

அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரை ‘முதலாளி’ என்று அழைக்கிற வழக்கம் திரையுலகில் எங்கள் தலைமுறையோடு முடிந்துவிட்டது. பாரதிராஜா, பாக்யராஜ், ராதிகா தொடங்கி, நான் உட்படத் தமிழ் சினிமாவில் தனித்துத் தடம் பதித்த பல கலைஞர்களை, அவர்களது திறமையை மிக நுணுக்கமாக அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. திரையுலகில் முதலாளி என்று கடைசியாக அழைக்கப்பட்ட தயாரிப்பாளர். நான் அவரை அண்ணன் என்றுதான் அழைப்பேன். அவரது கடைசி நாட்கள் வரை அவரை அறிந்தவன்.
பொள்ளாச்சி அருகிலுள்ள சேரிப்பாளையம் என்கிற கிராமம்தான் ராஜ்கண்ணுவின் சொந்த ஊர். அவருடன் பிறந் தவர்கள் ஆறு அண்ணன்கள். ஒரு தங்கை. ராஜ்கண்ணு எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர். பள்ளிக் காலத்தில் மாவட்ட அளவில் சிறந்த விளையாட்டு வீரர். படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் போனதால் சிறு வயதிலேயே வியாபாரத்தில் இறங்கினார். முதலில் தேங்காய் வியாபாரம் செய்தார். பிறகு டூரிங் டாக்கீஸ் திரையரங்கம் ஒன்றின் உரிமையாளர் ஆனார். தீவிர சிவாஜி ரசிகர். இவர் சினிமாவுக்கு வந்ததே ஒரு சவாலான கதை.
பாரதிராஜாவைக் கண்டுபிடித்தார்: எண்பதுகளின் தொடக்கத்தில் பொள்ளாச்சி ரத்னம் என்பவர் பிரபலமான திரைப்படத் தயாரிப்பாளர். அவருக்கு இரண்டு தங்கைகள். அதில் ஒரு தங்கையை ராஜ்கண்ணுவின் மூத்த அண்ணன் சிவசுப்ரமணியனும் மற்றொருதங்கையை ராஜ்கண்ணுவும் திருமணம் செய்துகொண்டனர். குடும்பத்தின் மூத்தமாப்பிள்ளை என்கிற முறையில் சிவசுப்ர மணியத்தை தனது பார்ட்னராகச் சேர்த்துக் கொண்டு ரத்னம் திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்.
அவர்களைப் போல திரைப்படத் தயாரிப்பில் இறங்க விரும்பி, அண்ணனிடமும் மைத்துனரிடமும் தனது எண்ணத்தை ராஜ்கண்ணு சொன்னார். “இதுவொரு கடல்.. உனக்கு சினிமா பற்றி என்ன தெரியும்? உனது பணம் பெருங்காயம் மாதிரிக் கரைந்துபோய்விடும். உன் தேங்காய் வியாபாரத்தை ஒழுங்காகப் பார்” என்று சொல்லிக் கத்தரித்துவிட்டார்கள்.
ராஜ்கண்ணுவுக்கு சுருக்கென்று ரோசம் தைத்து விட்டது. அவர் விடுகிற மாதிரி இல்லை. மைத்துனரும் அண்ணனும் அப்போது தயாரித்துக் கொண்டிருந்த ‘தலைப்பிரசவம்’ என்கிற படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தார் ராஜ்கண்ணு. எம்.கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் ஜெய்சங்கரும் லட்சுமியும் நடித்த அந்தப் படத்தில் ஓர் உதவி இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார் இளைஞர் பாரதிராஜா.
அவரது சுறுசுறுப்பையும் திறமையையும் அடையாளம் கண்டுகொண்டார். உதவி இயக்குநராக இருந்த பாரதிராஜாவை, முதன் முதலில் ‘டைரக்டரே..’ என்று அழைத்து ஊக்கமூட்டிய ராஜ்கண்ணு, “கதை இருந்தா சொல்லு..” எனக் கேட்க, பாரதிராஜா சொன்ன மூன்று கதைகளில் ‘மயிலு’ என்கிற கதை பிடித்துப் போய்விட்டது. அதுதான் ‘16 வயதினிலே’ படம்.
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு ‘மயிலு’ திரைக்கதையை பாரதிராஜா அனுப்பி, அது திரும்பி வந்துவிட்டது. அதை ஒரு கலைப் படமாக எடுக்க விரும்பினார் பாரதிராஜா. ஆனால், அதில் சில அம்சங்களைச் சேர்ந்து கமர்ஷியல் படமாக எடுக்கலாம் என்று ராஜ்கண்ணு சொல்ல, அதை பாரதிராஜாவும் அவரது நண்பர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
புரட்டிப் போட்ட படங்கள்: முதலில் சப்பாணி கதாபாத்திரத்தில் நாகேஷையும் மயிலு கதாபாத்திரத்தில் ரோஜா ரமணியையும் நடிக்க வைத்து, கருப்பு - வெள்ளைப் படமாக எடுப்பது என்றுதான் திட்டமிட்டார்கள். தனது நண்பர் கமல்ஹாசனையும் 14 வயதே ஆகியிருந்த ஸ்ரீதேவியையும் பாரதிராஜா உள்ளே கொண்டு வந்த பிறகு, அதை ‘வண்ணப்படமாக எடுப்போம்’ என்றார் ராஜ்கண்ணு. தனது மனைவியின் நகைகளை விற்றும், நிலபுலன்களை விற்றும் மைசூரில் படப்பிடிப்பைத் தொடங்கிய ராஜ்கண்ணு, ரூ.4.75 லட்சத்தில் படத்தை முடித்தார்.
ஆனால், யாரும் வாங்க முன்வரவில்லை. 48 நாள் பண்ணாரி அம்மனுக்கு விரதமிருந்து வேண்டினார். அதன்பிறகு துணிச்சலாக தானே சென்னை, கோவை பகுதிகளில் ரிலீஸ் செய்தார். படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து, பின்னர் தமிழகம் முழுவதும் சொந்தமாக ரிலீஸ் செய்ததில் பல மடங்கு லாபம் கொட்டியது. அது ஒரு பக்கம் இருக்க, ‘யார் இந்த ராஜ்கண்ணு? யார் இந்த பாரதிராஜா? யார் இந்த நிவாஸ்? யார் இந்த கலைமணி?’ என்று தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் தேடினார்கள்.
‘சந்திரலேகா’, ‘பராசக்தி’, ‘பதி பக்தி’, ‘கல்யாணப் பரிசு’ ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் சிந்தனைப் போக்கையும் படமெடுக்கும் முறையையும் மாற்றின. அந்த வரிசையில் நவீனத் தமிழ் சினிமாவின் முகம் இனி எப்படி அமையப்போகிறது, சினிமா எடுக்க இனி ஸ்டுடியோக்கள் தேவைப்படாது என்பதை ‘16 வயதினிலே’ படத்தின் கதை, திரைக்கதை, வசனமும், இயக்கமும் ஒளிப்பதிவும் இசையும் சொல்லின.
‘16 வயதினிலே’ படத்தைத் தொடர்ந்து 12 படங்கள் எடுத்தார் ராஜ்கண்ணு. அதில் 4 படங்களில் நான் நடித்தேன். அதில் ஒன்றுதான் நான் கதாநாயகனாகவும் பாக்யராஜ் கதை, திரைக்கதை எழுதி, வில்லனாகவும் அறிமுகமான ‘கன்னிப் பருவத்திலே’. பள்ளி ஆசிரியராக இருந்த என்னைப் பார்த்து, “நீ நடிகர் திலகம் சிவாஜியின் சாயலுடன் இருக்கிறாய்.. நல்ல குரல்வளம், நடிப்பிலும் அவரைப் போல் வரவேண்டும்” என்று ராஜ்கண்ணு என் திரை வாழ்க்கைக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கா விட்டால், என் பாதைகூட மாறியிருக்கலாம்.
‘மகாநதி’யும் ஈர நதிகளும்: திரையுலகில் ஈட்டிய பணத்தைத் திறமையாகக் காப்பாற்றிக் கொண்டவர்கள் நிறையவே உள்ளனர். ஈட்டியதை திரையுல கிலேயே இழந்தவர்களும் அதிகம். அதில் ராஜ்கண்ணு இரண்டாவது ரகம். அவர் நம்பிய சிலர், ‘உங்களுக்கு இருக்கும் திறமைக்கு நீங்கள் படம் இயக்கலாம்’ என்று சொல்லப்போய், ‘அர்த்தங்கள் ஆயிரம்’ என்கிற படத்தைப் புதுமுகங்களை வைத்து ‘டைரக்ட்’ செய்யப் புறப்பட்டார். நான் தடுத்தேன். அவர் கேட்கவில்லை.
1981இல் அந்தப் படம் வெளியாகி இரண்டாவது காட்சிக்கே கூட்டம் வராமல் போய் பெட்டிக்குள் சுருண்டது. நான் அவரைப் பார்க்கப் போனேன். “நீ சொன்னது சரிதான்ய்யா.. டப்பா கிழிஞ்சுப் போச்சு.. கையில இருந்த 45 லட்சம் போன இடம் தெரியல. எப்படிச் சமாளிக்கப் போறேன்னு தெரியல..” என்று கதறினார்.
அதன்பிறகு அவரால் படமெடுக்க முடியவில்லை. 6 வருடங்கள் ஓடிப்போய்விட்டன. பாக்யராஜ் அவருக்கு உதவ முன்வந்து ‘எங்க சின்ன ராசா’ படத்தை நடித்து, இயக்கிக் கொடுத்தார். அதிலிருந்தும் அவரால் மீள முடியவில்லை. மீண்டும் ஒரு 6 வருடங்கள் ஓடின. அந்த சமயத்தில்தான் என்னை அழைத்த ராஜ்கண்ணு, “யோவ்.. நீ தம்பி கமல்கூட நல்ல பழகுறேல்ல.. அவர்கிட்ட என்னோடப் பிரச்சினைகளைச் சொல்லுய்யா..” என்றார்.
நான் உடனடியாக கமலைச் சந்தித்து அவரிடம் விவரத்தைச் சொல்லி “உங்களுக்கு 2 பெண்கள், ராஜ்கண்ணுவுக்கு 3 பெண்கள்” என்றேன். உடனடியாக ராஜ்கண்ணுவுக்கு படம் பண்ண ஒப்புக்கொண்டு உருவானதுதான் ‘மகாநதி’. அதில் நானும் நடித்தேன். அந்தப் படம் பெரிய வெற்றியை அடையாவிட்டாலும் ராஜ்கண்ணுவின் ராஜபாட்டையில் மேலும் ஒரு வைரக்கல் ஆயிற்று. ராஜ்கண்ணுவும் ’மகாநதி’யிலிருந்து கிடைத்த வருவாயில் 35 லட்சம் ரூபாய் கடன்களை அடைத்துவிட்டு கொஞ்சம் பெருமூச்சுவிட்டார்.
10 வருடங்களுக்கு முன்பு ‘16 வயதினிலே’ படத்தை டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியிட முயன்று, பின்னர் அதில் ஆர்வமில்லாமல் அப்படியே விட்டுவிட்டார். ஒரு கட்டத்தில் சென்னையின் புறநகரில் வசித்து வந்த ராஜ்கண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது நடிகர் கார்த்தி சிவகுமார் மருத்துவச் செலவுக்குப் பெரிய அளவில் உதவி இருக்கிறார். பாரதிராஜா, ராதிகா தொடங்கி அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நாங்கள் பலரும் அவருக்கு ஒவ்வொரு கட்டத்திலும் பலவிதங்களில் கைகொடுத்து உதவியிருக்கிறோம்.
அவருக்கு உதவியதில் கமல் ஒரு மகாநதி என்றால் மற்ற பலரும் நன்றி என்கிற ஈரம் வற்றாத நீரோடைகள்தான். ரசனை மிகுந்த ராஜ்கண்ணுவை விஜயா - வாஹினியின் நிறுவனர் நாகி ரெட்டியார், என் முன்னாலும் மறைந்த இயக்குநர் மகேந்திரன் முன்னாலும் வியந்து பாராட்டியிருக்கிறார். அவரது புகழ் தமிழ் சினிமா வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும்.
- கட்டுரை ஆசிரியர், நடிகர், எழுத்தாளர், தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியின் தலைவர்.