

‘நானொரு மேடைப் பாடகன்... கற்றது கையளவு... இன்னும் உள்ளது கடலளவு’ என்று அடக்கமாகப் பேசும் சத்யன் மகாலிங்கம், மெல்லிசை மேடைகளில் பாடத் தொடங்கி ‘விழித்திரு’ திரைப்படத்தின் இசையமைப்பாளராக உயர்ந்திருக்கும் முதல் தலைமுறை இசைக் கலைஞர். முதல் படத்திலேயே ஆறு பாடல்களை ஏழு இசையமைப்பாளர்களைக் கொண்டு பாடவைத்திருக்கும் புதுமையைப் படைத்திருக்கிறார். சில பாடல்களையும் எழுதியிருக்கிறார். ‘விழித்திரு’ படத்தின் ஆல்பத்தில் அவரின் இசை சில இடங்களில் வியக்கவைக்கிறது. ‘ஸ்டே அவேக்’ புரோமோ பாடலில் விழிக்கவைக்கிறது. இசைமயமான அவரின் பேச்சிலிருந்து சில வரிகள் உங்களின் பார்வைக்கு இங்கே...
இசையமைப்பாளர் ஆனதன் பின்னணி என்ன?
வட சென்னை பகுதியில் இசைக் குழுக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். பாடுவதில் எனக்கு விருப்பம் இருந்ததால், பெரம்பூரிலிருந்து தினமும் புறப்பட்டு வட சென்னை பகுதிக்கு போய்விடுவேன். அந்தப் பகுதியில் பிரபல இசைக் குழுக்களில் ஒன்றான மெல்கி ராஜா குழுவில் நான் முதலில் பாட ஆரம்பித்தேன். அதன் பிறகு சங்கரின் சாதகப் பறவைகள், லஷ்மன் ஸ்ருதி போன்ற இசைக் குழுக்களிலும் பாடினேன். 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே அஸ்தராஸ் எனும் இசைக் குழுவைத் தொடங்கி, பல இசை நிகழ்ச்சிகளை நடத்திவந்தேன்.
முதன்முதலாகத் திரையில் பாடுவதற்கு வாய்ப்பளித்தவர் பரத்வாஜ். ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’. படத்தில் ‘கலக்கப் போவது யாரு...’ பாடல் பிரபலமாகவே தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. ‘தீயே… தீயே…’ (மாற்றான்), ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ (கழுகு) போன்ற பாடல்களைப் பாடினேன். பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு இசையமைக்கும் பணிகளையும் செய்துவந்தேன். தனிப்பட்ட ஆல்பங்களுக்கும் இசையமைத்தேன். எந்த வேலையைச் செய்வதாக இருந்தாலும், இசை சார்ந்த பணியாக இருந்தால் மட்டுமே அதைச் செய்வது என்பதில் தீர்மானமாக இருந்தேன். இந்தப் பிடிவாதம்தான் இசைத் துறையில் அடுத்தடுத்த கட்டத்துக்கு என்னை நகர்த்தியது என்று நம்புகிறேன்.
‘விழித்திரு’ திரைப்படத்துக்கு இசைமைக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
எனக்கு நெருக்கமாக நான் உணரும் விஷயங்களை என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொள்வேன். அப்படித்தான் ‘அவள் பேர் தமிழரசி’ படத்தின் கதைக் களத்தைப் பற்றியும் அதில் இடம்பெற்றிருந்த பாடல்களின் சிறப்பு குறித்தும் மிகவும் நெகிழ்ச்சியோடு பதிவுசெய்திருந்தேன். அதிலிருந்துதான் இயக்குநர் மீரா கதிரவனுக்கும் எனக்குமான நட்பு வளர்ந்தது. இந்தப் படத்துக்காக இசையமைப்பாளரை முடிவுசெய்யும்போது, “ஒரு பாட்டை கம்போஸ் செய்து பாடிக் காட்டுங்கள். அது எல்லாருக்கும் பிடிச்சிட்டா நீங்கதான் இசையமைப்பாளர்” என்றார். சுப்பிரமணியன் நந்தி எழுதித் தந்த பாட்டைப் பாடிக் காட்டினேன். இப்படித்தான் படத்துக்கான வாய்ப்பு வந்தது.
படத்தில் இசை சார்ந்து வெளிப்பட்டிருக்கும் சிறப்புகள் என்னென்ன?
எந்தவிதமான வாத்தியத்தையும் ஒலிக்கச் செய்யாமல் குரல்களின் வழியே ஹார்மனியோடு பாடலைப் பாடும் முறைக்கு ‘அகபெல்லா’ என்று பெயர். இதற்கு மாறாக, வாத்தியங்களின் அச்சு அசலான ஒலியை, கலைஞர்கள் அவர்களின் குரலின் வழியாக வெளிப்படுத்தி ஒரு பாட்டுக்கான பின்னணி இசையை அளித்திருக்கிறோம். படத்தின் ஆறு பாடல்களை முன்னணி இசையமைப்பாளர்கள் ஏழு பேர் பாடியிருக்கின்றனர்.
டி.ராஜேந்தர் (பாடலை எழுதிப் பாடியிருக்கிறார்), சந்தோஷ் நாராயணன், விஜய் ஆன்டனி, எஸ்.தமன், சி.சத்யா, ஜி.வி.பிரகாஷ், அல்போன்ஸ் ஆகிய இசையமைப்பாளர்களின் குரல்கள் ஆல்பத்தில் ஒலிக்கின்றன. ‘வைக்கம்’ விஜயலக்ஷ்மி பாடியிருக்கும் ஓர் உணர்ச்சிமயமான பாடலுக்கு சிம்பொனி குழுவில் வாசிக்கும் எமி டர்னர் என்ற பெண் இசைக் கலைஞர், இங்கிலீஷ் ஹார்ன் என்னும் வாத்தியத்தை வாசித்திருக்கிறார். லண்டனுக்குச் சென்று இதற்கான ஒலிப்பதிவைச் செய்துவந்தேன்.