

மிக விறுவிறுப்பான ஓர் இணையத் தொடரைப் பெண்களே முதன்மைத் திரைக்கதை எழுத்தாளர்களாக இருந்து எழுதினால் எப்படி இருக்கும்? ‘வில்லனெல்’ (Villanelle) என்கிற பெண் கதாபாத்திரத்தை முன்வைத்து நான்கு குறுநாவல்களை 2014 முதல் 2016 வரை லூக் ஜென்னிங்ஸ் என்கிற எழுத்தாளர் எழுதி வெளியிட்டார். பின்னர், இந்த நான்கு குறுநாவல்களையும் ஒன்று சேர்த்து ஒரு மின்புத்தகம் வெளியிடப்பட்டது. அதுதான் ‘கில்லிங் ஈவ்’ ‘Killing Eve’ என்கிற, நாம் இங்கே அலசப்போகிற சீரீஸுக்கு அடிப்படையாக அமைந்த புத்தகம். அதை வைத்துக்கொண்டு மொத்தம் நான்கு சீசன் கள் எழுதப்பட்டு வெளியான சீரீஸ் இது.
வில்லனெல் என்பவள் 24 வயது மதிக்கத்தக்க ஒரு கொலையாளி. அதிலும் மிகச்சிறப்பான கொலையாளி. அவளிடம் யார், என்ன என்று சொல்லிவிட்டால் போதும். கச்சிதமாகக் கதையை முடித்து விடுவாள். இதனால் ‘The Twelve’ என்கிற அமைப்பிடம் வேலைக்குச் சேர்ந்து, அவர்கள் சொல்லும் ஆட்களைக் கொலை செய்துவருகிறாள்.
‘The Twelve’ அமைப்புக்கும் வில்லனெல்லுக்கும் பாலமாக இருந்து, கொலைகளுக்கான ‘அசைன்மெண்டு’களை வாங்கிக் கொடுப்பவர் கான்ஸ்டண்டின் வாசிலியேவ் என்கிற ரஷ்ய ஆசாமி. அவர், வில்லனெல்லின் வளர்ப்புத் தந்தை போன்றவர்.
ஒரு கொலை.. ஒரு துரத்தல்.. இன்னொருபக்கம், வியன்னா நகரில் ஒரு கொலை நடக்கிறது. ஒரு ‘பிம்ப்’பை யாரோ ஒருவர் கொன்றுவிட்டதாக, ‘MI6’ (ஆம். ஜேம்ஸ் பாண்டின் தலைமைக் கழகமேதான்) என்கிற பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு ஒரு புதிய ‘கேஸ்’ வருகிறது. MI6 உளவுத்துறையின் ரஷ்யப் பிரிவுத் தலைவியான கரோலின் மார்ட்டென்ஸுடைய கைக்கு இந்த வழக்கு வந்து சேர்கிறது. ‘MI6’இல் வேலை செய்யும் ஈவ் பொலாஸ்ட்ரி என்கிற இளம் பெண் அதிகாரி, அந்தக் கொலையைச் செய்தது ஒரு பெண்தான் என்கிற ஒரு தியரியை முன்வைக்கிறார். எப்படி? கொலை செய்யப்பட்ட நபரின் காதலி சிக்குகிறாள்.
அந்தப் பெண் கடுமையான போதையில் இருந்தபோதும் ஈவ் பொலாஸ்ட்ரியால் துருவித் துருவி விசாரிக்கப்படுகிறாள். ஆனால் ஒரு சின்ன ‘க்ளு’ கூட கிடைக்கவில்லை. ஆனால், விசாரணையின்போது போதையில் அந்தப் பெண் போலிஷ் மொழியில் சொல்லியதைச் சட்டவிரோதமாகப் பதிவுசெய்யும் ஈவ், அதை போலிஷ் நாட்டைச் சேர்ந்த அப்பெண்ணின் கணவனுக்குப் போட்டுக்காட்டி, அவரிடமிருந்து கிடைக்கும் ஒரு க்ளூவை வைத்து, கொலை செய்தது ஒரு பெண்தான் என்பதைப் புரிந்துகொள்கிறார். இப்போது அந்தக் கொலைகாரி யார் என்பதை நோக்கி விசாரணை அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும்.
ஆனால், சற்றும் எதிர்பாராத நேரத்தில், விசாரணை நடந்து கொண்டி ருக்கும்போதே வில்லனெல் திறமையாக உள்ளே நுழைந்து, அந்த சாட்சியையும் தடுக்க வந்த இரண்டு போலீஸ்காரர்கள், ஒரு நர்ஸ் ஆகியோரையும் சேர்த்துக் கொன்றுவிட்டுத் தப்பிக்கிறாள்.
விசாரணையின் பாதுகாப்பை தன் பொறுப்பில் வைத்திருந்த ஈவின் வேலை இதனால் பறிபோகிறது. இருந்தாலும் ரஷ்ய MI6 உளவுப்பிரிவின் தலைவியான கரோலின் மார்ட்டென்ஸ் ஈவின் வீட்டுக்கு வந்து, இந்தக் கொலையில் துப்பறிவதற்காகத் தன்னுடன் இணைந்து வேலை செய்யச் சொல்கிறார்.
இதிலிருந்து கதை தொடங்குகிறது. உலகின் பயங்கரமான கொலைகாரர்களில் ஒருத்தியான வில்லனெல்லுக்கும் அவளைத் துரத்தும் காவல் அதிகாரி ஈவுக்கும் ஒரு பயங்கரமான போட்டி தொடங்குகிறது. அதில் யார் வெற்றிபெற்றார்கள் என்பதே சீரீஸின் கதை.
பெண் திரைக்கதை எழுத்தாளர்கள்: இந்த சீரீஸின் முதல் ஈர்ப்பான அம்சம் நடிகர்கள் தேர்வு. ‘ஈவ்’ஆக நடிக்கும் ஸாண்ட்ரா ஓ (Sandra Oh), ‘வில்லனெல்’ ஆக நடிக்கும் ஜோடி கார்னர் (Jodie Corner) ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் போட்டி, அத்துடன் சேர்ந்த கெமிஸ்ட்ரியும் இருக்கிறது.
ஒரு கட்டத்தில் வில்லனெல் என்ன நினைக்கிறாள் என்பதுகூட ஈவுக்குப் புலப்படத் தொடங்குகிறது. எப்படியாவது வில்லனெல்லைப் பிடித்துவிடவேண்டும் என்று வெறித்தனமாக ஈவ் செயல்பட, இதனால் ஈவின் மேல் கோபம் கொள்ளும் வில்லனெல், ஈவைக் கொலைசெய்ய முடிவெடுக்கிறாள்.
இந்த இரண்டு பெண்கள் ஒருவரையொருவர் வெல்ல என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை மிக சுவாரஸ்யமாக இந்த சீரீஸ் விரித்துச் செல்கிறது. இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ பாணியின் பாதிப்பு இந்த சீரீஸில் ஓரளவு தெரிகிறது - ஆங்காங்கே அவல நகைச்சுவை, ஆங்காங்கே அபத்த நிமிடங்கள் என.
முதலிலேயே சொன்னபடி, இரண்டு பெண்களைப் பற்றிய சீரீஸ் என்பதால், ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு பெண் திரைக்கதை ஆசிரியர் தேர்வுசெய்யப்பட்டு, அவரது மேற்பார்வையில் திரைக்கதை எழுதும் புதியதொரு முறையை இந்த சீரீஸில் பின்பற்றினர்.
Phoebe Waller-Bridge, Emerald Fennell, Suzanne Heathcote, Laura Neal ஆகிய நால்வரும்தான் அந்தத் திரைக்கதை ஆசிரியர்கள். இந்த முயற்சியால் என்ன நடந்தது என்றால், ஈவும் சரி, வில்லனெல்லும் சரி, பெண்களாக அவர்களது மனதில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் இந்தத் தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். பெண் எழுத்தாளர்களே இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் எழுத்தின் வழி கையாண்டதால் சிறுசிறு உணர்வுகள், வசனங்கள் என்று கவனிக்கவும் சில்லிடவும் வைக்கும்.
இருவேறு பெண்களின் வாழ்க்கை: இந்த சீரீஸில் நாம் கவனிக்கவேண்டியது - போலீஸாக வரும் ஈவ், கொலைகாரியாக வரும் வில்லனெல் ஆகிய இருவரது வாழ்க்கை. ஈவின் வாழ்க்கை பிரச்சினைகள் நிரம்பியதாக இருக்கும். கணவனோடு சாதாரணமாகச் செல்லும் அதில், எந்தவிதமான மகிழ்ச்சியோ திடீர் ஆச்சர்யங்களோ எதுவும் இல்லாத வழக்கமான வாழ்க்கை.
ஆனால், ஏராளமான பணம், வித்தியாசமான மனிதர்கள், உலகம் சுற்றுதல் என்று வில்லனெல்லின் வாழ்க்கை, கணக்கில் அடங்காத ஆச்சர்யங்களைக் கொண்டிருக்கிறது. இருவேறு பெண்களின் வாழ்க்கை மாறுபாடு, முரண்பட்டு மோதும் இடங்களும் அவர்கள் உணர்வால் பிணையும் புள்ளிகளும் சீரீஸில் பேசப்பட்டிருக்கும்.
மிகக் கொடூரமான ஒரு கொலைகாரி எப்படி இருப்பாள்? அவளது வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்தால், இதில் வில்லனெல்லின் வாழ்க்கை அப்படி இருக்காது. வில்லனெல் மிக அப்பாவியான ஒரு பெண் போலவும் நடந்துகொள்வாள். அதேவேளை, எந்த இரக்கமும் இல்லாமல் கழுத்தை நிஜமாகவே அறுக்கக் கூடியவள். எந்த நேரத்தில் எப்படி இருப்பாள் என்பது யாருக்கும் தெரியாது. இந்தக் கதாபாத்திர வடிவமைப்பு எனக்குப் பிடித்தது.
சீரீஸில் என்னைக் கவர்ந்தது அதன் இசை. ஆங்காங்கே வரும் இசைத் துணுக்குகள் அற்புதமாக காட்சிகளுக்கு நெருக்கமாகக் கையாளப்பட்டிருக்கும். உதாரணமாக சீரீஸின் தொடக்கத்தில் முதல் எபிசோடில் வில்லனெல் ஒரு கொலை செய்யும்போது அந்த விழாவில் இசைக்கப்படும் இசை. இப்படிப் பல இடங்களில் அட்டகாசமான இசைப் பங்களிப்பு இதில் உண்டு.
‘Fleabag’, ‘Bodyguard’, ‘Orange is the new black’, ‘Orphan Black’, ‘The Chair’ போன்ற சில இணையத் தொடர் ஆக்கங்கள் ‘Killing Eve’ போன்ற கதை, கதாபாத்திரங்களைக் கையாண்டிருப்பவை. இதை அமேசான் பிரைமில் காணலாம்.
- rajesh.scorpi@gmail.com