

1. கொலைக் களமான குளியலறை
திகில் படங்களின் தாய் எனக் கருதப்படுவது 1960-ல் வெளியான ‘சைக்கோ’. இந்தப் படத்தின் மூலம், குளியல் அறையை உக்கிரமான கொலைக்கான களமாக மாற்ற முடியும் எனக் காட்டியவர் திரைப்பட மேதை ஆல்ப்ரட் ஹிட்ச்காக். ஒரு சாலையோர விடுதி, அங்கே தனியாக இருக்கும் விடுதி நிர்வாகி, ஒரு களவு, ஒரு கொலை, விசாரணை என அடுத்தடுத்து திருப்பங்களைத் திரைக்கதையில் வைத்த ஹிட்ச்காக், படத்தின் தொடக்கத்தில் வரும் ஷவர் குளியல் காட்சியில் கதாநாயகி கொலையாவதைப் பல்வேறு கோணங்களிலிருந்து எடுத்து ஒருங்கிணைத்தார். ஒரு கொலை அத்தனை உக்கிரத்துடன் சித்திரிக்கப்பட்ட திரைப்படத்தை அதற்கு முன்னர் அமெரிக்கர்கள் பார்த்திருக்கவில்லை. நார்மன் பேட்ஸாக நடித்த அந்தோணி பெர்கின்சும் மரியானாக நடித்த ஜேனட் லீயும் சினிமா ரசிகர்களுக்கு இன்றும் காவிய நினைவாகப் பதிந்துள்ளனர். நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படம், ஒரு விருதைக்கூட வெல்லவில்லை. இந்தப் படத்தின் புகழ்பெற்ற கொலைக் காட்சியில் ரத்தத்துக்குப் பதில் பயன்படுத்தப்பட்ட திரவம் எது?
2. ஒரு இயக்குநர் பிறந்தார்!
இரண்டாம் உலகப் போர் காலத்தில், ஜப்பானிய ராணுவத்திடம் ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்கள் போர்க் கைதிகளாகச் சிக்கியிருந்தனர். பர்மாவில் ரயில் பாலம் கட்டும் மிகக் கடினமான பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டபோது நடந்த சம்பவங்களின் கதைதான் ‘தி ப்ரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்’. இதைத் திரைப்படமாக்கியவர் இயக்குநர் டேவிட் லீன். ‘டாக்டர் ஷிவாகோ’, ‘லாரன்ஸ் ஆப் அரேபியா’ திரைப்படங்களுக்காகப் புகழ்பெற்றவர் இவர். போரைப் பின்னணியாகக் கொண்ட சிறந்த மானுட ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்திரைப்படம் 1957-ல் வெளியாகி ஏழு ஆஸ்கர்களைக் குவித்தது. பிரிட்டன் - அமெரிக்கக் கூட்டுத்தயாரிப்பாக இலங்கையின் கண்டிக்கு அருகே படமாக்கப்பட்டது. ஒரு மழைக் காட்சிக்காக, படப்பிடிப்புக் குழுவினருக்கு, “ரெய்ன்” என்று இயக்குநர் டேவிட் லீன், உத்தரவிட்டபோது அந்த இடத்தில் மழை பெய்விக்கப்பட்டது. இதைத் தற்செயலாக அங்கே சுற்றுலா வந்திருந்த ஒரு சிறுவன் பெரும் அதிசயமாகப் பார்த்தான். ஆறாம் வகுப்பு படித்துவந்த அந்தத் தமிழ்ச் சிறுவன் அங்குதான் சினிமா காமிராவையும் தொட்டான். அதன் பிறகு அந்தச் சிறுவன் வளர்ந்து இளைஞரானபின் இந்தியா வந்து சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும் தமிழ் சினிமா இயக்குநராகவும் உருவானான். அவர் யார்?
3. பேசப்பட்ட வசனம்
எம்.ஜி.ஆர், சாவித்திரி நாயகன் நாயகியாக நடிக்க சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கி 1957-ல் வெளியான திரைப்படம் ‘மகாதேவி’. தன்னிடம் போரில் தோல்வியடைந்த மன்னனையே அரசவைக்கு விருந்தினராக அழைக்கிறார் பகை மன்னர். தோல்வியுற்ற மன்னனின் மகள் மகாதேவி மீது ஆசை வைக்கிறார் தளபதி. மகாதேவிக்கோ இளையதளபதி மேல் நேசம். மூத்த தளபதியோ, “மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி” என்று பிடிவாதமாக இருக்கிறார். எம்.என். ராஜம், பி.எஸ். வீரப்பா, ஓ.ஏ.கே தேவர், சந்திரபாபு ஆகியோர் நடிக்க, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படம் வாகினி ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. நல்ல கதையம்சம், இசை, நடிப்பு ஆகிய அம்சங்களைக் கொண்டிருந்தாலும் தோல்வியடைந்தது இத்திரைப்படம். எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய ‘காக்கா காக்கா மை கொண்டா... காடை குருவி பூ கொண்டா...’ தாலாட்டுப் பாடலாகப் புகழ்பெற்றது. வசனங்களுக்காகவும் புகழ்பெற்ற இந்தப் படத்தின் வசனகர்த்தா யார்?
4. கோமாளியின் தோல்வி
மக்களைச் சந்தோஷப்படுத்தும் கலைஞன், தன் துயரங்களையும் துக்கங்களையும் பொதுவில் வைக்க முடியாது. இதுதான் ‘மேரா நாம் ஜோக்கர்’ இந்திப் படத்தின் ஒருவரிக் கதை. தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் எனப் பல பரிமாணங்களை எடுத்த திரைக்கலைஞர் ராஜ்கபூரின் செல்வத்தையும் உழைப்பையும் காலத்தையும் அதிகம் எடுத்துக்கொண்டு 1972-ல் வெளியான இப்படம் பெரும் தோல்வியுற்றது. சர்க்கஸ் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பின்னணியில், நாயகன் கோமாளி ராஜுவின் கதைதான் ‘மேரா நாம் ஜோக்கர்’. மூன்றேமுக்கால் மணிநேர நீளம் கொண்ட இப்படம், இரண்டு இடைவேளைகள் கொண்டது. பெரிய நட்சத்திரங்கள், நாயகிகள், காதல், நகைச்சுவை, இசை என உணர்வுபூர்வமான தருணங்கள் இருந்தும் தோல்வியைத் தழுவியது. ராஜ்கபூரின் வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தின் கதை, அப்போதைய பார்வையளர்களுக்கு மிகவும் கனமாக இருந்ததால் தோல்வியடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இன்று சர்வதேச அளவில் இந்திய கிளாசிக்குகளில் ஒன்றாக இன்று கருதப்படுகிறது. ராஜ்கபூரின் மகன் ரிஷிகபூர் அறிமுகமான இப்படம், தொடங்கப்பட்டு வெளியாக எத்தனை காலம் பிடித்தது?
5. வளைகுடாப் போரின் காட்சி ஆவணம்!
போருக்கு எதிரான குரலை ஆற்றலுடன் வெளிப்படுத்தும் அரிய ஆவணப்படங்களில் ஒன்று ‘லெசன்ஸ் ஆஃப் டார்க்னெஸ்’. வளைகுடாப் போரின் ரத்தத் தடயங்களைக் காட்டிய படம் இது. ஈராக்கிய எண்ணெய்க் கிணறுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எரிந்துகொண்டிருப்பதைப் பறவைக் காட்சியாகக் காண்பித்தபடி யுத்தம் ஏற்படுத்தும் நிலைக்குலைவை இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் நிறுவியிருப்பார். 13 சிறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்ட படைப்பு இது. வளைகுடாப் போர் காலத்தில் அதை ஒளிபரப்பி உலகம் முழுவதும் புகழ்பெற்றது சிஎன்என் தொலைக்காட்சி. டெலிபோட்டோ லென்ஸ்களைப் பயன்படுத்தியும் டிரக்குகளில் காமிராக்களைப் பொருத்தியும் இந்தப் படத்தை எடுத்து 1992-ல் வெளியிட்டார். இந்த ஆவணப்படத்துக்கு ரிச்சர்ட் வாக்னர் போன்ற செவ்வியல் இசைக் கலைஞர்களின் இசைக் கோலங்களை ஹெர்சாக் பயன்படுத்தியிருந்தார். போரின் பயங்கரத்தை அழகியல் காட்சிகளாக மாற்றிவிட்டதாகக் கடும் கண்டனங்களையும் சந்தித்த ஹெர்சாக், இந்த ஆவணப்படத்துக்காக மெல்போர்ன் சர்வதேசத் திரைப்பட விழாவில் பெற்ற விருது எது?