திரைப்பார்வை: கனவுகளை வென்றெடுக்கும் உரிமை - சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (இந்தி)

திரைப்பார்வை: கனவுகளை வென்றெடுக்கும் உரிமை - சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (இந்தி)
Updated on
2 min read

‘க

னவுகளை நனவாக்குவதற்குத்தானே தினசரி நாம் தூங்கி எழுந்துகொள்கிறோம்?’ என்று கேள்விகேட்கும் ஒரு பதினைந்து வயதுச் சிறுமியின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’. அறிமுக இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம், குடும்ப வன்முறையைப் பின்னணியாகக் கொண்டுள்ளது.

வடோதராவில் வசிக்கும் பதினைந்து வயது இன்சியாவுக்கு (ஸாய்ரா வசீம்) பாடகியாகும் கனவுள்ளது. குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும் தன்னுடைய தாய் நஜ்மாவை (மெஹர் விஜ்) மீட்பது அதைவிடப் பெரிய கனவு அவளுக்கு. வன்முறையாளராகவும் பழமைவாதியுமாக இருக்கிறார் இன்சியாவுடைய தந்தை (ராஜ் அர்ஜுன்). அவருக்கு மகளைவிட மகனின் மீதே அதிகக் கரிசனம். தாய்-மகள் இருவருமே குடும்ப வன்முறையின் பிடியிலிருந்து தப்பிக்க ஆசைப்படுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் குடும்ப வன்முறை எல்லை மீற, தாயை விவாகரத்து செய்துவிடும்படி துணிச்சலுடன் சொல்கிறாள் இன்சியா. ஆனால், பொருளாதாரரீதியாகக் கணவனைச் சார்ந்திருக்கும் நஜ்மாவுக்கு அது சுலபமானதாகத் தெரியவில்லை.

இன்சியா வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் சிந்தித்துச் செயல்படுகிறாள். தனது இசைத் திறனால் சாதித்துவிட்டால், தாயைக் குடும்ப வன்முறையிலிருந்து மீட்டுவிடலாம் என்று நம்புகிறாள் அவள். அதற்காக முயல்கிறாள். முயற்சிகளுக்குப் பள்ளித் தோழன் சிந்தன் (தீர்த் ஷர்மா) உதவுகிறான். இந்தச் சூழலில், அவளுக்குக் கிடைக்கும் பாலிவுட் இசை அமைப்பாளர் சக்தி குமாரின் (ஆமிர் கான்) அறிமுகம் தன் கனவை நனவாக்க உதவும் என்று நம்புகிறாள் அவள். இன்சியாவின் கனவுகளை நனவாக்கும் பயணம்தான் ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’.

படத்தின் திரைக்கதை நிதானமாகப் பயணிக்கிறது. 150 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படம், இன்சியாவின் குடும்பச் சூழலைத் திரையில் நிறுவுவதற்குப் போதிய நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் படத்தின் நோக்கத்தை ஆரம்பத்திலேயே பார்வையாளர்களுக்குக் கடத்திவிடுகின்றன. கொடூரமான தந்தை, சாந்தமான தாய், லட்சியச்சிறுமி, அன்பான தம்பி என்ற வழக்கமான குடும்பத்தைச் சுற்றி திரைக்கதை பயணிப்பதுபோல் ஆரம்பத்தில் தோன்றுகிறது.

ஆமிர் கானின் இசை அமைப்பாளர் சக்தி குமார் கதாபாத்திரம் அறிமுகமானவுடன் படத்தின் தொனி சற்று மாறுகிறது. பாலிவுட்டில் புகழ்மங்கித் தனித்துவிடப்பட்டிருக்கும் ஓர் இசை அமைப்பாளராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் ஆமிர். நகைச்சுவையான கதாபாத்திரம், ஒரு தீவிரமான திரைப்படத்தில் சிரிப்பதற்கான வாய்ப்பைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது. இன்சியா-சிந்தன் பள்ளிக்காலக் காதல் கதையும் படத்தின் இன்னொரு அழகான அம்சம்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஒரு சிறுமி, சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி அதிலிருந்து மீள்வதாகக் காட்சிப்படுத்தியிருப்பது நம்பிக்கையளிக்கிறது. இன்சியா கதாபாத்திரத்தில் ஸாய்ரா வசீம் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தந்தையின் கொடூரத்தைச் சகித்துக்கொள்ள முடியாத இயலாமையில் சுவரில் கைகளில் குத்திக்கொள்ளும் காட்சி, சிந்தனிடம் ‘பாஸ்வேர்டை’ச் சொல்லிவிட்டு வெட்கப்படும் காட்சி, கோபத்தில் கிட்டாரையும் லேப்டாப்பையும் வீசியெறியும் காட்சி என எல்லாக் காட்சிகளிலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார் ஸாய்ரா.

கனவு காணுவதற்கு மட்டுமல்லாமல் அவற்றை நனவாக்குவதற்கான உரிமையும் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது இந்தத் திரைப்படம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in