

ச
மூக ஊடகத்தில் பல திரைப்படங்கள் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன. முதன்முறையாக ‘லட்சுமி’ என்ற குறும்படத்துக்கு இது நிகழ்ந்திருக்கிறது. சர்ஜுன் கே.எம். என்பவர் இயக்கியிருக்கும் ‘லட்சுமி’, பல்வேறு திரைப்பட, குறும்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு இந்த மாதம் ஒன்றாம் தேதி அன்று யூடியூப் இணையத்தில் வெளியானது.
நடுத்தர வாழ்வின் அழுத்தங்களாலும் கணவனின் அலட்சியத்தாலும் இயந்திரத்தனமான வாழ்க்கை வாழும் லட்சுமி என்கிற பெண், தினசரி வேலைக்குச் சென்றுவரும் ரயிலில் சந்திக்கும் கதிர் என்கிற இளைஞனுடன் ஒருநாள் இரவைக் கழிப்பதுதான் கதை.
இந்தப் படத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பலர் பதிவிட்டனர். ஒரு படைப்பு விமர்சிக்கப்படுகையில் அதில் சம்பந்தப்பட்டுள்ள பெண்ணோ பெண் சார்ந்த விஷயங்களோ பாலியல்ரீதியாகத் தாக்கப்படுவது புதிதல்ல; அதுவே ‘லட்சுமி’க்கும் நடந்தது. ‘லட்சுமி’ என்கிற படத்துக்கும் கதாபாத்திரத்துக்கும் மட்டுமல்ல; லட்சுமி என்கிற பெண்பால் பெயருக்கும் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த லட்சுமிபிரியா சந்திரமௌலி என்கிற நடிகருக்கும் களங்கம் கற்பிக்கும் ஜோக்குகளும் மீம்களும் உருவாக்கப்பட்டன.
இந்த எதிர்வினைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது, ஒரு பெண்ணை ‘ஒழுக்கம்’ மீறுபவளாகக் காண்பிக்கலாமா என்ற பதற்றம்தான். ஆண்-பெண் பாலியல் மீறல் தொடர்பான இந்த இரட்டை நிலை எதிர்வினை இந்தப் படைப்புக்கு மட்டுமானதல்ல. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘உயிர்’ என்ற திரைப்படத்தில், இறந்துவிட்ட கணவனின் தம்பியை மணக்க விரும்புபவளாகப் முதன்மைப் பெண் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும். அந்தப் படம் கடும் சர்ச்சையைக் கிளப்பியது. இதேபோல் ஆண்களின் பாலியல் பிறழ்வுகளைப் பேசிய ‘சிந்து பைரவி’, ‘வாலி’ போன்ற படங்கள் வணிக வெற்றிப் படங்களாகவும் விமர்சனத் தளத்தில் பாராட்டப்பட்டவையாகவும் இருந்தன. இன்றும் வாட்ஸ்-அப்பில் ஆண்களால் பகிரப்படும் பல ஜோக்குகள், திருமணமான ஆண்கள், மச்சினியையோ பிற பெண்களையோ நோட்டம் விடுவதைப் பெருமையுடன் பறைசாற்றிக்கொள்பவையாக இருக்கின்றன. ஆனால், பெண் ‘ஒழுக்கத்தை’ மீறுகிறாள் என்கிற கற்பனைகூடப் பலரைக் கொந்தளிக்கவைக்கிறது.
பாலியல் சுதந்திரம் மட்டுமே பெண் சுதந்திரம் ஆகுமா என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது. பெண் சுதந்திரம் என்பதைப் பாலியல் சுதந்திரத்துக்குள் அடக்கிவிட முடியாதுதான். ஆனால், அது பாலியல் சுதந்திரத்தையும் உள்ளடக்கியதுதான் என்கிற கருத்தையும் நாம் மதிக்கக் கற்க வேண்டும். பெண்கள் அடிமைப்படுத்துவதைப் பற்றிக் கவலையேபடாதவர்களுக்கு பாலியல் சுதந்திரம் பற்றிப் பேசும்போது மட்டும், எது உண்மையான பாலினச் சமத்துவம் என்கிற விவாதத்தில் இறங்குவதைக் கவனிக்க வேண்டும். கணவனால் போதிய அக்கறையும் சமத்துவமும் கட்டப்படாமல் ஒடுக்கப்படும் ஒரு பெண், வேறொரு துணையை நாடுவதும் தனித்து வாழ்வதும் அவளது உரிமை என்று நினைப்பதுதான் பெண்ணுரிமை மீதான உண்மையான அக்கறையின் வெளிப்பாடுகளில் ஒன்றாக இருக்க முடியும்.
இந்தப் படத்தில் பாரதியாரின் கவிதை ஒன்றைப் பயன்படுத்தியிருப்பதை வைத்து, பாரதி இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகப் பலர் பொங்கி எழுந்துள்ளனர். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில், சோழ மன்னர்களின் வழிவந்தவர்களின் அவல நிலை, அப்போது நடைபெற்று முடிந்திருந்த முள்ளிவாய்க்கால் போரில் தமிழர்கள் எதிர்கொண்ட கொடுமைகளின் குறியீடாகப் பார்க்கப்பட்டது. இதைப் போல கவிதையும் கலைப் படைப்புகளும் பல்வேறு பொருட்களை மறைபொருளாகத் தரும் தன்மையைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. எனவே, இந்தப் படத்தின் இயக்குநரும் பாரதியார் கவிதையைத் தன் புரிதலுக்கும் தன் படைப்பின் தேவைக்கும் ஏற்றபடி பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் பாரதியார் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார் என்று சொல்வதில் அர்த்தமில்லை.
‘லட்சுமி’ குறும்படத்தில் குறைகளும் பிரச்சினைக்குரிய விஷயங்களும் இல்லாமல் இல்லை. ஒரு ஆண் மூலமாகத்தான் லட்சுமிக்கு அவளது அழகும் சிறப்புகளும் உணர்த்தப்படுகின்றன. மேலும் ஓவியம், கவிதை, வெளிநாட்டுப் பயணங்கள் என்று இருப்பவர்கள் இனிமையானவர்களாகவும் அடித்தட்டு மக்கள் ரசனையில்லாத கரடுமுரடான வாழ்க்கையை வாழ்பவர்களாகவும் இருப்பதான போலியான பிம்பத்தை இந்தப் படமும் கட்டமைக்கிறது. உண்மையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரும் மற்றவர்களைப் போலவே மனிதக் கீழ்மைகளுடன்தாம் வாழ்கிறார்கள்.
இன்னொரு முக்கியமான பிரச்சினை ‘இறைவி’, ‘தரமணி’, ‘லட்சுமி’ என ஆண்கள் முன்வைக்கும் பெண் சார்ந்த பார்வைகளே பெண்ணியம் சார்ந்து பரவலான விவாதப் பொருளாக மாறுகின்றன. பெண்கள் பல்வேறு வடிவங்களில் எழுப்பும் பெண்ணியக் குரல்கள் மையநீரோட்டத்தின் பேசுபொருளாக ஆவதில்லை. பெண் இயக்குநர்கள் என்றால் பெண்கள் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே படமெடுப்பார்கள் என்கிற விமர்சனத்தை உடைப்பதற்காகவே பெண் படைப்பாளிகள் பொதுவான கதைகளைப் படமெடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ‘லட்சுமி’ போன்ற முயற்சிகளின் அடிப்படையில் பெண்ணியத்துக்கு ஆதரவாகப் பேசுபவர்களும் இதை உணர்வதில்லை அல்லது உணர்ந்தும் அதற்குள் அகப்பட்டுக்கொள்ளும் நிலை நீடிக்கிறது.