

தி
ரையரங்கில் படம் பார்க்கும்போது, ஏதாவது ஒரு தருணத்தில் கைதட்டி விசிலடித்து ஆர்ப்பரிக்கத் தோன்றும். ஆனால், மற்றவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்களோ என்ற சங்கோஜத்தால் அதைச் செய்யாமல் நம் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொள்வோம். நம் விருப்பங்கள் ஒன்றாகவும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் வேறாகவும் இருக்கும்போது நாம் நம்மை அறிந்தோ அறியாமலோ இரட்டை வேடம் போட வேண்டியிருப்பதை அழுத்தமாகச் சுட்டிக் காண்பிக்கிறது ‘இஷா’(Isha) என்கிற குறும்படம்.
சார்லஸ் மைக்கேல் என்பவர் இயக்கியிருக்கும் இந்தக் குறும்படம் நான்கு நடிகர்களை வைத்து 11 நிமிடங்களுக்குள் ஒரு நுட்பமான உளவியல் சிக்கலை அறிமுகப்படுத்துவதுடன் சிறந்த திரையனுபவத்தையும் தருகிறது.
பப் ஒன்றில் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கிறாள் இஷா. மறுநாள் காலை, தன் கல்லூரி புராஜக்ட் பணிகளைத் தொடங்கத் தயாராகும்போது முதல் நாள் அவளுடன் பப்பில் இருந்த பையன் வந்து அவள் கையைப் பிடித்து இழுத்து அணைக்க முயல்கிறான். மிரண்டுபோய்,எதுவும் புரியாமல் அவனிடமிருந்து விலகிச் செல்கிறாள் இஷா. “நீ என்னை ஏமாற்றுகிறாய்” என்று திட்டிவிட்டுச் சென்றுவிடுகிறான் அந்த இளைஞன். இதனால் ஏற்படும் குழப்பத்தில் புராஜக்ட் பணிகளைக் கவனிக்க மனமில்லாமல் வீட்டுக்குச் சென்றுவிடுகிறாள் இஷா. அங்கே புகைபிடித்துக்கொண்டிருக்கும் அவளுடைய அக்காவிடம், கழிவறைத் தொட்டிக்குள் சிகரெட் துண்டுகள் கிடந்ததாக இஷா கடிந்துகொள்கிறாள். “எனக்கு சிகரெட் பிடிப்பவர்களைக் கண்டாலே பிடிக்காது என்று உனக்குத் தெரியாதா அக்கா” என்று குழப்பமும் வேதனையும் கலந்த குரலில் கேட்கிறாள் இஷா. அன்றைய இரவே பப்புக்குச் சென்று அந்த நண்பனைத் தேற்றி மீண்டும் அவனுடன் நெருக்கம் காட்டுகிறாள்.
இதில் யார் உண்மையான இஷா? பப்புக்குச் செல்பவளா, சிகரெட்டின் வாசனையே பிடிக்காதவளா? ஆண் நண்பனுடன் நெருக்கமாக இருப்பவளா, ஆணின் தீண்டலையே வெறுப்பவளா? அல்லது இவள்தான் அவள், அவள்தான் இவளா? எது நன்மை, எது தீமை? என்றெல்லாம் எந்த விதமான தீர்ப்பும் சொல்லாமல் வாழ்வில் நாம் எதற்கெல்லாம் நம் விருப்பங்களை அடக்கிக்கொண்டு வேறொரு முகமூடி போட்டுக்கொள்கிறோம் என்று யோசிக்கவைக்கிறது இந்த இந்திப் படம்.
சிலிகுரி சர்வதேசக் குறும்பட விழா 2014, தர்ட் ஐ ஆசியத் திரைப்பட விழா 2015, புனே குறும்பட விழா 2014 ஆகியவற்றில் திரையிடப்பட்டுப் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதுபோன்ற நுட்பமான உளவியல் சிக்கல்கள் நல்ல தாக்கம் செலுத்தும் விதத்தில் அலசப்படுவது குறும்படம் என்கிற ஊடகத்தின் சாத்தியம் குறித்த நம்பிக்கையை விதைக்கிறது.