

சென்னையில் இருந்து கோவை செல்லும் ரயிலில் சந்திக்கிறார்கள் நாயக னும் நாயகியும். தனது தோழி ஆயிஷாவுக்காக அவள் பெயரில் எடுக்கப்பட்ட ரயில் டிக்கெட்டில் பயணிக்கிறார் ப்ரியா (நஸ்ரியா). சென் னையில் இருந்து தன் சித்தப்பா வீட்டுக்குச் செல்லும் விஜயராகவாச் சாரி (ஜெய்), அபூபக்கர் என்ற பெயரில் ஏஜென்டிடம் வாங்கிய பயணச் சீட்டில் பயணிக்கிறார். ப்ரியாவை ஆயிஷாவாக எண்ணும் ராகவன், முதல் பார்வையிலேயே அவள் மீது அபிமானம் கொள் கிறான். ப்ரியாவோ ராகவனை அபூபக்கராகவே நினைக்கிறாள்.
இருவரும் மற்றவரை இஸ்லாமியர் என நினைத் துக் காதலிக்கிறார்கள். ஆச்சார அனுஷ்டானங்களைப் பின்பற்றும் பிராமணக் குடும்பம் தன்னுடையது என்று ராகவன் உணர்ந்திருந்தாலும், ‘ஆயிஷா’மீதான காதலை ராகவனால் தவிர்க்க முடியவில்லை. இதேதான் ‘அபூபக்கர்’மீது காதல் கொள்ளும் ப்ரியாவின் நிலையும்.
இஸ்லாமியப் பெண்ணை மணப் பதற்குத் தன்னைத் தயார்செய்து கொள்ளும் ராகவன், இஸ்லாமியக் கலாச்சாரத்தைத் தேடித் தேடித் தெரிந்துகொள்கிறான். இதன்மூலம் ஒரு இஸ்லாமியக் குடும்பத்தின் நட்பும் அவனுக்குக் கிடைக்கிறது. ப்ரியாவும் ஒரு இஸ்லாமியரைத் திருமணம் செய்துகொள்ளத் தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறாள். தன் தோழி ஆயிஷாவிடம் இருந்து இஸ்லாமியப் பழக்கவழக்கங்களைத் தெரிந்துகொள்கிறாள்.
இருவர் வீட்டிலும் திருமணப் பேச்சு வரும்போது இனியும் தங்கள் காதலை மறைத்துவைத்திருக்கக் கூடாது என்று அவர்கள் முடிவு செய்யும் தருணத்தில் இருவருக்கும் மற்றவரைப் பற்றிய உண்மை தெரிகிறது. இருவரும் ஒரே மதம், சாதியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை அறியும்போது திருமண விஷயத்தில் பிரச்சினை இருக்காது என்ற நிம்மதி அல்லவா வரவேண்டும்? ஆனால் அவர்களுக்குள் ஏமாற்றம் வருகிறது. அந்த ஏமாற்றம் அவர்கள் இடையே விலகலை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையில் ராகவனுக்கு நட்பான முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவன் மீது காதல் கொள்கிறாள். அவளைக் காதலித்து ஏமாற்றிவிட்டதாக அந்தக் குடும்பத்தி னர் ராகவன் மீது கோபம் கொள் கிறார்கள்.
ப்ரியா ராகவன் காதல் என்ன ஆனது? முஸ்லிம் குடும்பத்தினரின் கோபத்தை ராகவன் எப்படிச் சமாளிக்கிறான்?
காதல் மெல்ல மெல்ல உருப் பெறும் விதம் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கலாச்சார வேறுபாடுகள் அற்ற நிலையிலும் கலாச்சார வேறுபாடு கள் இருப்பதாக அனுமானித்துக் கொண்டு பழகும் விதமும் சுவையாக உள்ளது. ஆயிஷாவாகவும் அபூபக்க ராகவும் காதலித்தவர்கள் உண்மை யான அடையாளங்களைப் பரஸ்பரம் தெரிந்துகொண்ட பிறகு வரும் ஏமாற்றம்தான் கதையின் எதிர்பாராத சிக்கல். இந்த உளவியல் சிக்கல் ஒரு வெடிப்பாக வெளிப்படவில்லை. நுட்பமாக வெளிப்படுகிறது. இந்த இடத்தில் இயக்குநர் அனீஸ் நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.
இங்குதான் படம் புத்துணர்ச்சியு டன் வேகமெடுத்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை அவர்கள் எப்படி எதிர்கொண்டு சமாளித்தார்கள் என்பதுதான் இரண்டாம் பாதி திரைக்கதையின் சவாலாக இருந்தி ருக்க வேண்டும். ஆனால் சவாலை அறிமுகப்படுத்துவதோடு படத்தை முடித்துத் தப்பித்துச் செல்வதிலேயே கவனமாக இருக்கிறார் இயக்குநர்.
ஆழமான உளவியல் அம்சம் கொண்ட இந்த சிக்கலை நுட்ப மாகவும் படைப்பு ரீதியாகவும் கையாண்டிருந்தால் படம் வேறொரு தளத்துக்குச் சென்றிருக்கும். அந்தச் சவாலை ஏற்க இயக்குநர் தவறியிருக் கிறார். இதனால் வித்தியாசமான அனுபவத்தைத் தந்திருக்க வேண்டிய இந்த படம் பாதிக் கிணறு தாண்டிய நிலையில் நின்றுவிட்டது.
இயக்குநர் அனீஸ் மாறுபட்ட கலாச்சாரப் பின்னணிகள் குறித்து நுணுக்கமாக ஆராய்ந்து, எளிமை யாகக் காட்சிகளை அமைத்த விதத்தைப் பாராட்ட வேண்டும். கதைகள் மூலமாகவும் காட்சிகள் மூலமாகவும் திரை ஊடகம் இஸ்லாமி யர்களுக்கு ஏற்படுத்தும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில், அதன் ஆன்ம பலம் இறையியல்தான் என்பதை நிறுவ முயன்றிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம் இஸ்லாமியப் பெரியவரைச் சேர்ந்த ஆட்களை வன்முறையாளர்களாகச் சித்தரிப்பது பெரும் முரண்பாடு.
மாறுபட்ட அடையாளத்துடன் ஒரு வரைக் காதலிப்பதில் உள்ள சிக்கல் களைச் சுவையாகச் சித்தரித்துள்ள இயக்குநர், ரயில் சந்திப்பில் காதல், வழியில் ரயில் நிற்கும்போது பாடல், கிளைமாக்ஸுக்கு முன்னால் சண்டை எனப் புளித்துப்போன சங்கதிகளை தவிர்த்திருக்கலாம்.
ஆச்சாரமான ஒரு பிராமணக் குடும்பத்தின் பண்பாட்டைச் சித்தரிக் கும் காட்சிகள் அழகாகப் படமாக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் இந்த குடும்பத்தினர் கூடிக் கூடிப் பேசும் காட்சிகள் எல்லாம் 70, 80-களின் மேடை நாடகக் காட்சிகளை நினைவு படுத்துகின்றன.
படத்துக்கு வண்ணம் சேர்ப்பவர் களில் முதலிடம் ஒளிப்பதிவாளர் எல்.லோகநாதனுக்கு. அடுத்த இடம் நஸ்ரியாவுக்கு. தான் வரும் காட்சிகளில் எல்லாம் அழகின் மென்னதிர்வுகளைப் படர விடுகிறார். நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தவும் அவருக்குத் தெரிந்திருப்பது கூடுதல் பலம். உண்மை வெளிப்படும் இடத்தில் தோன்றும் உணர்வுகளை ஜெய், நஸ்ரியா நுட்பமாக வெளிப்படுத்து கிறார்கள். ஜெய் முகபாவங்கள், நடனத் திறமையில் பெரும் முன்னேற் றம். வசனம் பேசுவதில் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஜிப்ரானின் இசை படத்துக்குப் பெரிய பலம். மூன்று பாடல்கள் ரசித் துக் கேட்கும்படி இருக்கின்றன. பாடல் கள் படமாக்கப்பட்ட விதமும் அழகு.
நுட்பமான விஷயத்தைத் தொட்டி ருக்கும் இயக்குநர் அதைப் படைப் பூக்கத்துடன் கையாண்டிருந்தால் படம் சிறந்த அனுபவத்தைத் தந்திருக்கும்.