அந்த நாள் ஞாபகம்: நான் நிராகரிக்கப்பட்டேன்! 

அந்த நாள் ஞாபகம்: நான் நிராகரிக்கப்பட்டேன்! 
Updated on
3 min read

தன் மீது சுமையாக ஏற்றிவைக்கப்பட்ட கவர்ச்சி முத்திரையை ஒரு கட்டத்தில் தனது குணச்சித்திரப் பரிமாணத்தால் துடைத்தெறிந்த நட்சத்திரம் சில்க் ஸ்மிதா. இறந்து 26 ஆண்டுகள் ஆனபிறகும் அவரது நினைவு நாள், பிறந்த நாள் வரும்போதெல்லாம் #சில்க்ஸ்மிதா என்கிற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகிவிடுவதே அவர் உருவாக்கிச் சென்றிருக்கும் அபிமானத்துக்குச் சாட்சி. அவரை 1995இல் சந்தித்து நட்சத்திரன் எடுத்த பேட்டியின் ஒரு பகுதி இது.

“மிகவும் எளிமையாக உடை அணிவதுதான் எனது இயல்பு. ஷூட்டிங் நேரத்தைத் தவிர மேக்கப்பும் போட்டுக்கொள்ளமாட்டேன். இப்போ நான் கவர்ச்சிக் கன்னியாகப் பெயரெடுத்து விட்டேன். ஆனால், என் பெற்றோர் பழமையில் ஊறினவங்க. நான் சினிமாவில் நடிப்பதிலேயெல்லாம் அவங்களுக்கு இஷ்டமேயில்ல.

அதனால இப்போக்கூட அவங்களோட சொந்த ஊரிலேயே இருக்காங்க. விஜயவாடாவுக்குப் பக்கத்துல ஏலூருன்ற டவுன் இருக்குது. அதுகிட்டே இருக்கிற ஒரு கிராமம்தான் எங்க ஊரு. அங்க இருந்த பள்ளிக்கூடத்துல 5 வரைக்கும் படிச்சேன். அதுக்கு மேலே ஏலூரில் உள்ள ஒரு கான்வென்ட்ல சேர்த்தாங்க.

பிடிவாதம்: லீவுக்கு வரும்போதெல்லாம் பிடிவாதம் பிடிச்சு நிறைய சினிமா பார்ப்பேன். அப்படித்தான் சினிமாவில நடிக்கணும்னு ஆசை வந்தது. சினிமால சேர நானே சென்னைக்கு வந்தேன் – சாவித்திரி மாதிரி பேரெடுக்கணும்கிற ஆசையோடு. சினிமாவில் சேர நிறைய முயற்சிகள் எடுத்துக்கிட்டேன். ‘வண்டிச் சக்கரம்’ படத்தில அறிமுகமானேன். என் சொந்தப் பேர் விஜி என்கிற விஜயலட்சுமி. கே.ஆர்.விஜயா, விஜயகுமாரி, விஜின்னு நிறைய பேர் இருந்ததினாலே ‘ஸ்மிதா’ன்னு என் பேரை மாத்திக்கிட்டேன். ஆனால் ஸ்மிதான்ற பேரைவிட, என் முதல் படக் கதாபாத்திரத்தின் பேரான ‘சில்க்’ தான் நிலைச்சுப் போச்சு.

சாவித்திரி மாதிரி வரணும்னு ஆசைப்பட்டு விட்டு ஏன் ‘சில்க்’ மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கிற வாய்ப்பை ஏத்துகிட்டீங்கன்னு நீங்க கேட்கிறது நியாயம்தான். நீங்க நம்பினாலும் சரி, நம்பாட்டியும் சரி, சினிமாவிலே தலைகாட்டிடணுன்னு அந்தக் கதாபாத்திரத்துக்கு ஒத்துக்கிட்டேனே தவிர, அப்படி ஒண்ணுல நடிச்சா, அப்படியே நம்மை முத்திரை குத்திடுவாங்கன்னு நான் எதிர் பார்க்கலே. இந்த ‘டைப் காஸ்ட்’ பற்றி அப்ப யாராவது எனக்கு எடுத்துச் சொல்லியிருந்தால் நான் நிச்சயம் அப்படி நடிச்சிருக்க மாட்டேன்.

நிராகரிப்பு: சினிமாவில் மளமளவென்று வாய்ப்புகள் குவியத் தொடங்கினப்போ.. நான் எதிர்பார்த்த வேஷங்கள் எனக்குக் கிடைக்கலேன்னாலும் புகழ், பணம், அங்கீகாரம் எல்லாம் எக்கச்சக்கமாக குவிஞ்சது. கூடவே என்னைப் பற்றி நிறைய வதந்திகள். சொந்தத் தயாரிப்புகளில் நான் பணத்தை இழந்ததா வந்த ஒரு வதந்தியைத் தவிர என்னைப் பற்றி வந்த வேறு எதுலையும் உண்மையில்ல. வதந்திகளைப் பற்றி நான் எப்பவுமே கவலைப்பட்டதில்ல என்பது வேற விஷயம்.

நான் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த ‘அன்று பெய்த மழை’ படம் ஆஸ்கார் பரிசீலனைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. விமர்சகர்களும் என்னைப் பாராட்டி, வாழ்த்தினாங்க. ஆனால், மாநில அரசாங்கம், அந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான விருதுக்கு என் பெயரைப் பரிசீலனைகூடப் பண்ணல.

காரணம் கேட்டப்போ.. ‘நெகடிவ் ரோல்’களுக்கு அப்படிப்பட்ட பரிசுகள் கொடுக்க மாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க! நடிப்புத் திறமையைப் பார்க்காம இப்படியெல்லாம் ஒரு வரைமுறையை வைத்திருப்பது எனக்குச் சரியாப் படலை.

குற்றச்சாட்டு: என்னைப் போன்ற நடிகர்களால் சமுதாயம் கெட்டுப்போகுது என்கிற குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ரஜினி, கமல் போன்றோர் படங்களுக்கு அவர்கள் நடிப்பு, ஸ்டைலைப் பார்க்கவென்றே நிறைய ரசிகர்கள் வருவார்கள். அதுபோல் என் படங்களிலும் ஒரு பகுதி ரசிகர்கள் சிலவற்றை எதிர்பார்க்கவே செய்கிறார்கள். நட்சத்திரங்களிடம் சில அம்சங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் வருவதை, நான் அவர்களைக் கெடுக்கிறேன் என்கிற குற்றச்சாட்டுக்குள் எப்படி அடக்க முடியும்?

என்னோட ஐம்பதாவது வயதிலும் நான் இப்படியே ரசிகர்களைச் சந்தோஷப் படுத்தியபடி இருக்க ஆசை. அது நடக்கும்ன்னு நினைக்கிறேன்! நடிப்பதை நிறுத்தினாலும் மாடலிங் செய்வேன். அந்தத் துறையில் எனக்குக் கொள்ளை ஆசை.

காதலர்: இப்போதைக்கு எனக்கு நெருங்கிய உறவு என்று நான் கருதும் ஒரே நபர் ராதாகிருஷ்ணன்தான். என் வருங்காலக் கணவர் - அதாவது என்னுடன் சுற்றிக் கொண்டிருக்கும் தாடிக்காரர் எனப் பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டவர். இவர் ஒரு தகுதி பெற்ற டாக்டர்.

ஆனாலும் இவர் பிராக்டிஸ் செய்து நான் இதுவரை பார்த்ததில்லை. இவர் தயாரித்த ஒரு படத்தில் நான் நடித்தபோதுதான் எனக்கு இவர் பழக்கமானார். நாங்கள் இன்னும் இரண்டு வருடம் கழித்துத்தான் கல்யாணம் செய்து கொள்வதாக இருக்கிறோம். அதற்குப் பிறகு நடிப்பைத் தொடர்வதா, வேண்டாமா என்பதைப் பற்றி இப்போது தீர்மானிக்கவில்லை.

நான் வாங்கிய முதல் காரின் எண் 3030. அது பிரபலமாகி அந்தக் காரை எங்கு பார்த்தாலும் என் ரசிகர்கள் அடையாளம் கண்டு சூழ்ந்து கொள்வார்கள். அதனால் நான் புதிதாக வாங்கும் கார்களுக்கும் அதே எண் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். இதை சென்டிமென்ட் என்று வேண்டுமானால் சொல்ல லாம். மூட நம்பிக்கையில்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in