பாலகுமாரன் 77 | சினிமாவுக்குப் போன எழுத்துச் சித்தர்

பாலகுமாரன் 77 | சினிமாவுக்குப் போன எழுத்துச் சித்தர்
Updated on
3 min read

“நான் அடிச்சா... நீ செத்துருவ!" அடிமேல் அடி வாங்கிக்கொண்டு, திருப்பியடிக்காமல் ரத்தம் வழிய நிமிர்ந்து பார்க்கும் இளம் ‘நாயகன்’ வேலு நாயக்கர் மொழி புரியாத இன்ஸ்பெக்டர் கேல்கரை எச்சரிக்கிறார். இதுவே ‘நாயக’னில் (1987) கமல்ஹாசன் பேசும் முதல் வசனம். வேலு எப்படிப்பட்டவர் என்பதைச் சட்டெனப் புரிய வைத்துவிடும் சின்ன வசனம். எழுதியவர், பாலகுமாரன். தமிழ் சினிமா பேசத் தொடங்கியதிலிருந்து வசனம் பல மாறுதல்களுக்கு உட்பட்டுப் பயணித்திருக்கிறது.

அந்த வரிசையில் மக்களின் புழங்கு மொழியில் எழுதி, கதாபாத்திரங்களின் வார்ப்புக்குக் கட்டுமானமாக மாறிய வசன கர்த்தாக்களில் குறிப்பிடத்தகுந்தவர் பாலகுமாரன். ‘எழுத்துச் சித்தர்’ என்று வெகுஜன வாசகர்களால் கொண்டாடப்பட்ட எழுத்தாளர் பாலகுமாரன்.

தொடக்கம்: "சொன்னா பதற மாட்டீங்களே..? நீங்க எழுதுறதைக் குறைச்சுக்கணும்" - சினிமாவுக்குள் நுழைய ஆசைப்பட்ட பாலகுமாரனுக்கு அவருடைய நண்பர் கமல்ஹாசன் சொன்ன முதல் அறிவுரை. அதற்கு முன்னரே, 17 வருட டிராக்டர் கம்பெனி வேலையை விட்டுவிட்டு அவர் இணைந்தது இயக்குநர் பாக்யராஜிடம் ‘முந்தானை முடிச்சு’ கதை விவாதத்தில் கலந்து கொண்டு, தனக்கு சினிமா சரிப்படாது என்று கம்பெனி வேலைக்கே திரும்பிவிட்டார். பின்னர் ‘செவன் சமுராய்’ படம் பார்த்து, சினிமா தான் தனது பாதை என்று தீர்மானித்தார். இம்முறை அவர் இணைந்தது கவிதாலாயாவில். அதுவும் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக. ‘சிந்து பைரவி’, ‘புன்னகை மன்னன்’, கன்னடத்தில் இரண்டு படங்கள் எனப் பணியாற்றித் திரைக்கலைப் பயின்றார்.

இயக்குநராகும் தனது கனவை, தாம் எழுதிய ‘இரும்பு குதிரைகள்’ நாவலில் கதா நாயகன் விஸ்வநாதன் மூலமாக நேர்த்தியாக வெளிப்படுத்தி இருந்தார். திரைப்படப் பாடல்களைப் பற்றி நாவல்களில், இவர் சிலாகித்த அளவுக்கு வேறு யாரும் செய்ததில்லை. திரைப்படப் பாடல்கள் வரிகளிலிருந்து தனது பல நாவல்களுக்குத் தலைப்பு சூட்டியிருக்கிறார். கே.பாலசந்தரிடம் பணியாற்றியிருந்தாலும் அவரது இயக்குநர் கனவை ‘இது நம்ம ஆளு’ (1988) படத்தின் மூலம் நிறைவேற்றியது என்னவோ கே.பாக்யராஜ்தான். ஒரே திரைப்படத்தை இயக்கிய பின் வெற்றிகரமான கதை, வசன கர்த்தாவாக கோலிவுட்டில் வலம் வந்த ஒரே எழுத்தாளர் இவர் மட்டும்தான்.

வசனம்: ‘வசனம்’ என்று ‘டைட்டில் கிரெடிட்’டில் பாலகுமாரன் ஒளிர்ந்தாலும் திரைக்கதை, காட்சிகள், கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் அவரது பங்களிப்பைத் தேடி வந்து பெற்றுக்கொண்டவர்கள் ஏராளம். அப்படி அவர் வசனம் எழுதிய பல படங்களில் முதன்மை, துணை, துண்டு கதாபாத்திரங்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அவை பேசும் வசனங்களில் அவை, வாழ்ந்த, வாழும் வாழ்க்கையின் அடையாளம் பதிந்திருக்கும்.

இயக்குநர் குதிரையை விட்டுவிட்டு பின்பு வசனம் எழுதும் குதிரையில் பயணிக்கத் தொடங்கிய பாலகுமாரன் முதலில் எழுதிய படம் ‘நாயகன்’. “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல”, “எங்களையெல்லாம் என்ன விலைக்கு வித்தீங்க துரை?” என்பது போன்ற பட்டுத் தெறிக்கும் வசனங்கள், பாலகுமாரன் என்கிற உரையாடல் கலைஞன், கதைக் களத்துக்குள் கதாபாத்திரங்களின் மனமொழியுடன் உலவும் ஆன்மா என்பதை உணர்த்தியது. நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசன், சாப் ஜானுடன் இணைந்து ‘குணா’வில் பணியாற்றினார்.

"அபிராமி அந்தாதி நூறு பாட்டையும் மனப்பாடம் செஞ்சிருக்கே... ஆனா ஏன் எழுதக் கத்துக்கல?" என்கிற கேள்விக்கு, "அபிராமி உள்ள... எழுத்தெல்லாம் வெளிய..." என்று சொல்லத் தொடங்கி, அறைக்குள் சுற்றிச் சுற்றி நடந்தபடி கமல் பேசும் வசனக் காட்சி குணாவின் சிறப்புகளில் ஒன்று. சித்தப்பாவாக வரும் ஜனகராஜ், கோபக்கார இன்ஸ்பெக்டராக வரும் அஜய் ரத்னம், போகிற போக்கில் நாவிதராக வரும் ஆர்.எஸ்.சிவாஜி எனச் சிறு கதாபாத்திரங்களின் வெவ்வேறு நிறங்களைக் கூடத் துல்லியமாக வசனத்தின் வழி வெளிப்படுத்தி விடுவது பாலகுமாரனின் முத்திரை.

பிரம்மாண்டம்: இன்று அகில இந்திய அளவில் புகழ்பெற்று விட்ட இயக்குநர் ஷங்கர், தன் முதல் மூன்று படங்களிலும் பாலகுமாரனுடன் பணியாற்றினார். அவை ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’. "சத்திரியனாக இருக்காதே... சாணக்கியனாக இரு..." என்று சொல்லும் நம்பியாரின் வசனம் தொடங்கி, இறுதிக் காட்சியைத் தூக்கி நிறுத்திய நீதிமன்ற வசனம் வரை ‘ஜென்டில்மேன்’ படத்தின் பிரம்மாண்டங்களின் ஒன்றாக இருந்தது பாலகுமாரனின் வசனம்.

அப்படத்தின் நாயகன் கிச்சா இறுதியாகத் தொடங்கும் அமைப்பின் பெயர் ‘மக்கள் கல்வி மையம்’. ‘ஜீன்ஸ்’ படத்தில் உலக அதிசய ஆரவாரங்களை மீறிச் செட்டிநாட்டு சுந்தராம்பாளாக வந்த ராதிகாவின் கதாபாத்திர மும் வசனங்களும் நினைவில் தங்கியதற்கு இவரது பங்களிப்பு ஒரு முக்கியக் காரணம்.

‘பாட்ஷா’ - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உயரத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்ற படம். அதற்கு வசனம் பாலகுமாரன். "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்கிற உச்ச நட்சத்திரத்துக்கான பஞ்ச் வசனம் தொடங்கி, தங்கையின் கல்லூரி அனுமதிக் காட்சி, தன் அண்ணன் யாரெனக் குழம்பும் தம்பி, கேள்விகள் கேட்கும் காட்சி எனக் காட்சிக்குக் காட்சிப் படத்தைப் பட்டைத் தீட்டியது வசனம்.

திரையாக்கத்தில் சற்று சரிந்திருந்தாலும் கதையளவில் ‘சிட்டிசன்’ இன்றும் சுவாரசியமான திரைப்படங்களில் ஒன்று. அத்திப்பட்டி என்கிற கடலோரக் கிராமம் காணாமல் போனது பற்றி இன்றும் பேச்சு வழக்கிலும் மீம்களிலும் உலாவுவது பாலகுமாரனின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. அடுத்த தலைமுறை கலைஞரான சிம்புவின் தொடக்கக் காலப் படங்களான ‘மன்மதன்’, ‘வல்லவன்’ போக, ‘உல்லாசம்’, ‘முகவரி’ போன்ற படங்களிலும் இவரது பங்கு மெச்சத்தகுந்தது.

புதுப்பேட்டை: நிழலுலகை ரத்தமும் சதையுமாகக் கச்சாவாகச் சித்தரித்த படங்களின் வரிசையில் இடம்பெற்ற முக்கியமான மைல்கல் படம் ‘புதுப்பேட்டை’. அதில் பாலகுமாரனின் பங்களிப்பு அதை ஒரு கேங்ஸ்டர் கிளாசிக் ஆக்கியிருக்கிறது. அது நாள் வரை கட்டப்பட்டிருந்த உள்ளூர் அரசியல் தொடர்புடைய நிழலுலகம், அதன் பின்னணிகளைப் ‘புதுப்பேட்டை’ படம் புரட்டிப்போட்டது.

பிரதான கதை மாந்தர்கள் மட்டுமல்லாமல், அதன் நாயகனாக எழும் கொக்கி குமாரின் தந்தையாக வரும் சேகர், அவனது எதிரி அரசியல்வாதி தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசும் வசனங்களில் வழியாகத் துலங்கும் வாழ்க்கை, அதில் தெறிக்கும் வன்முறை ஆகியவற்றிலிருந்து எழும் ரத்தக்கவிச்சியைப் பார்வையாளர்களுக்கு பந்தி வைத்தார் பாலகுமாரன். "பயந்துட்டியா குமாரு..?", "ஒரே அசிங்கமா போச்சு குமாரு..!", "தியாகம்தான் உன்னை உயர்த்தும்... நெருப்பு மாதிரி வேலை செய்யணும் குமாரு..." போன்ற வசனங்களின் ஈரம் எப்போதும் காயப்போவதில்லை.

இயக்கம், உதவி இயக்கம், திரைக்கதை பங்களிப்பு, கூடுதல் கதை எனப் பலவிதங்களில் பங்களித்திருந்தாலும் பாலகுமாரன் வசனம் எழுதிய 22 படங்களும், திரையுலகில் அவர் செலவிட்ட 21 வருடங்களும் அவரது தனித்த, அழுத்தமான திரை எழுத்தை முன்மாதிரியாக முன்வைத்துவிட்டன.

படம்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in