எனக்கு ட்விட்டர் போதும்! - சித்தார்த் பேட்டி

எனக்கு ட்விட்டர் போதும்! - சித்தார்த் பேட்டி
Updated on
2 min read

ல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, அந்தந்தக் கதாபாத்திரத்துக்கான நடிப்பைத் தந்துவிட முனைப்புடன் கேமரா முன்பு நிற்பவர் நடிகர் சித்தார்த். தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அவள்’ படத்தைத் தயாரித்து, நடித்திருக்கிறார். அவளுடன் உரையாடியதிலிருந்து...

நமக்குப் பிடித்ததைச் செய்தால் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டீர்களா?

ஒரு படம் எடுப்பது சாதாரண விஷயமில்லை. எனது தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஸ்டார்களைப் பெரிதாக நினைப்பதில்லை. ‘அவள்’ படத்தை எடுக்க வேண்டும் என்பது நாலரை ஆண்டுகளுக்கு முன்பெடுத்த முடிவு. ஆங்கிலப் பேய் படங்களுக்கு நிகராக, தமிழில் ஒரு பேய் படம் எடுக்க முடிவு செய்தே இந்தப் படத்தை எடுத்தேன்.

பேய்ப் படங்கள் என்றாலே ஏன் ஆங்கிலப் படங்களுக்கு நிகர் என நினைக்கிறீர்கள்?

நமது சினிமாவை ஹாலிவுட் படங்களோடு ஒப்பிடவில்லை. போட்டியாக நினைக்கிறேன். நகைச்சுவை, யதார்த்தம், காதல், சமூக அக்கறை போன்ற விஷயங்களைப் பேசும் படங்களை எடுத்துவிட்டு, அதை ஹாலிவுட் படங்களோடு ஒப்பிடவில்லையே. பேய்ப் படங்களைப் பொறுத்தவரையில் ஹாலிவுட், கொரியா, ஜப்பான் ஆகிய மொழிப் படங்கள் முன்மாதிரி. யாரெல்லாம் பேய்ப் படங்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்களோ அவர்களுக்குப் போட்டியாகவே ‘அவள்’ படத்தை எடுத்திருக்கிறோம்.

ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் அதிக இடைவெளி இருக்கிறதே? ஏன்?

படம் செய்யவில்லை என்றால் மறந்துவிடுவார்களா என்ன, படம் மறுபடியும் வந்தால் ஞாபகம் வந்துவிடும். வாய்ப்பில்லாமல் ஒரே ஒரு படத்தை மட்டுமே தயாரித்து நடிக்கவில்லை. இப்போதும் 4 படங்களில் நடித்துவருகிறேன். நல்ல படம் எடுப்பது எளிதாகிவிட்டது. ஆனால், அதை வெளியிடுவது மிகவும் கடினமாகிவிட்டது. பட வெளியீடு என்பது தயாரிப்பாளர் கையிலேயே இல்லை.

‘அவள்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கும் எண்ணம் உள்ளதா?

கண்டிப்பாக. ஆனால், பாகங்கள் தொடர வேண்டுமானால், முதல் பாகம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும். 7 பாகங்களுக்கான கதைகள் இயக்குநர் மிலிந்த் ராவிடம் இருக்கின்றன. ஏனென்றால், நான்கு நாட்கள் ரிசார்ட்டில் உட்கார்ந்து கதை எழுதவில்லை. நான்கு ஆண்டுகள் உட்கார்ந்து யோசித்து எழுதியிருக்கிறோம்.

இப்போதும் இயக்குநராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?

18 ஆண்டுகளாக இருக்கிறது. உதவி இயக்குநராகத்தான் சினிமாவுக்கு வந்தேன். கதை அமையும்போது கண்டிப்பாக இயக்குவேன். இப்போது நடிகராகவும் தயாரிப்பாளராக இருப்பதால் நிறையப் பொறுப்புகள் இருக்கின்றன.

பட பூஜை, படம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாமல் அமைதியாகப் படப்பிடிப்பு நடத்துகிறீர்களே?

ஒரு படம் முடியாமல், அதைப் பற்றிப் பேசுவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமில்லை. பட பூஜை, படம் குறித்த அறிவிப்புகளும்கூட எனக்குப் பிடிக்காது. நவம்பர் 3-ம் வெளியீடு என்றால், அக்டோபர் 3-ம் தேதிக்கு முன்புவரை எவ்வளவுதான் கூவிக்கொண்டே இருந்தாலும் மறந்துவிடுவார்கள். ஆகையால் 1 மாதத்துக்கு முன்பு சரியாகத் திட்டமிட்டு விளம்பரப்படுத்தினால் போதும் என்று நினைக்கிறேன். அதைக் கடைப்பிடிக்கவும் விரும்புகிறேன்.

ட்விட்டரில் ஜிஎஸ்டி, தணிக்கை உள்ளிட்ட பல விஷயங்களுக்குக் கருத்து தெரிவித்தாலும், பேட்டியில் அது குறித்தெல்லாம் பேசுவது இல்லையே. ஏன்?

நான் சொல்வதைத் தவறாகச் சித்தரிப்பதற்கு ஒரு படையே இருக்கிறது. சினிமாவில் பல வருடங்களைத் தாண்டி பிழைத்து வருகிறேன். பலரும் சொல்வதைப் போல, சினிமா எளிது அல்ல. மிகவும் கடினமானது. சினிமாத் துறையில் தினமும் காலையில் எழுந்து ஒரு போராளியாகக் களத்துக்குச் சென்று சண்டையிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஆகையால், சமூகம் சார்ந்த கோபம் வரும்போது, என்னுடைய வார்த்தையில் எழுதுவதற்கான சுதந்திரம் ட்விட்டர் தளத்தில் இருக்கிறது. அதைப் பேட்டியில் பேசத் தொடங்கினால் தேவையின்றி சர்ச்சையாகிறது.

அதனால், நான் என்ன நினைக்கிறேன் என்று ட்விட்டரில் சொன்னால் போதும் என நினைக்கிறேன். எனது படம் எந்ததொரு சர்ச்சையிலும் சிக்காமல் வெளியாகி, மக்கள் திரையரங்குக்கு வந்து பார்த்தால் போதும். திரையுலகில் இருக்கும் பிரச்சினைகளைச் சமாளிப்பதே போதுமானதாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in