

கடவுள் இருக்கிறாரா? இருந்தால் அவர் எங்கே இருக்கிறார், எப்படி இருப்பார்? இந்தக் கேள்வி, மனிதன் உருவான காலத்திலிருந்தே பெரிய கேள்வியாக இருந்துவருகிறது. உலகின் பல மதங்களிலும் இக்கேள்வி எழுப்பப்படுகிறது. விடைகளும் ஏராளம்!
ஒருவேளை கடவுள் என்று ஒருவர் இருந்து, அவர் பூமிக்கு வந்துவிட்டால்? இந்தக் கேள்வியை வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட காமிக்ஸ்தான் ‘பிரீச்சர்’ (Preacher). அமெரிக்காவில் பிரபலமான குறிப்பிடத்தகுந்த காமிக்ஸ் கதைகளில் ஒன்று. மிகப் பிரபலமான கதாபாத்திரமும்கூட. இந்த காமிக்ஸை வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட சீரீஸ்தான் ‘Preacher’.
புகுந்து பார்க்கும் சக்தி: அதேசமயம் ‘பிரீச்சர்’ சீரீஸ் கடவுள் பற்றியது மட்டும் அல்ல. விண்வெளியிலிருந்து ஒரு சக்தி பூமிக்கு வருகிறது. அந்தச் சக்திக்குப் பெயர் ‘ஜெனசிஸ்’ (Genesis). ஒரு நல்ல சக்திக்கும் ஒரு தீய சக்திக்கும் பிறந்ததுதான் இந்த ஜெனசிஸ். உலகின் மாபெரும் ஆற்றல் இந்த ஜெனசிஸ்ஸிடம் உண்டு. ஆனால் இதற்கு வடிவம் இல்லை. ஒளிவடிவத்தில் தனது இருப்பிடத்திலிருந்து தப்பித்துப் பூமிக்கு வருகிறது.
வந்த பின் மனிதர்களில் தனது சக்தியைத் தாங்கக்கூடியவர்கள் யார் என்று ஒவ்வொருவராகத் தேர்ந்துகொண்டு அவர்களுடைய உடலுக்குள் புகுந்து பார்க்கிறது (மிகப் பிரபலமான ஒரு ஹாலிவுட் நடிகரும் அதில் உண்டு. சக்தி தாங்காமல் உடல் வெடித்து இறந்துவிடுவார்). அப்படி இறுதியாக அது யாருடைய உடலுக்குள் புகுந்ததோ, அவர்தான் பிரீச்சர் என்கிற ஜெஸ்ஸி கஸ்டர்.
ஜெனசிஸ் என்கிற சக்தி அவரது உடலுக்குள் புகுந்துவிடுவதால், உலகின் மிகப் பெரிய சக்திவாய்ந்த நபராக ஜெஸ்ஸி மாறிவிடுகிறார். அவர் எதிரே இருக்கும் யாராக இருந்தாலும் அவர்களிடம் ஆணையிட்டு, அவர் சொல்வதைச் செய்யவைக்கும் சக்தி அவருக்குக் கிடைத்துவிடுகிறது.
இது சாதாரணமான சீரீஸ் அல்ல. Black Comedy என்கிற அவல நகைச்சுவையோடு சேர்த்து எழுதப்பட்ட சீரீஸ் (அவல நகைச்சுவைப் பற்றி மூன்றாம் அத்தியாயத்தில், ‘Barry' என்கிற சீரீஸைப் பற்றி அலசியபோது நாம் அறிந்துகொண்டதைக் கொஞ்சம் நினைவூட்டிக்கொள்ளுங்கள்). எனவே இந்த சீரீஸில் அபத்தமான தருணங்கள் பல உண்டு.
நாம் பின்பற்றும் பழக்க வழக்கங்கள், நமது கடவுள்கள், மதங்கள், மத நம்பிக்கை, மனித வாழ்க்கை, சொர்க்கம், நரகம் ஆகிய எல்லாவற்றையுமே கண்டபடி எள்ளல் செய்யும் பல காட்சிகள் உண்டு. ஆனால், அவையெல்லாமே அட்டகாசமாக எழுதப்பட்டிருப்பதால், விழுந்து, புரண்டு சிரிப்பதைத் தவிர நமக்கு வேறு வழி கிடையாது. சீரீஸைப் பார்க்கும் முன்னர் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கூடவே சீரீஸில் வன்முறை சற்றே அதிகம்.
பூமிக்கு வந்த கடவுள்: பிரீச்சர் என்பவர் ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக இருந்துவருபவர். ஆனால், அவருக்குள் பல கேள்விகள் உள்ளன. கடவுளிடம் கேட்டாக வேண்டிய கேள்விகள் அவை. ‘கடவுள் என் முன்னர் வந்தால் அவரிடம் நான் கேட்டே தீருவேன்’ என்று நாம் சிலசமயம் சொல்வோம் அல்லவா? அப்படி பிரீச்சருக்கும் பல கேள்விகள் உள்ளன. ஏன் அப்படி என்பதற்கு சீரீஸிலேயே பதிலும் உண்டு. அவர் ஏன் பாதிரியாராக இருக்கிறார் என்பதற்கும் ஒரு கதை உண்டு.
கதையின் முக்கிய கட்டத்தில், கடவுள் தனது இருப்பிடத்திலிருந்து புறப்பட்டு பூமிக்கு வந்திருக்கிறார் என்பதை பிரீச்சர் தெரிந்துகொள்கிறார். பூமியில் ஒளிந்திருக்கும் கடவுளைத் தேடி, தனது நண்பர்களுடன் ஒரு பயணம் செல்கிறார். அவருக்குள் ஜெனசிஸ் என்கிற சக்தி பயணப்படுகிறது. அப்போது அந்த ஜெனசிஸ்ஸை அவரிடமிருந்து பறித்துச் செல்ல, வானிலிருந்து ஜெனிசிஸ்ஸின் காவலர்களாகிய இரண்டு ஆண் தேவதைகள் அவரைத் துரத்துகிறார்கள்.
பிரீச்சரின் நண்பர்களில் ஒருவர், நீண்ட காலமாக உயிர்வாழும் ஒரு ரத்தக் காட்டேரி. அவனுடன் வரும் இன்னொரு பெண்ணோ பிரீச்சரின் பழைய காதலி. இந்த இருவர் தவிர, சில சரித்திரப் புகழ்வாய்ந்த கதாபாத்திரங்களும் முக்கியமான வேடங்களில் இந்த சீரீஸில் வருவார்கள்.
கூடவே முட்டாள் (ஆண்) தேவதைகள், கொடூரமான கொலைகாரர்கள், இயேசு கிறிஸ்துவின் வம்சாவளியில் இருந்து இன்றும் உயிரோடு இருக்கும் நபர் ஒருவர், அவரைத் தலைவராக ஆக்கி உலகைக் கைப்பற்ற நினைக்கும் நிறுவனம் ஒன்று, சாத்தான் என்று இந்த சீரீஸில் பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் உண்டு. கூடவே இவர்களையெல்லாம் வைத்து நகைச்சுவையாக எழுதப்பட்ட பல காட்சிகளும் உண்டு.
இப்போது நான் சொல்லியிருப்பது பிரீச்சராக வரும் ஜெஸ்ஸி கஸ்டரை வைத்துக் கதை எப்படி நகர்கிறது என்பதையே. ஆனால், கதையில் பல கதாபாத்திரங்களுக்கான கிளைக் கதைகளும் உண்டு. மொத்தம் நான்கு சீசன்களில் மிகப் பெரிய கதை ஒன்றை நம்முன் வைக்கும் சீரீஸ் இது.
திரையிலும் காமிக்ஸ் ஜாலம்: தனிப்பட்ட முறையில், நான் பார்த்த சீரீஸ்களிலேயே தலைசிறந்தவற்றுள் ‘பிரீச்ச’ரும் ஒன்று. காரணம் அது கையில் எடுத்திருக்கும் விஷயம். கடவுள் மட்டும் இல்லாமல், சொர்க்கம், நரகம், சாத்தான், கடவுள், இயேசு, வானில் இருக்கும் தேவதூதர்கள், ஒரு சாபத்தால் இறக்க முடியாமல் சுற்றிக்கொண்டிருக்கும் நபர்கள், நீண்ட காலமாக உயிர்வாழ்ந்து வரும் ரத்தக் காட்டேரிகள், ரத்தக் காட்டேரியாகப் பூமியில் வாழ்வதன் சிரமம் (பழச்சாறுபோல் கடைகளில் ரத்தம் வாங்கிக் குடிக்கும் அளவுக்குச் சமுதாயம் இன்னும் முன்னேறவில்லையே), இயேசுவின் பரம்பரையில் வரும் ஒருவரை வைத்துப் பெரிய விஷயத்தைச் சாதிக்க நினைக்கும் நிறுவனம் ஒன்று என இதில் கதையின் அடுக்குகள் உங்களைத் தொடருடன் கட்டிப்போட்டுவிடும்.
இதில் வரும் பல விஷயங்கள் பொதுவெளியில் பரபரப்பான விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டவை என்பதாலும் இந்த சீரீஸ் எனக்குப் பிடிக்கும். கூடவே அவல நகைச்சுவையைப் பிரமாதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக, உயிர் எப்படியும் போகாது என்பதால் இந்த சீரீஸில் வரும் ரத்தக் காட்டேரிகள் சிலரிடம் மாட்டிக்கொண்டு சில கதாபாத்திரங்கள் படும்பாடு. இன்னொரு முக்கியமான அம்சம், காமிக்ஸ் எப்படி இருந்ததோ அதேபோல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த சீரீஸ் பற்றிச் சொல்வதற்கு இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு. மிகுந்த மேலோட்டமான முன்னோட்டம் மட்டுமேதான் நான் கொடுத்திருப்பது. சொல்லாமல் விட்டிருக்கும் அம்சங்கள் ஏராளம். முதல் சீசனின் முதல் எபிசோடு மட்டும் சற்றே மெதுவாகச் செல்வதுபோல இருக்கும்.
ஆனால், சீரீஸில் வரும் முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதால் அப்படி அமைக்கப்பட்டிருக்கிறது இதன் முதல் எபிசோடு. எனவே சீரீஸ் தொடங்கியதுமே ஏன் மெதுவாக உள்ளது என்று எண்ண வேண்டாம்.
முதல் எபிசோடைத் தாண்டிவிட்டால் அதன்பின் சீரீஸ் அட்டகாசமாகப் பயணிக்கும். ‘கடவுள் பூமிக்கு வந்துவிட்டால்’ என்று நான் முதலில் சொல்லியிருப்பதால், அது கே.விஜயன் இயக்கி, நாகேஷ் அர்ச்சகராக நடித்து, வி.கே ராமசாமி சிவனாக நடித்த படம் போல் இருக்காது.
அதேபோல் ஜிம் கேரியும் மார்கன் ப்ரீமேனும் நடித்த ‘Bruce Almighty’ போலவும் இருக்காது. அவற்றில் எல்லாம் கடவுள்களின் சித்தரிப்பே வேறு. ‘பிரீச்ச’ரில் கடவுளின் கதாபாத்திரம் முற்றிலும் எதிரானது. கடவுள் அவ்வப்போதுதான் வருவார். இந்த சீரீஸ், ‘பிரீச்ச’ராக இருக்கும் ஜெஸ்ஸியின் பயணத்தைப் பின்தொடர்வது. அமேசான் பிரைமில் இந்த சீரீஸைக் காணலாம்.
- rajesh.scorpi@gmail.com