

பி
ரிண்ட் அடித்தது போல, பிரபலமான ஒரு பாடலைக் கொடுத்தால் அதை அப்படியே பாடி விடுகிறார்கள் தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோவில் பாடும் ‘சூப்பர் சிங்கர்’ பாடகர்கள். அப்படிப்பட்டவர்களிடம் புதியதாக ஒரு பாடலைக் கொடுத்தால் அதில் தனது தனித்தன்மையை வெளிப்படுத்திப் பாட முடியாமல் தேங்கிவிடுகிறார்கள் என்று கடந்தவாரம் கூறியிருந்தேன். அது அவர்களை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, அவர்கள் அதைக் கடந்து சிறந்த பாடகர்களாகப் பரிமளிக்க வேண்டும் என்பதற்காகவே. அதே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தீர்கள் என்றால் நடுவர்களின் வாயிலிருந்து “சுருதி விலகிவிட்டது” என்ற இரண்டு வார்த்தைகள் அடிக்கடி வந்து விழும். சுருதி எப்படி விலகும் என்று கேட்கலாம். அதற்கு முதலில் சுருதி என்றால் என்ன என்பதை எளிமையாகத் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம்.
ஸ்வரங்களை(Notes) நம் குரலால் பாடியோ கருவியால் இசைத்தோ இசையை உருவாக்குகிறோம் என்று தெரிந்து கொண்டீர்கள் இல்லையா? அந்த ஸ்வரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அதிர்வெண் இருக்கிறது. இதை அலைவரிசை எண்(Frequency Hz) என்றும் நாம் எளிமையாக அழைக்கலாம். ச-240 Hz, ரி- 256 Hz, க -300 Hz, ம-320 Hz, ப-360 Hz, த-384 Hz, நி-450 Hz என்று இந்த ஸ்வரங்களின் அதிர்வெண்களைக் குறித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் இசை முன்னோர்.
இப்போது ஒரு பாடல் அல்லது மெட்டின் வடிவம் என்பது எந்த ஸ்வரத்தில் தொடங்கி… எந்த ஸ்வரத்தில் தவழ்ந்து... எந்த ஸ்வரத்தில் நடந்து... எந்த ஸ்வரத்தில் மிதந்து பறந்தாலும் அதைப் பாடும் பாடகரோ கருவி கொண்டு வாசிக்கும் கலைஞரோ ஸ்வரங்களின் அலைவரிசையை விட்டு விலகிவிடாமல் அதாவது சுருதி பிசகாமல் இசைக்க வேண்டும். அப்படி சுருதி சுத்தமாகப் பாடினால் அல்லது இசைத்தால்தான் அந்த இசை அல்லது பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். இதில் தவறும்போது அது ‘சுருதி விலகல்’ ஆகிவிடுகிறது. இசைக்குப் பிரதானமாக இருப்பதனால்தான் சுருதியை ஒலியின் தாய் என்கிறார்கள். உலக அளவில் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சுருதி சுத்தம் (pitch standard) என்பதன் அதிர்வெண்ணாக A440 Hz-ஐக் குறித்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட “ஸ்ருதி’யைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல், இன்று சினிமா நட்சத்திரங்கள் பலரும் படத்தின் கமர்ஷியல் வேல்யூவைக் கூட்டுவதற்காகப் பாடகர் அவதாரம் எடுத்துவிடுகிறார்கள். இப்படிப் பாடும் நடிகர்களின் குரல் இனிமையாக இல்லை என்றால்கூடப் பாடியபின் அவர்களது குரலை ‘ஆட்டோ ட்யூன்’ அல்லது ‘மெலடைன்’ மென்பொருட்களை வைத்து இனிமையாக மாற்றிக் கொள்ளலாம். சுருதியே இல்லாமல் அவர்கள் கத்தியிருந்தால் கூட அதைச் சுருதிக்குள் பிடித்து உட்கார வைத்துவிடும் வேலையை இந்த மென்பொருட்கள் பார்த்துக்கொள்கின்றன ” என இன்று பல இசை விமர்சகர்கள் மிக அப்பாவித்தனமாக, அரைகுறையான கருத்துக்களைக் கூறிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
அதுமட்டுமே அல்ல, ‘ஆட்டோ ட்யூன் மென்பொருளின் வரவால் பின்னணிப் பாடகர்களின் பெருமைமிக்க இடம் இல்லாமல் போய்விட்டது’ என்று கூறுவது, கணினி இசை உலகுக்கு உள்ளே வந்து பார்க்காமல், விலகி நின்று தூரமாய்ப் பார்த்து, அதோ பூதம் என்று பயமுறுத்துவதைப் போல இருக்கிறது. இந்த இரண்டு மென்பொருட்களும் லேண்டிங் நோட் தவறிவிடுகிற இடங்களில் கொஞ்சமாக ‘அட்ஜட்ஸ்ட்’ செய்யும் வேலையை மட்டும்தான் செய்கின்றனவே தவிர, இவற்றைக் கொண்டு முழு ஸ்ருதியையும் சீர் செய்ய முடியாது. அப்படி முழு ஸ்ருதியையும் மென்பொருள் மூலமாகச் சரிசெய்ய முயன்றால், அது நாம் கம்போஸ் செய்த பாடலாகவே இருக்காது.
அவர் நடிகரோ நடிகையோ தொழில்முறைப் பாடகரோ, அவர்களுக்குக் குரல்வளமும், அவர்கள் எந்த லோ நோட், எந்த ஹைநோட் வரை பாடமுடியும் என்பது, கடவுள் கொடுத்த வரமான அவர்களது ஜீன் மற்றும் அதை மீறி கலைஞனாய் ஆக மேற்கொள்ளும் கடும் இசைப் பயிற்சியுமே காரணமாக அமைகின்றன. முயற்சியும் ஆர்வமும் அக்கறையும் இல்லாவிட்டால் ரெக்கார்டிங் ரூமுக்குள் நுழைகிற பாக்கியம் பாடகர் ஆக நினைக்கும் யாருக்கும் அமையவே அமையாது. நான் இசையமைத்த ‘வம்சம்’ படத்தில், நடிகர், இயக்குநர், சசிகுமார், சமுத்திரக்கனி, பாண்டிராஜ் ஆகிய மூவரையும் பாட வைத்தேன். ‘சுவடு சுவடு...’ என்று தொடங்கும் பாடல் அது.
பாடல் பதிவுக்கு முதல் நாளே என் ஸ்டுடியோவுக்கு வந்துவிட்டார் சசிகுமார். பல்லவி வரைக்கும்தான் பாடப்போகிறார் என்றாலும், அவர் ஆர்வத்தோடு எடுத்துக்கொண்ட ஒத்திகை என்னை ஆச்சரியப்பட வைத்தது. இருந்தாலும் இந்த மூவரையும் பாடல் பதிவுக்கு முன்பாகவே பாடச் சொல்லி, அவர்களுக்கு எந்த நோட் சுலபமாக வருகிறது. எந்த நோட் கடினமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து, அதற்கேற்பப் பாட வைத்தேன்.
கடவுள் கொடுத்த விரலை மோதிரத்துக்காகக் காயப்படுத்தாமல், விரல் அளவு என்னவோ அதற்கேற்ப மோதிரத்தின் அளவை ‘சைஸ்’ பண்ணிய சுவாரசியம் அது! அந்த மூவரும் மிகச் சிறப்பாகப் பாடிச்சென்றார்கள். இன்று என் இசையில், இமான், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, நடிகர்கள் சித்தார்த், சூரியா, ரம்யா நம்பீசன் உட்படப் பல நட்சத்திரங்கள் பாடிவிட்டார்கள்.
நடிகர்களைச் சுலபமாகப் பாட வைத்த நான் ஒரு ட்யூனை தூக்கிக்கொண்டு, முன்னணிப் பாடகர்கள் பின்னால் அலைந்தது சுவாரசியமான சம்பவம் மட்டுமல்ல... மிகவும் இக்கட்டான சம்பவமும் கூட.
பொதுவாக ஒரு மெட்டு உருவாகி, வரிகள் எழுதப்பட்டு, ட்ராக் பதிவுசெய்யப்பட்டதும் இந்த மெட்டுக்கு அவரது குரல் மிகச்சரியாக இருக்கும், அவரையே பாட வைக்கலாம் என்று முயல்வோம். கடைசியில் அந்தப் பாடகருக்குப் பாடலின் சுருதி சில இடங்களில் செட் ஆகாது. வேறு வழியில்லாமல் நாங்கள் அந்தப் பாடகருக்கான சுருதியைக் குறைப்பதோ, கூட்டுவதோ நடந்துவிடும். பல பாடகர்கள் “இந்த இடத்தில் பிட்ச்(சுருதி) எனக்குச் சரியா வரல. நீங்க வேற யாரையாவது பாட வையுங்களேன்” என்று யதார்த்தமாக ஒதுங்கிக் கொள்வார்கள். அது எனக்கு ‘ஞானக்கிறுக்கன்’ படத்தில் நடந்தது.
சாமானிய, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை நன்கு அறிந்தவர் இயக்குநர் இளையதேவன். அவரது இயக்கத்தில் டேனியல் பாலாஜியும் பல புதுமுகங்களும் நடித்து வெளியான படம் ‘ஞானக்கிறுக்கன்’. நாயகன், நாயகி எதிர்கொள்ளும் மிக அவலமான ஒரு காட்சிச் சூழலுக்கு மெட்டுப் போடும்படி கூறினார் இயக்குநர். யுகபாரதி வரிகள் எங்கும் புறக்கணிப்பின் வலிகளை நிரப்பி எழுதினார்.
‘யாரை நம்பி நாம் வந்தது...யாரை நம்பி நாம் போவது ...’
-‘கெட்டும் பட்டணம் போ’ என்ற வார்த்தைகளை நம்பி, மாநகரம் வந்து, சக மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு, உடைந்துபோகும் இரண்டு கிராமிய இதயங்களின் மவுனக் கதறல்தான் இந்தப் பாடல்.
ஹை பிட்ச்சில், துயரத்தின் குழந்தையாகப் பிறந்துவிட்டது அந்தப் பாடல். அதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாரைப் பாட வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். பாடலின் ட்யூனை நான் எஸ்.பி.பி க்கு அனுப்பி வைத்துவிட்டேன். அதைக் கேட்டவர், “அந்தச் சரணத்தில் வர்ற ரெண்டு நோட் ‘ஹைய்யா’ இருக்கு. அதைக் கொஞ்சம் லோ பண்ண முடியுமா?” என்று கேட்டார். நானும் சரி சார்... குறைத்துவிடலாம் என்று கூறிவிட்டேன். பக்கத்தில் இருந்த இயக்குநர் இளையதேவன், “அப்படி குறைச்சா என்னாகும் சார்?” என்று என்னிடம் கேட்டார். ‘ஒன்றும் பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால் அந்த ஃபீல் கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கிறது என்றேன். கதறிய இயக்குநர் அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. அதனால் வேறொரு முன்னணிப் பாடகரை முடிவு செய்து மும்பைக்குப் பறந்தோம்.... அவராவது பாடிக் கொடுத்தாரா..?
தொடர்வேன்...
தொடர்புக்கு tajnoormd@gmail.com