Last Updated : 17 Nov, 2017 09:20 AM

 

Published : 17 Nov 2017 09:20 AM
Last Updated : 17 Nov 2017 09:20 AM

ரசிகர்களின் நண்பர்!

ஜெமினி கணேசன் 98-வது பிறந்த தினம், நவம்பர் 17

சிறிய நடிகரோ பெரிய நடிகரோ தன் ரசிகர்களோடு கைகுலுக்குவார்கள். ஆட்டோகிராஃப் போட்டுத் தருவார்கள். அதிகம்போனால் ரசிகர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு போட்டோ எடுத்துக்கொள்வார்கள். அன்றும் இன்றும் பெரும்பாலான நடிகர்கள் இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை அவர்களது தொழிலும் புகழும் அவர்களுக்கு ஏற்படுத்திவிடுகின்றன. இதில் ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் முற்றிலும் மாறுபட்டவர்.

தன் ரசிகர்களைக் கடைசிவரை நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் பார்த்தவர். ரசிகர்களின் இல்லத் திருமணம், விழாக்களுக்கு எந்த பந்தாவும் காட்டாமல் அலுப்பின்றி வந்துசெல்வார். அப்படிப்பட்டவருடன் அவரது மறைவுவரை 40 ஆண்டுகள் நெருங்கிப் பழகிய ரசிகர்களில் நானும் ஒருவன்.

அவரும் சிறந்த ரசிகரே

ஒரு கலைஞன் சிறந்த ரசிகனாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு ஜெமினி சிறந்த எடுத்துக்காட்டு. பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் தன் ரசிகர்களுடன் எளிய முறையில் கொண்டாடுவார். அப்போது எங்களுடன் அமர்ந்து தன் திரைப்படத் துறை அனுபவங்களை மனம்விட்டுப் பகிந்துகொள்வார். அவர் கூறும் ஒவ்வொரு சம்பவத்திலும் ஒரு நல்ல செய்தியோ அறிவுரையோ ஒளிந்திருக்கும். வார்த்தைகளை வீணாக்க மாட்டார்.

‘லலிதா’ படப்பிடிப்பின்போது இவருக்கு ஜோடியாக நடித்த சுஜாதாவின் நடிப்பைப் பற்றி நாங்கள் கருத்து கூறுமாறு கேட்டோம். அவரின் நடிப்பைப் பாராட்டியவர், அப்படியே ‘நடிகையர் திலக’த்தின் நடிப்புத் திறனை தேர்ந்த ரசிகனைப் போலப் படங்களையும் காட்சிகளையும் குறிப்பிட்டு அவற்றில் சாவித்திரியின் நடிப்பைப் பற்றி நுணுக்கமாகக் குறிப்பிட்டார். “ ‘கைகொடுத்த தெய்வம்’ சாவித்திரி – ‘பாசமலர்’ சாவித்திரி – ‘ஆயிரம் ரூபாய்’ சாவித்திரி - ‘மிஸ்ஸியம்மா’ சாவித்திரிபோல் ஒரு நடிகரை இந்தத் திரையுலகம் இனிக் கண்டெடுக்க முடியாது. ‘நடிகர் திலக’த்துக்கு இணையாக நடித்த சாவித்திரியை நம்மால் மறக்க முடியுமா?” என்று மிகவும் பெருமையாக எங்களில் ஒருவர்போல் மாறிக் கேட்டார்.

‘மனமுள்ள மறுதாரம்’ படத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான மறைந்த நடிகர் பாலாஜியை நடிக்கவைத்துவிட்டு விலகிக் கொண்டார். பாலாஜி பிற்காலத்தில் தன் முதல் தயாரிப்பான ‘அண்ணாவின் ஆசை’யில் ஜெமினியையும் சாவித்திரியையும் நடிக்கவைத்தது அதற்குச் சான்று.

தயாரிப்பாளர்களின் நடிகர்

70-களில் இவரின் படங்கள் ஒரே மாதத்தில் இரண்டு மூன்று வெளியானதை என்னைப் போன்ற அவரின் ரசிகர்கள் விரும்பவில்லை. அவரிடம் சென்று , ‘ஒவ்வொரு படத்துக்கும் போதிய இடைவெளி இருக்க வேண்டும் அண்ணா, நீங்கள் தலையிட்டுப் படவெளியீட்டை ஒழுங்குபடுத்துங்கள்’ எனக் கூறினோம். அவரோ அதிக வட்டிக்குக் கடன் பெற்றுப் படம் எடுக்கும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் படம் வெளியே வந்தால்போதும் என்று இருக்கும்போது ,நான் அவற்றைத் தாமதப்படுத்துவது எப்படித் தர்மமாக இருக்கும். என் முகமும் நடிப்பும் உங்களுக்கு அலுத்துவிட்டால் நான் நடிப்பதை அப்போதே நிறுத்திக்கொண்டுவிடுவேன். ஆனால், பட வெளியீட்டில் மூக்கை நுழைக்க மாட்டேன்” என்று கூறி, தயாரிப்பாளர்களின் நிலையை உணர வைத்தார்.

17chrcj_Punnagai ‘புன்னகை’ படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி right

சக திறமையாளர்களை மதிப்பதில், திறமை கொண்ட வளரும் கலைஞர்களை வளர்த்துவிடுவதில் அவருக்கு இணை அவர்தான். கமல்ஹாசனை ‘இயக்குநர் சிகரம்’ பாலச்சந்தரிடம் இவர் அறிமுகம் செய்து வைத்தது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்தில் வெள்ளையத்தேவன் கதாபாத்திரத்தை முதலில் ‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஏற்று நடிப்பதாக இருந்த நிலையில் பிறகு ஏனோ அவர் மறுத்துவிட, ஜெமினி கணேசனை இயக்குநர் பிரசாத்தும் சிவாஜி கணேசனும் சந்தித்து அக்கதாபத்திரத்தை ஏற்று நடிக்க அழைத்தனர். அப்போது “ என் மனைவி சாவித்திரி கருவுற்று இருக்கிறாள். நான் அவளது அருகிலேயே இருந்தாக வேண்டும். சென்னையைவிட்டு ஜெய்பூர்வரை வர முடியாது, என்னை மன்னித்துவிடுங்கள்.” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், நடிகர் திலகம், “தினசரி நீ எப்போது வேண்டுமானாலும் மனைவியுடன் போனில் பேசிக்கொள். இதற்காகவே ஒரு டெலிபோன் லைனை உனக்குத் தனியாக ஏற்பாடுசெய்துவிடச் சொல்கிறேன்” என்று கூறிச் சம்மதிக்கவைத்தார்கள்.

அப்படியும் ஜெமினிக்கு சமாதானம் ஏற்படாமல் ஒரு கோரிக்கையை வைத்தார். “ எஸ்.எஸ்.ஆர். ஏன் நடிக்கவில்லை என்ற தனது தனிப்பட்ட காரணத்தைக் கடிதம் வழியாகத் தெரிவித்தால் மட்டுமே நான் நடிக்க ஒப்புக்கொள்வேன்” என்றார். தன்னால் மற்றவர் மனது எக்காரணம் கொண்டும் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார். ஜெமினி இப்படிக் கூறியதும் அதை உடனடியாக எஸ்.எஸ்.ஆருக்கு இயக்குநர் தெரிவிக்க, அவர் உடனே ஜெமினிக்குப் பேச, அதன் பிறகே வெள்ளையத்தேவன் கதாபாத்திரத்தை ஏற்றுச் சிறப்பாக நடித்தார். ஜெய்பூரில் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜெமினியை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்குப்போகாமல் நேரே சாவித்திரியிடம் கொண்டுவந்து சேர்த்தாராம் சிவாஜி. இதை நன்றியுடன் எங்களிடம் பகிர்ந்திருக்கிறார் ஜெமினி.

துணிவும் பணிவும்

அவர் நடிக்கும் படப்பிடிப்புத் தளங்களுக்கு எப்போதேணும் நாங்கள் செல்வதுண்டு. அப்போது செட்டில் இருக்கும் சக நடிகர்கள், இயக்குநர் எனத் தன் அருகில் இருக்கும் முக்கியஸ்தர்களிடம் எங்களைத் தன்னுடைய ‘மை ஃபேன்ஸ், கம் ஃபிரெண்ட்ஸ்’ என்று அறிமுகம் செய்து வைப்பார்.

1998-ல் சென்னை பாம்குரோவ் விடுதியில் அவருடன் நெருங்கிப் பழகிவந்த ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து அவரது பொன்விழா ஆண்டைக் கொண்டாடினோம். அதில் பல திரைப் பிரபலங்கள் பாராட்டிப் பேசினார்கள். அப்போது ராதாரவி பாராட்டிப் பேசும்போது, ‘எம்.ஜி.ஆர் குண்டடி பட்டிருந்த தருணத்தில் நடைபெற்ற தன் சகோதரி திருமணத்தில் கலந்துகொள்ளும் தைரியம் யாருக்கும் இல்லாதபோதும் ஜெமினி – சாவித்திரி தம்பதி கலந்துகொண்டு சிறப்பித்ததை’ சுட்டிக்காட்டினார். “எனக்கு ‘இயக்குநர் சிகரம்’ என்ற பட்டத்தை வழங்கியது மதுரை ஜெமினி ரசிகர் மன்றம்.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் பணி உணர்வையும் பணிவு உணர்வையும் ஜெமினியிடம் கண்டிருக்கிறேன். ‘புன்னகை’ படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பு முடித்து, அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்த நேரம் ‘இப்பொழுதுதான் எனக்குப் படத்தின் கதையே புரிந்தது’ என்று என்னிடம் இயல்பாகக் கூறியவுடன், நான் நொந்தே போனேன். அதேநேரம் ஆச்சரியமும் அடைந்தேன். இயக்குநர் கேட்டதைத் தந்துவிட்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றுவிடும் ஒரே நடிகர் ஜெமினி என்பதை அந்தக் கணம் உணர்ந்தேன்” என்று அந்த விழாவில் பாலசந்தர் பாராட்டினார்.

தன்னுடைய ரசிகர்கள் இவ்வளவு சிறந்த விழாவை எடுத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள, அந்த விழாவில் அங்கே வந்திருந்த தன் நீண்டகால ரசிகர்கள் அனைவருக்கும் தங்கமோதிரம் அணிவித்து மகிழ்ந்த தங்க மனசுக்காரர் ஜெமினி.

17chrcj_gemini sridar

தொடர்புக்கு: sridharsulochana@gmail.com
படங்கள் உதவி:ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x