

“தமிழ் சினிமாவிற்குத் தேவை புதுக் கதைக்களத்தை எடுக்கிற இயக்குநர்கள் அல்ல, அதை ஏற்றுக்கொள்கிற தயாரிப்பாளர்கள்தான். அவர்களால் மட்டுமே தமிழ் சினிமாவை மாற்ற முடியும். புதுத் தயாரிப்பாளர்களால்தான் தற்போது தமிழ் சினிமாவின் நிறம் கொஞ்சம் மாறியிருக்கிறது.” என்று தமிழ் சினிமா மீது தான் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தியபடி பேச்சைத் தொடங்கினார் இயக்குநர் கிருஷ்ணசாமி. ‘முகவரி’ தொடங்கி, கே.வி. ஆனந்தின் ‘அயன்’, ஷங்கரின் ‘ஐ’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கிருஷ்ணசாமி. சிறுகதை எழுத்தாளர், டிவிகளில் பணியாற்றியது எனப் பயணம் செய்து இப்போது இயக்குநராகியிருக்கும் இவரிடம் உரையாடியதிலிருந்து...
வில்லனோட பார்வையில்தான் முழுக் கதையும் நகருவது போலத் தெரிகிறதே...
வில்லனோட பார்வையிலே படம் என்று சொல்லிவிட முடியாது. வில்லன் என்றாலே அயோக்கியன்தான் என்பது தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி. அவனும் சராசரியான ஆள்தான். ஒரு வேலையை முடிக்க வெளிநாட்டில் இருந்து வர்றான், கும்பகோணத்தில் ஹோட்டலில் தங்கறான், மக்களோடு பழகறான். இப்படித்தான் காட்சிகள் நகரும். அவனை வில்லனாகவோ திருடனாகவோ அடையாளம் காண முடியாது. அவன் செய்ய வந்த காரியத்தை முடித்தானா என்ற ஆர்வம்தான் படம் பார்ப்பவர்களுக்கு இருக்கும். 75 சதவீதம் உண்மைச் சம்பவம்தான். கொஞ்சம் கற்பனை கலந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் நடந்த, நடந்துகொண்டிருக்கிற சிலைக் கடத்தலைப் பற்றித்தான் படமே. சிலைத் தடுப்புப் பிரிவு என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கு. தமிழ்நாட்டில்தான் அதிக அளவு சிலை கடத்தல்கள் நடந்துகிட்டே இருக்கு.
ஒரு சுரங்கப் பாதையை படத்தின் கதாபாத்திரமாக மாற்றி இருக்கிறீர்களா?
கதையை முடிவு பண்ணிட்டு, படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்தோம். அப்போதுதான் கதையில் ஒரு சுரங்கம் வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அது வழியா நாயகன் போனா நல்லாயிருக்கும் என்று முடிவு பண்ணினேன். தயாரிப்பாளரிடம் சொன்ன உடனே கதைக்குத் தேவைப்பட்டா பண்ணிக்கோங்க அப்படின்னு சொல்லிட்டார். அந்த 10 நிமிடக் காட்சிகளுக்காக எதிர்பார்க்காத தொகையைச் செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால் சுரங்கம் என்பது இந்தக் கதையில் முக்கியமான ஒரு அம்சம்.
படக் குழுவில் யாருக்குமே சுரங்கத்தைப் பற்றித் தெரியாது. சோழர் காலத்துச் சுரங்கத்தைப் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை. ஏற்காடு பகுதியில் இருக்கும் சுரங்கத்தில் இறங்கி அதைப் புகைப்படம், வீடியோ எடுத்து அதை வைத்துக்கொண்டு சுரங்கத்தை உருவாக்கினோம். சுரங்கத்திற்குள் படப்பிடிப்பு நடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் தியாகராஜன். இந்தியாவின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரத்னவேலுவின் மாணவர். தெலுங்குப் படவுலகில் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஒளிப்பதிவாளராக இருக்கும் இவர், வங்கதேச சினிமாவிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். களவுத் தொழிற்சாலை வெளியான பிறகு தியாகராஜன் மேலும் பிஸியாகிவிடுவது உறுதி.
வில்லன் பார்வையில் நகரும் கதையிலும் காதல் காட்சிகள் எல்லாம் சேர்த்து கமர்ஷியல் படமா பண்ணியிருக்கீங்களே?
நாம் காலையில் எழுந்து பணிக்கும் கிளம்பும்போதோ பணியில் இருக்கும் போதோ நிறைய பேரைச் சந்தித்துப் பேசுவோம். அதுபோலத்தான் பிரதான பாத்திரத்தின் பயணத்தில் மற்றவர்களைச் சந்திப்பது தவிர்க்க முடியாத ஒன்று. அவன் எப்படி பிரதான பாத்திரத்தோடு இணைந்தான். அப்படி அவன் சொன்ன உடன் இருவரும் எப்படி இணைந்து போக ஆரம்பித்தார்கள் என்பதை சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறோம். மக்கள் படம் முடிந்து வெளியே போகும்போது, படத்திலுள்ள உணர்வுகள் அவங்க கூடவே போகும். 500 பேர் படம் பார்க்கிறார்கள் என்றால், யாருமே இதில் என்ன டெக்னாலஜி உபயோகப்படுத்தி இருக்காங்க என்ற பார்வையில் படம் பார்ப்பதில்லை. 2 மணி நேரப் படம் போரடிக்காமல் இருந்ததா? இதுதான் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு முக்கியம்.
சிலை கடத்தல் பற்றிய படத்துல சண்டைக் காட்சிகள் இல்லாமல் பண்ணியிருக்கீங்க. இது சாத்தியமா?
புதுசா பண்ணிரணும் என்பதற்காக இதை நான் பண்ணவில்லை. கதையின் பயணத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்திருக்கிறேன். ஒருத்தன் ஆயுதங்களோடு பயணம் செய்யும்போது இருக்கும் பரபரப்பு இந்தப் படத்தில் இருக்கிறது. முதல் பாதியில் இவன் செய்யும் காரியம் முடிகிறது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாதியில் ஒரு சி.பி.சி.ஐ.டி. ஆபீசராகக் களஞ்சியம் நடிச்சிருக்கார். இந்தியக் கலாச்சாரத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு இஸ்லாமிய சி.பி.சி.ஐ.டி ஆபீசர், இந்தியக் கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிற இஸ்லாமிய ஆபீசர். இப்படிக் கதையில் நிறைய வித்தியாசமான பாத்திரங்கள் இருக்கின்றன. இந்த மாதிரியான கதையில் ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு சண்டை போட்டுக்கொள்வது மாதிரியான விஷயங்கள் தேவையில்லாததாகிவிட்டது.
உதவி இயக்குநரா பணியாற்றியது எல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள். ஆனால் முதல் படமா சிறு பட்ஜெட் படத்தைச் செய்திருக்கிறீர்களே?
பெரிய நடிகர்களை வைத்துப் பெரிய பட்ஜெட் படங்கள் பண்ணும்போது புதிய விஷயங்களைத் தவறவிட்டு விடுவோம். 2 கோடி ரூபாய்க்குப் படம் எடுத்து, 4 கோடி ரூபாய் ஈட்ட வேண்டும் என்பதற்கும் 20 கோடி ரூபாய் படம் எடுத்து, 40 கோடி ரூபாய் ஈட்ட வேண்டும் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பட்ஜெட் அதிகரிக்க அதிகரிக்க தலையீடுகள் அதிகமாக இருக்கும். அதைத் தப்பு என்று சொல்ல முடியாது. ரிப்போர்ட்டர், சிறுகதை எழுத்தாளர், டிவி எனப் பலவகையில் பணியாற்றி இருக்கிறேன், உதவி இயக்குநர் எல்லாத்தையும் தாண்டி தான் இயக்குநராகி இருக்கிறேன். இப்படி என்னுடைய பயணம் இருக்கும் போது, முதல் படமாக 5 பாட்டு, 4 பைட் போன்ற காட்சிகளை எல்லாம் நான் நினைத்துப் பார்க்கவில்லை. படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நடிகர் நமது மனதில் நிற்கக் கூடாது. அவர் நடித்த பாத்திரம்தான் நிற்க வேண்டும். ‘தளபதி’யில் ரஜினியும், ‘குணா’வில் கமலும் நமது மனதில் நிற்கமாட்டார்கள். அவர்களது கதாபாத்திரங்கள்தான் நிற்கும்.
உதவி இயக்குநரா ஷங்கரிடம் பணியாற்றும்போது நீங்கள் வியந்த விஷயங்கள் என்ன?
உதவி இயக்குநர்கள் அவர்கிட்ட கத்துக்கிட்டு எதையுமே பாலோ பண்ண முடியாது. ஏனென்றால், அவர்கிட்ட உள்ள விஷயத்தைக் கத்துக்கிட்டு பாலோ பண்ண, ரெண்டு படம் பண்ணி இருக்கணும்.
‘ஐ’ படத்துல நான் அட்மாஸ்பியர் ஆக்டிவிட்டீஸ் இயக்குநரா பணியாற்றினேன். ஒரு காட்சில நாயகன், நாயகி கூட 500 பேர் வர்றாங்க அப்படின்னா 500 பேர் நடந்து வாங்க அப்படினு காட்சிப்படுத்த மாட்டார். 500 பேருக்கான வேலையை நான் பண்ணனும். மவுண்ட் ரோடுல வைச்சு ஷாட் எடுக்கிறார் அப்படின்னா, அதற்கு ஏற்றாற் போல நான் ஜூனியர் நடிகர்களைப் பிடிக்கணும். ஒவ்வொரு நடிகரும் சரியா இருக்கணும்னு எதிர்பார்ப்பார். எல்லா இயக்குநர்களும் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அவர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார். இதையெல்லாம் நான் அவர்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். எல்லாத்தையும் ஒரே படத்துல பண்ண முடியாது. முயற்சி பண்ணியிருக்கிறேன்.