

இ
யக்குநர் சுந்தர்.சி - வடிவேலு கூட்டணி முதல்முறையாக இணைந்த படம் 'வின்னர்'. வடிவேலுவைச் சந்தித்து சுந்தர்.சி கதையைக் கூறிய போது, "கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா, எனக்குக் கால்ல அடிபட்டு நடக்க முடியாம இருக்கேன் அப்பு. " என்று கூறி, வீங்கிய காலுடன் நொண்டி நொண்டி நடந்து காட்டியிருக்கிறார் வடிவேலு. அதைக் கண்டு அசராத இயக்குநர் "ஒன்றும் பிரச்சினையில்லை. நீங்கள் அறிமுகமாகும் தொடக்கக் காட்சியிலேயே எதிரிகள் உங்கள் காலை உடைத்துவிடுவதுபோல் ஒரு காட்சியை வைத்துவிடுவோம். படம் முழுக்க நீங்கள் கால் நொண்டி நொண்டி நடந்தாலும் அதில் லாஜிக் இடிக்காது" என்று கூறியுள்ளார் சுந்தர்.சி
“பெரிய தில்லாலங்கடியால்ல இருக்கு” என்று சிரித்த வடிவேலு, இயக்குநரின் யோசனைக்குச் சம்மதித்திருக்கிறார். காட்சியையும் அதேபோல் படமாக்கிவிட்டார் இயக்குநர். ‘வின்னர்’ படத்தில் தென்னந்தோப்பில் வடிவேலு அடிவாங்கும் காட்சியை திரைப்படத்தில் விழுந்து விழுந்து ரசித்த ரசிகர்கள், கடந்த 14 ஆண்டுகளாக அந்தக் காட்சியை தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பப் பார்த்து வயிறு நோகச் சிரிக்கிறார்கள்.
வடிவேலு தனது சீடர்களுடன் தள்ளுவண்டியில் உட்கார்ந்தபடி வருவது, கால் நொண்டிக் கொண்டே நடப்பது போன்ற காட்சிகளே ‘வின்னர்' படத்தில் இடம்பெற்றன. இன்றுவரை அந்தப் படத்தில் நடிக்கும்போது வடிவேலுவுக்கு நிஜமாகவே கால் உடைந்திருந்தது என்கிற உண்மை ரசிகர்களுக்குத் தெரியாது.