Published : 04 Jul 2014 03:35 PM
Last Updated : 04 Jul 2014 03:35 PM

இந்திய சினிமா பர்சானியா: ரத்த சாட்சி

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கும் படங்களில் கற்பனை என்பது கட்டுக்குள் இருக்க வேண்டும். நடந்ததை நடந்ததுபோல் பல சமயங்களில் கையாள முடியாது என்றாலும், நடந்த நிகழ்வுகளைத் திரைக்கதையின் விறுவிறுப்புக்காகத் திரிக்காத திரைப்படங்கள், பார்வையாளர்களுக்கு நெருக்கமாகிவிடும். 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பர்சானியா’ படம் அப்படியானது. நீங்கள் அப்படத்தைப் பார்க்க நேர்ந்தால் அதற்குள் தொலைந்து போவீர்கள். நீங்களும் தாக்கப் பட்டதாக எண்ணி அதிர்ச்சியும் துக்கமும் அழுத்த திரையரங்கை விட்டு வெளியே வரக்கூடும்.

அழகான குடும்பம்

குஜராத் தலைநகர் அகமதாபாத் தான் கதைக்களம். பல்வேறு மதங்களைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பங்கள் ஒன்றிணைந்து வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்பு. சைரஸின் அழகான குடும்பமும் அங்கே வசிக்கிறது. திரையரங்க ஆபரேட்டரான சைரஸ், பார்சி இனத்தைச் சேர்ந்தவர். திரையில் விரியும் உலகில் தங்களது களைப்பை இறக்கிவைத்துவிட்டுச் செல்லும் சினிமா ரசிகர்களின் முகமலர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொள்பவர். சைரஸ் ஷெர்னாஸ் தம்பதிக்குப் பன்னிரெண்டு வயது பர்சான் என்ற மகனும், பத்து வயது தில்சான் என்ற மகளும் இருக்கிறார்கள்.

பள்ளி முடிந்து தங்கையுடன் வீடு திரும்பும் வழியில் சாக்லேட் மலைகளும், கிரீம் ஆறுகளும் நிறைந்த ‘பர்சானியா’ என்ற தனது கற்பனை உலகைப் பற்றித் தங்கையிடம் விவரித்து அவளை வியப்பில் ஆழ்த்துகிறான் பர்சான்.

காந்தியைப் பற்றிய ஓர் ஆய்வுக்காக அமெரிக்காவிலிருந்து அகமதாபாத் வந்த ஆலன், சைரஸ் குடும்பத்துக்கு அறிமுகம் ஆகிறார். ஆலன் சைரஸ் இடையே ஒரு மெல்லிய நட்பு படர்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் இன்ன பிற மத, இனத்தைச் சேர்ந்தவர்களும் அமைதியாக வாழ்ந்துவரும் அந்த நகருக்குக் கோத்ரா சம்பவம் நாசத்தைக் கொண்டுவருகிறது.

ரயில் எரிப்பு

ரயில் எரிப்பு பற்றிய செய்தி வானொலி மூலமாகத் தெரியவருகிறது. இந்தத் துயரச் சம்பவத்திற்கு ஆறுதல் கூறும் முதலமைச்சர் கோத்ரா சம்பவத்தை நிகழ்த்தியவர்களுக்குச் சரியான பாடம் கற்றுத் தர வேண்டும் என்று தொலைக்காட்சி வாயிலாகக் கூறுகிறார். இந்நிலையில் சைரஸ் குடும்பத்தினர் வாழ்ந்து வரும் குடியிருப்பு நோக்கிக் காவி வண்ணத்தில் எழுத்துகள் பொறித்த சால்வை அணிந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் கைகளில் கூர்மையான ஆயுதங் களை ஏந்தி வருகிறார்கள்.

குடியிருப்புகளுக்குள் நுழையும் அந்த மதவாதிகள் அங்கே கண்ணில் பட்ட மக்களைக் கொலை செய்வதும், வீடுகளுக்குள் பெட்ரோல் வெடி குண்டுகள் வீசுவதுமான வன்செயலில் ஈடுபடுகின்றனர்.

இந்தச் சமயத்தில் திரையரங்கில் இருக்கும் சைரஸ் தனது குடியிருப்புப் பகுதியில் நடந்துகொண்டிருக்கும் கலவரத்தின் முகம் அறியாமல், புரஜெக்டரிலிருந்து திரை நோக்கிப் பாய்ந்து செல்லும் ஒளியைப் போல முகம் முழுக்கப் பிரகாசத்துடன் திரைப்படத்தை ரசித்துக்கொண்டிருக்கிறார்.

சைரஸின் மனைவி ஷெர்னாஸ் கலவரத்தில் இருந்து தன்னுடைய குழந்தைகளையாவது காப்பற்ற வேண்டும் என்று அருகில் இருக்கும் வீடுகளுக்குச் சென்று உதவி கேட்டுக் கதறுகிறார். ஆனால் எந்தக் கதவும் திறக்கப்படவில்லை. குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தீயின் நாக்குகளுக்கு நடுவே உயிருக்காக ஓடும் ஷெர்னாஸ், கூட்டத்தில் தன்னுடைய மகன் பர்சானை இழந்துவிடுகிறாள். மீண்டும் சென்று தேடுவதற்குள் மதவாதிகள் அவளைத் தாக்க மாடியில் இருந்து மகள் தில்சானுடன் குதித்து விடுகிறாள்.

கீழே விழுந்தவுடன் தன்னைச் சுற்றி நடைபெறும் கலவரத்தைக் கண்டு பயந்து போகும் சிறுமி தில்சான் அந்தப் பகுதியில் இருந்து ஓடி விடுகிறாள். குழந்தைக்குப் பின் ஓடும் ஷெர்னாஸ் விவசாய நிலத்தில் தில்சானுடன் ஒளிந்துகொள்கிறாள். கண் முன்னால் நடைபெறும் பாலியல் கொடுமைகளை ஷெர்னாஸ் பார்க்க நேர்கிறது. தொலைந்த மனைவி, மகள் இருவரையும் பேப்பர் போடும் சிறுவன் உதவியுடன் சைரஸ் கண்டுபிடிக்கிறார். கலவரத்தில் என்ன ஆனான் என்று தெரியாத தன் மகன் பர்சானை சைரஸ் கண்டுபிடித்தாரா என்று விரிகிறது கதை. ஆவணப் படத்துக்கும் திரை மொழிக்கும் இடையிலான தொனியுடன் கூடிய டாக்கு டிராமா தன்மை கொண்ட சித்தரிப்பு நம்மை உறையச் செய்து விடுகிறது.

இழப்பின் வேதனை

அமெரிக்க வாழ் இந்தியரான ராகுல் தொலக்கியா இயக்கத்தில் 2005-ம் ஆண்டு இந்தப் படம் குஜராத் மாநிலத்தில் பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. அந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் பிரிவில் ராகுல் தொலக்கியாவிற்கும், சிறந்த நடிகை பிரிவில் சரிகாவுக்கும் தேசிய விருது அளிக்கப்பட்டது.

அன்புடன் வளர்த்த நாய் தொலைந்து போய்விட்டாலே அதை எண்ணி ஏங்கும் மனம் மனிதர்களுடையது. பர்சானைப் போலப் பெற்ற மகனை, மகளை, மனைவியை, சகோதரியைக் கலவரத்தில் இழந்த, தொலைத்த மக்களின் ரத்த சாட்சியாக விரியும் பர்சானியா, இந்திய சினிமாவின் துணிச்சலான குரல்களில் ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x