருடி, தான் செய்த களவால் ஒரு இளைஞனின் வாழ்க்கையே இல்லாமல்போகும்போது, தன் தொழிலைக் கைகழுவும் ஒரு திருடன், மூச்சுக்கு மூச்சு தன்னை பணக்காரன் எனச் சொல்லிக்கொண்டாலும், ஒரேயொரு ஒரு ரூபாய் நாணயத்தைப் பிச்சைக்காரரிடம் பிச்சையெடுக்கும் பணக்கார இளைஞன் என நான்கு கதைகளின் கதாபாத்திரங்களும் எதிர்கொள்ளும் திருப்பங்கள், அவை படிக்கும் பாடங்கள், படம் வேகமாக நகர மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வாகவும் மாறுகின்றன.
நடிப்பில் கலங்கடித்திருக்கிறார் கிருஷ்ணா. அவர் பதற்றம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. “அண்ணே எப்பண்ணே வருவ?” என்று தங்கை கேட்கும்போதெல்லாம் கலங்குகிறார். அந்தப் பரபரப்பிலும் தங்கைக்கு செல்போன் வாங்கிவிடும் ஆசையில், பண்பலை வானொலி நடத்துகிற திகில் கதை போட்டியில் பங்கேற்பது சுவாரசியம். கலகலப்பாக நடித்துள்ள விதார்த், உச்சக்கட்ட காட்சியில் நம்மை அழவைக்கிறார்.
படத்தில், திருடன் விதார்த்துக்கு ஜோடியாக வந்தாலும் சாய் தன்ஷிகா தோற்றம், நடிப்பு இரண்டிலுமே எளிமை, அழகு. நகைச்சுவையிலும் ரணகளப்படுத்துகிறார். திருடியாக அவர் செய்யும் சேட்டைகளும், பாவாடைக்குள் ஒரு கால்சட்டை அணிந்து அதற்குள் இருந்து கத்தி எடுக்கிற ஸ்டைலும் ரசிக்க வைக்கின்றன.
ஆணவக்கொலைக்கு எதிராக அழுத்தமாகப் பேசுவது, பார்வையற்ற கதாபாத்திரத்துக்கு திலீபன், சக மனிதர்களை நேசிக்கும் கதாபாத்திரத்துக்கு முத்துக்குமார் எனப் பெயர்கள் சூட்டியதன் மூலம் அவற்றின் குணங்களை நுட்பமாகச் சுட்டுவது, ஈழக் கவிஞர் ஜெயபாலனைக் கொண்டு “ எந்த இழப்பும் நிரந்தரமில்லை”என்று பேச வைத்தது என கவனிக்க வைக்கிறார் இயக்குநர் மீரா. கதிரவன்.
இரவில் நடக்கும் இக்கதையில் சென்னையின் இன்னொரு பக்க இரவு வாழ்க்கையைக் கண்முன் நிறுத்திவிடுகிறது விஜய் மில்ட னின் ஒளிப்பதிவு. சத்யன் மகாலிங்கத்தின் இசையில் வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கும் ‘ஆழி அலை’ பாடல் இதயத்தை அழுத் தும் இதம். டி.ராஜேந்தரின் பாடலும் ஆட்டமும் படத்தில் வலிய திணிக்கப்பட்டிருக்கும் வணிக அம்சம்.
லாஜிக்குகள் பல இடங்களில் இடித்தாலும் தனித் தனியே நிகழும் நான்கு கதைகளை இணைக்க முயன்று, அதில் கச்சிதமும் சுவாரஸ்யமும் கூடிய திருப்பங்களால் வெற்றிபெறுகிறது விழித்திரு.