

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘2.0’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துவருகின்றன. இந்தப் படத்தில் கதாநாயகன் ரஜினி பேராசிரியர் போரா, சிட்டி ரோபோ என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஆனால், வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமார் இந்தப் படத்தில் பன்னிரண்டு விதமான தோற்றங்களில் வருகிறாராம்! அந்தப் பன்னிரண்டு தோற்றங்களுக்கும் பொருந்தும் வகையில், பன்னிரண்டு விதமான குரல்கள் இருக்கும்படி ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி அக்ஷய்குமாரை டப்பிங் பேச வைத்து மாற்றியிருக்கிறாராம் ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி.
கடந்த ஆண்டு த்ரிஷா நடிப்பில் வெளியான ‘நாயகி’, ‘கொடி’ ஆகிய இரண்டு படங்களும் படுதோல்வியடைந்தன. தற்போது ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘96’, ‘மோகினி’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் ‘ஹே ஜூட்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்துவருகிறார். இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கும் படம் ‘பரமபத விளையாட்டு’. அறிமுக இயக்குநர் திருஞானம் இயக்கிவரும் படம். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் 200 வருடங்கள் பழமையான ஆற்காடு கோட்டையில் இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. த்ரிஷாவுடன் நந்தா, ரிச்சர்ட் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவரும் இந்தப் படத்துக்கு இசை அம்ரிஷ்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘இறைவி’ படத்தில் நடித்த பின்னர் எஸ்.ஜே.சூர்யா முழுநேர நடிகராக வலம்வருகிறார். இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்திருக்கிறது. இம்முறை கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இவருடன் ‘டிமான்டி காலனி’ படத்தில் நடித்த சனந்த் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் இயக்குநர், கதாநாயகி போன்ற விவரங்களை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘குப்பத்துராஜா’. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து முடித்திருக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துவருகின்றன. பாலக் லால்வானி என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படமும் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகிவரும் ‘வேலைக்காரன்’ திரைப்படமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 22-ம் தேதி வெளியாகி, வசூல் களத்தில் மோத இருக்கின்றன.