

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடுகள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரித்திருக்கலாம். எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில், கராச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் சல்மான்கான் நடித்த ‘ஹேங் ஓவர்’ படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அந்த அளவுக்கு இந்தியாவின் இந்திப் படங்களைக் கொண்டாடித் தீர்த்துவிடுகிறார்கள் பாகிஸ்தானியர்கள். இதுதான் நிதின் கக்கார் இயக்கியிருக்கும் பிலிமிஸ்தான் படத்தின் மையப்புள்ளி. சினிமா எனும் கனவுலகம் இந்தியா, பாகிஸ்தான் மக்களை எப்படி இணைத்து வைத்து அழகு பார்க்கிறது என்பதையும், பாகிஸ்தான் எல்லைக்குள் நடமாடும் தீவிரவாதிகள் சிலரிடம் எதிர்பாராத விதமாகச் சிக்கிக்கொள்ளும் ஓரு இந்தியனை அதே சினிமா எப்படிக் காப்பாற்றுகிறது என்பதையும் குத்திக் கிழிப்பது போன்ற நகைச்சுவை, நகைமுரண் ஆகிய இரண்டையும் சரியான கலவையில் சித்தரித்திருக்கும் படம்தான் ‘பிலிமிஸ்தான்’.
இந்தியாவுக்கு வரும் அமெரிக்க ஆவணப்படக் குழுவுடன் உதவி இயக்குநராகப் பயணிக்கிறார் சினிமாவில் ஷாருக் கான், சல்மான் கான் போலப் பெரிய ஹீரோவாக வேண்டும் என்ற வேட்கை கொண்ட கதையின் நாயகன். ஆவணப்படக் குழுவைக் கடத்த நினைத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், தவறுதலாய் நமது ‘கனவு’ நாயகனை மட்டும் கடத்தி கொண்டு, இரு நாட்டின் எல்லை யருகில் உள்ளப் பாகிஸ்தான் கிராமம் ஒன்றில் பணயக் கைதியாக வைத்துக்கொள்கிறார்கள்.
ஆள்மாற்றிக் கடத்திக்கொண்டு வந்தவனை என்ன செய்வது என்று தெரியாமல் நாட்கள் ஓட, வசனங்களில் ‘சர்காஸ்டிக்’ காமெடி சரவெடி தொடங்குகிறது.
கடத்தப்பட்ட மறுநாள் காலையில் எழும் நாயகனுக்குச் சிற்றுண்டியாகச் சப்பாத்தி கொடுக்கிறார்கள் தீவிரவாதிகள். தான் இருப்பது பாகிஸ்தான் என்று தெரிந்ததும், அதிர்ச்சியாகாமல் இருக்கும் நாயகனைப் பார்த்து “நீ சிக்கியிருப்பது பாகிஸ்தான் என்பது கூடத் தெரியலையா? என்று கேட்கிறார்கள்.
நாயகனோ “அதே முகம் அதே அதே சப்பாத்தி, ஊரு மட்டும் பாகிஸ்தான் என்றால் எப்படி? ” என்று கேட்கிறார். இன்னும் இந்திப் படத் திருட்டு டிவிடியைக் கடத்தி வரும் கதாபாத்திரம், வயதான மருத்துவர் பிரிவினக்கு முன்பு தான் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்த்து ஏங்கும் இடம் எனச் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களைக் கூட அர்த்தமுள்ளதாகவும் நையாண்டியாகவும் செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு கட்டத்தில் கடத்திவரப்பட்ட நாயகனிடமே கேமராவைக் கொடுத்து மிரட்டல் வீடியோ எடுக்கும் காட்சியில் மொத்தத் திரையரங்கும் விழுந்து சிரிக்கிறது. சன்னி என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஷரிஹாஸ்மி உட்பட அனைவரும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஷரிப் படத்துக்கான வசனங்களை எழுதுவதிலும் பங்களிப்பு செய்திருக்கிறார். நூல் பிடித்தமாதிரி ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது திரைக்கதை. இருநாடுகளின் சகோதரத்துவத்துக்கு மறைமுகமாகக் கொடிபிடிக்கும் இந்தப் படம் சமாதானத்தின் படைப்பாகி நிற்கிறது.
2012-ல் தயாராகி உலகப் பட விழாக்களில் விருதுகளை அள்ளி வந்திருக்கும் இந்தப் படம் 2012-ம் ஆண்டு சிறந்த இந்திப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது. என்றாலும் திரையரங்கில் வெளியாக சிரமப்பட்டுவந்த இந்தப் படத்தை வெளிக்கொணர யூடிவி மோஷன் பிக்ஸர்ஸ் நட்புக்கரம் நீட்டியிருக்கிறது.