திரைப் பார்வை: டேர்டெவில் முஸ்தபா (கன்னடம்) - வெறுப்பிலிருந்து விடுதலை நோக்கி

திரைப் பார்வை: டேர்டெவில் முஸ்தபா (கன்னடம்) - வெறுப்பிலிருந்து விடுதலை நோக்கி
Updated on
2 min read

கன்னட எழுத்தாளர் பூர்ணசந்திர தேஜஸ்வி இதே தலைப்பில் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘டேர்டெவில் முஸ்தபா’. பூர்ணசந்திர தேஜஸ்வியின் வாசகர்கள் நூறு பேர் இணைந்து கிரவுட் ஃபண்டிங் முறையில் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

நாடு முழுவதும் மதவாதமும் மதங்களுக்கிடையிலான வன்முறையும் சிறுபான்மை மதத்தவருக்கு எதிராக, குறிப்பாக இஸ்லாமியர்கள் குறித்துப் பரப்பப்படும் வெறுப்புப் பிரச்சாரமும் அதிகரித்துவருகின்றன. இந்தப் பின்னணியில், மதவாத அரசியல் தீவிரமடைந்துவரும் கர்நாடக மாநிலத்தில், ஒரு கிராமத்தைக் கதைக்களமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இத்திரைப்படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அம்மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா படத்துக்கு வரிவிலக்கை அறிவித்திருக்கிறார்.

வேற்றுமை நீங்கும் பயணம்: கர்நாடகத்தில் மதமோதல் சார்ந்த பதற்றம் நிறைந்த ஒரு கிராமம். அங்கே உள்ள புதுமுகக் கல்லூரியில் (ஜூனியர் காலேஜ்) பயிலும் ஒரே இஸ்லாமிய மாணவன் ஜமால் அப்து முஸ்தபா ஹுசைன். வெளியூரிலிருந்து வந்து அங்கே படிக்கிறான். அந்தக் கல்லூரியின் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர் களுக்கும் நெருக்கத்தில் அறிமுகமாகும் முதல் இஸ்லாமியன் அவன்தான்.

அன்பும் அப்பாவித்தனமும் நிறைந்த முஸ்தபாவின் மூலமாக இஸ்லாமியர்கள் குறித்து அக்கல்லூரியில் இருக்கும் அனைவரின் கற்பிதங்களும் படிப்படியாக விலகுகின்றன. இஸ்லாமியர்கள் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் என்று அவர்களை ஒதுக்கும் மனநிலையிலிருந்து அக்கல்லூரியின் இந்துக்கள் அனைவரும் விடுபடும் இந்த அழகான பயணத்தை, அனைவரும் ரசிக்கத்தகுந்த திரைப்படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சஷாங்க் சோகல்.

எளிமையின் அழகு: இந்தப் படத்தின் சிறப்பே இதன் எளிமைதான். புதுமுகக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் அனைத்தும், பார்வையாளர்கள் தாம் பயின்ற பள்ளி, கல்லூரிப் பருவங்களில் சந்தித்த மனிதர்களை எதிர்கொண்ட இனிமையான அனுபவங்களை நினைவுபடுத்துபவையாக அமைந்திருக்கின்றன.

பிற மதத்தவரை வெறுத்து ஒதுக்கும் மனநிலையிலிருந்து விடுபட வேண்டும் என்னும் நல்லிணக்கச் சிந்தனைதான் இப்படத்தில் வலியுறுத்தப்படுகிறது. மதங்கள் வேறானாலும் மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான் என்கிற மகத்தான செய்தி உணர்த்தப்படுகிறது. ஆனால், இவை எளிய, அப்பாவி மனிதர்களின் பேச்சுகளாகவும் செயல்பாடுகளாகவும் வெளிப்படுத்தப்படுகின்றன.

அந்தக் கல்லூரியில் குறும்புத்தனமும் வெள்ளந்தித்தனமும் மிக்க மாணவனான சீனிவாசா, முஸ்தபாவின் உணவுப் பெட்டியில் மோர் சாதம் இருப்பதைக் கண்டு “உங்கள் வீட்டில் தினமும் இறைச்சி சமைக்க மாட்டார்களா?” என்று கேட்கிறான். அதற்கு முஸ்தபா “உங்கள் வீட்டில் தினமும் லட்டு, முறுக்கு போன்ற பட்சணங்களைச் செய்வார்களா?” என்று கேட்கிறான்.

இஸ்லாமியர்களின் அன்றாட உணவு தொடங்கி, அவர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, வாழ்க்கை முறை என அனைத்தையும் பிறர் எவ்வளவு தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பது, இந்த எளிய உரையாடலின் மூலம் கச்சிதமாக உணர்த்தப்பட்டுவிடுகிறது.

அறியாமையும் அரசியலும்: இந்தப் படத்தில் யாரும் மதவாதியோ, மதவெறியரோ அல்ல. மதத்தைக் கடந்துவிட்ட புனிதர்களும் அல்ல. வேற்றுக்கிரகவாசிபோல் நடத்தப்படும் முஸ்தபா மட்டுமல்ல, அவனை அப்படி நடத்தும் இந்து மாணவர்களும் அப்பாவிகள்தான்.

இஸ்லாமியர்கள் குறித்த அறியாமையினால்தான் அவர்கள் முஸ்தபாவை விலக்கி வைக்கப்பட வேண்டிய அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள். இஸ்லாமியர்கள் மீதானவெறுப்பில் தீவிரமாக இருக்கும் ராமானு ஜத்தைக்கூட, அவன் எதிர்கொண்ட ஒரு தனிப்பட்ட இழப்புதான் அவனை அந்த மனநிலைக்குத் தள்ளியிருக்கிறது.

அதே நேரம் யாரையும் தீயவராக, எதிரியாகக் காண்பித்துவிடக் கூடாது என்பதற்காக, இஸ்லாமியர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் வீரியத்தை மழுங்கடிக்கும் முயற்சிகளில் இயக்குநர் ஈடுபடவில்லை, இஸ்லாமியர்களின் தேசப்பற்று பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் யதார்த்தம், கல்லூரி மாணவர்கள் மேடையில் தமது திறமைகளை வெளிப்படுத்தும் காட்சியின் வழியே அழுத்தமாக உணர்த்தப்படுகிறது.

முஸ்தபா தன்னுடைய அக்காவும் மாமாவும் சிம்லாவிலிருந்து வாங்கிவந்த குல்லாவைக் கல்லூரிக்கு அணிந்துவருவதால் அவனுக்கு ஏற்படும் பிரச்சினை, கடந்த ஆண்டு இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை ஒட்டி கர்நாடகத்தில் நிகழ்த்தப்பட்ட அரசியல் மோதல்களை நினைவுபடுத்துகிறது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு அதிக வரவேற்பைப் பெற்றிருப்பதற்குப் பின்னால் உள்ள அரசியலும் பேசப்பட்டிருக்கிறது.

படத்தில் நடித்த அனைவருமே எளிய மனிதர்களுக்கான இயல்பான தோற்றத்துடன் இருக்கிறார்கள். முஸ்தபாவாக நடித்திருக்கும் சிஷிர் பைகடி அப்பாவித்தனத்தையும் பிறரின் சந்தேகப் பார்வை தரும் மருட்சியையும் நட்பை நாடும் மனநிலையையும் கண்களாலேயே வெளிப்படுத்திவிடுகிறார்.

ராமானுஜமாக வரும் ஆதித்யா அஷ்ரீ, தனிப்பட்ட நம்பிக்கைகளும் சமூக யதார்த்தமும் வெவ்வேறாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடியாத பதற்ற உணர்வு கொண்ட சிறுவனின் மனநிலையை அழகாகப் பிரதிபலித்திருக்கிறார். ராமானுஜத்தின் நெருங்கிய நண்பர்களாக வரும் சிறுவர்கள் அனைவரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட கல்லூரி முதல்வர், விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் அவற்றில் நடித்தவர்களும் மனதில் பதிகிறார்கள். இசை (நவநீத் ஷாம்), ஒளிப்பதிவு (ராகுல் ராய்) உள்ளிட்ட அனைத்துக் கலையம்சங்களும் திரைக்கதைக்குத் தக்க துணைபுரிந்திருக்கின்றன.

நல்லிணக்கத்தை விதைக்கும் இந்த நல்ல சினிமா, அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது. எளிய, அழகான திரை அனுபவத்தை விரும்பும் அனைவரையும் இந்தப் படம் ஆரத் தழுவிக்கொள்ளும்.

- gopalakrishnan.sn@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in