சினிமா ரசனை 2.0 - 7: பழைய பூமியில் ஒரு புதிய வாழ்க்கை!

சினிமா ரசனை 2.0 - 7: பழைய பூமியில் ஒரு புதிய வாழ்க்கை!
Updated on
3 min read

அறிவியல் புனைவு (Science fiction) என்பது திரைப் படங்களிலும் தொலைக்காட்சி சீரீஸ்களிலும் இன்றியமையாத அம்சமாக மாறிப் பல்லாண்டுகள் ஆகிவிட்டன. ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ வகையில் ஏராளமான மறக்க முடியாத படங்களும் சீரீஸ்களும் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அவற்றில், குறிப்பிடத்தக்கக் கதைக் கரு ஒன்றை எடுத்துக்கொண்டு அதில் ஏராளமான புதிய அம்சங்களைக் கலந்து உருவாக்கிய ஒரு சீரீஸ்தான் ‘The 100’.

உலகம் அழியப்போகிறது என்பதைப் பற்றிய பல கதைகள் உண்டு. உலக அழிவு என்பது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருவேளை உலகம் அழியப்போகிறது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டால் மக்கள் என்ன ஆவார்கள்? அவர்களால் தப்பித்துச் சென்று வேறு எங்காவது ஒரு கோளில் வாழ முடியுமா? இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் பெருமளவில் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படி ஒருவேளை பூமிக்கு வெளியே மக்களால் தப்பித்துச் செல்ல முடிந்துவிட்டால்? இதுதான் ‘The 100’ சீரீஸின் முக்கியமான கரு.

பூமி அழிந்து 100 ஆண்டுகள்: ஒரு மிகப்பெரிய அணு ஆயுதப் பேரழிவு பூமியில் நடந்து, பூமியெங்கும் அபாயகரமான அணுக் கதிர்வீச்சுப் பரவுகிறது. இதனால் மனிதர்கள் வாழமுடியாத இடமாக பூமி ஆகிவிடுகிறது. அப்போது ஒட்டுமொத்த பூமியின் மக்களிலிருந்து சில ஆயிரம் பேர் மட்டும் வானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரு விண்வெளி நிலையத்துக்கு (Space Station) அழைத்துச் செல்லப்பட்டு அங்கே வசிக்கத் தொடங்குகிறார்கள்.

அவர்களுக்கு கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு ஒரு தலைவர் இருக்கிறார். இப்படிக் குடியேறச் சென்று, கிட்டத்தட்ட நூறு வருடங்கள் ஆகிவிட்டன. சில தலைமுறைகள் அந்த ‘ஸ்பேஸ் ஸ்டேஷ’னிலேயே பிறந்து வளர்கின்றன. அவர்களுக்குப் பூமி என்றால் என்னவென்றே தெரியாது.

அப்போது திடீரென்று அந்த ‘ஸ்பேஸ் ஸ்டேஷ’னில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. இத்தனை ஆயிரம் மக்கள் இனி அங்கே வாழ முடியாது என்றும் சிலரை வெளியேற்றினால்தான் அனைவருமே பிழைக்க முடியும் என்றும் தெரிகிறது. பூமியில் அணுப் பேரழிவு நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டதால், அங்கே மனிதர்கள் திரும்பமுடியுமா என்றும் தெரியவில்லை. ஒருவேளை பூமியானது மனிதர்கள் உயிர்வாழத் தகுந்ததாகத் தற்போது மாறியிருந்தால், மறுபடியும் மனித இனம் அங்கே போய் வாழத் தொடங்கும் சாத்தியக்கூறு ஒன்று உண்டு என்பதும் தெரிகிறது.

‘ஸ்பேஸ் ஸ்டேஷன்’ காலனியின் சட்டத்தின்படி, சிறு குற்றம் செய்தாலும் சிறை என்பதால் சிறையில் இருக்கும் நூறு பேர் தேர்வுசெய்யப்படுகின்றனர். இந்த நூறு பேருமே சிறுவயதினர். டீன் ஏஜைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

அவர்கள் நூறு பேரும் பூமிக்கு அனுப்பப்படுவார்கள். பூமி தற்போது மனிதர்கள் வாழத் தகுந்த இடமாக மாறிவிட்டதா என்று அவர்கள் கண்டறிந்து தகவலைத் தெரியப்படுத்த வேண்டும். இதுதான் அவர்களின் வேலை. வேண்டா வெறுப்பாக அவர்கள் சம்மதிக்கிறார்கள். அவர்களில் அந்த ஸ்பேஸ் ஸ்டேஷனின் தலைவரின் மகனும் உண்டு. நூறு பேர் இருக்கும் விண்கலம் பூமிக்கு அனுப்பப்படுகிறது. இதன்பின் என்ன ஆனது என்பதே ‘The 100’.

ஒரு தலைவி உருவாகிறாள்! - இந்த வகையை ‘Post-apocalyptic’ என்று சொல்வது வழக்கம். பேரழிவு நேர்ந்த பின்னர் நடக்கும் கதையை விவரிக்கும் படங்களும் சீரீஸ்களும் நாவல்களும் இந்த வகையில் வரும். இந்த சீரீஸில் மொத்தம் ஏழு சீசன்கள். ஆனால், பார்க்கத் தொடங்கினால் கடைசி சீசன் வரை பார்த்து முடிக்கத்தக்க மிகச் சுவாரஸ்யமான பல அம்சங்கள் அதில் உண்டு. பிறந்ததில் இருந்தே செயற்கையான ‘ஸ்பேஸ் ஸ்டேஷ’னில் வாழ்ந்த, பூமிக்கு முதல்முறையாக வரும் அந்த நூறு பேரும் பூமியைப் பார்த்துத் தங்கள் உணர்வை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதிலிருந்து, யாருமே இல்லாத பூமி அவர்களை எப்படி வரவேற்கிறது, அவர்கள் சந்திக்கும் அபாயங்கள் என்னென்ன என்று விரிந்து, பதின்ம வயதில் இருக்கும் அந்த நூறு பேரில் யாரெல்லாம் ஆளுமைகளாக உருமாறிச் சக மனிதர்களைக் காக்கிறார்கள், யாரெல்லாம் தப்பித்து ஓடிப் பின்னால் வந்து சேர்கிறார்கள், அவர்களுக்குள் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார், கெட்டவர்களால் அவர்களுக்கு என்ன பிரச்சினைகள் உருவாகின்றன என்று ஏராளமான உப கதைகள் இந்த சீரீஸில் உண்டு.

அதேபோல், அவர்களுக்குள் என்னென்ன உறவு, இறுதிவரை ஒருவரையொருவர் கைவிடாத அண்ணன், தங்கை கதாபாத்திரங்கள், மிக உறுதியான கதாநாயகி என்று பல மறக்க முடியாத கதாபாத்திரங்களும் உண்டு. இவர்களுக்கு மத்தியிலிருந்து, கிளார்க் க்ரிஃபின் (Clarke Griffin) என்கிற பெண் பூமியைப் புரிந்துகொள்ள முனைந்து, அவர்களுக்கெல்லாம் எப்படித் தலைவியாக எழுகிறாள்? அவள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? தன்னுடன் இருக்கும் மனிதர்களை எப்படிக் காக்கிறாள் என்பதெல்லாம் உணர்வுபூர்வமாகவும் விறுவிறுப்பாகவும் இந்த சீரீஸில் சொல்லப்பட்டிருக்கிறது.

மிக முக்கிய கதாபாத்திரம்: இந்த சீரீஸின் பலம் என்னவென்றால், ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பிரதானக் கதையை எடுத்துக்கொண்டு அதை நோக்கிப் பயணப்படும் விதமாக திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. அதேவேளையில், முடிந்த சீசன்களில் இருந்த சின்னச்சின்ன விஷயங் களைக் கச்சிதமாகக் கோத்து விறுவிறுப்பை அதிகப்படுத்துவதிலும் அட்டகாசம் செய்திருக்கிறார்கள்.

சீரீஸின் முக்கியமான கதாபாத்திரமாக, அணு ஆயுதப் போரில் அழிந்துபோன பூமி வருகிறது. யாருற்ற பூமி எப்படி இருக்கும்? அதில் போரில் சாகாத மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா? இருந்தால் அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும்? இவையெல்லாம் விரிவாகவே விவாதிக்கப்படுகின்றன.

கூடவே, சயின்ஸ் ஃபிக்ஷனில் இருக்கும் முக்கிய அம்சங்களான புழுத் துளைகள் (Wormholes) காலப்பயணம், இப்போது பலராலும் AI என்று உச்சரிக்கப்படும் செயற்கை நுண்ணறிவு எனப் பல அம்சங்கள் விரிவாக இந்த சீரீஸில் உண்டு. இந்த சீரீஸ் பார்த்து முடித்தபின், இந்த வருடம் ஆப்பிள் டிவியில் வெளியான ‘The Sylo’ என்கிற சீரீஸ், கிட்டத்தட்ட இதேபோன்று எடுக்கப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது. இன்னும் ‘Snowpiercer’ (திரைப்படம், டிவி சீரீஸ்), ‘The Fringe’ டிவி சீரீஸ், ‘Lost’, ‘Yellow jackets’, ‘The Last of Us’ போன்ற சீரீஸ்கள் கிட்டத்தட்ட ‘The 100’ எடுத்துக்கொண்ட கருவை வேறுவிதமாக விவாதிப்பவை. இவற்றின் ரசிகர்கள் தாராளமாக ‘The 100’ தொடரைப் பார்க்கலாம். ‘Westworld’ சீரீஸுக்கும் ‘The 100’ சீரீஸுக்கும்கூட மிகச்சில ஒற்றுமைகள் உண்டு.

இந்த சீரீஸ் இதே பெயரில் அமைந்த ஒரு புத்தகத்திலிருந்து உருவானது. அந்தப் புத்தக சீரீஸை எழுதியவர் கேஸ் மார்கன் (Kass Morgan). இளைஞர்களுக்கான அறிவியல் புனைவுக் கதைகள், நாவல்கள் எழுதுவதில் புகழ்பெற்ற அமெரிக்க வெகுஜன எழுத்தாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in