சினிமா ரசனை 2.0 - 5: திரை வெளியில் பழங்குடிகள்!

சீரோ கேர்ரா
சீரோ கேர்ரா
Updated on
3 min read

தென் அமெரிக்காவில் தயாராகும் பல படங்களில் அந்தப் பிராந்தியத்தின் அரசியல் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும். அதனுடன் சேர்ந்து, ஸ்பெயின், போர்ச்சுகல் முதலிய ஐரோப்பிய நாடுகளால் சீரழிக்கப்பட்ட வரலாறும் பேசப்பட்டிருக்கும். தென் அமெரிக்காவின் இயற்கை அழகு வெளிப்படும் காட்சிகளின் பின்னணியில் இப்படிப்பட்ட வரலாறு சொல்லப்படும்போது, அங்கே நடந்த சம்பவங்களுக்காக நாம் வருத்தப்படாமல் இருக்க முடியாது. அந்தப் பழைய அரசியல் இப்போதும் வேறு வடிவத்தில் அங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது.

அமேசான் காடுகளைச் சேர்ந்த பழங்குடியினர் பலரும் இயற்கையை வழிபடும் மரபினர். அவர்களைப் பொறுத்தவரை, இயற்கை அழியத் தொடங்கினால் மனித இனமும் சிறுகச் சிறுக அழியும். அதனால் இயற்கையைத் தங்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதுகின்றனர். இயற்கையோடு சேர்ந்து மிக எளியதொரு வாழ்க்கையை வாழ்கின்றனர்.

அந்தப் பழங்குடி இனத்தில் எஞ்சியிருக்கும் கடைசி சில மனிதர்களில் ஒருவர், மற்றொரு பழங்குடிப் பெண்ணுடன் தொடர்புகொள்ள முயல்கிறார். அது மனித எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

அந்தத் தொடர்பால் என்ன நடந்தது? அவர்கள் இருவரும் யார்? - சில வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் இந்தத் தகவல்களை ஒன்று சேர்த்து ஒரு கதை எழுதினால் எப்படி இருக்குமோ, அதுதான் ‘ஃபெரதீரா வெரதெ’ Frontera Verde (Green Frontier) வெப் சீரீஸ். கொலம்பியா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இயக்குநர் சீரோ கேர்ரா (Ciro Guerra), மேலும் இரண்டு இயக்குநர்களோடு (Jacques Toulemonde Vidal & Laura Mora Ortega) சேர்ந்து இயக்கியிருக்கும் அற்புதமான தொடர் இது.

துப்புத் துலக்கும் இருவர்: சீரோ கேர்ரா, இந்து டாக்கீஸில் முதல் முறை சினிமா ரசனைத் தொடரை வாசித்த வாசகர்களுக்குப் புதியவர் அல்ல. இவரது ‘எம்பிரேஸ் ஆஃப் த சர்ப்பென்ட்’ (Embrace of the Serpent) படத்தைப் பற்றி விரிவாகப் பார்த்திருக்கிறோம். உலகை உலுக்கிய படங்களில் ஒன்று அது. அமேசான் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வயதான ஒரு முதியவர், ஜெர்மனியிலிருந்து வந்திருக்கும் ஒரு விஞ்ஞானிக்கு வழிகாட்டியாக அமேசான் காட்டினுள் செல்கிறார். இருவருக்குள்ளும் என்ன நடக்கிறது? எப்படி நவீன உலகம், அந்தப் பழங்குடி முதியவரின் உலகத்தைச் சுக்கு நூறாக உடைத்துவிட்டிருக்கிறது என்பது அப்படத்தில் அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கும்.

அத்தகைய உலகப் புகழ்பெற்ற சீரோ கேர்ரா முதல் எபிசோடை இயக்கியிருக்கும் ‘Green Frontier’ வெப் தொடர், அதேபோன்ற அட்டகாசமான ஓர் அனுபவம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால், உலகப் படங்களில் சொல்வது போன்ற கதை சொல்லலை இம்முறை கையாளாமல், விறுவிறுப்பான ஒரு த்ரில்லராகக் கொடுத்து, அதற்குள் அவர் சொல்ல வந்த அரசியலை விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார் சீரோ கேர்ரா.

கொலம்பிய - பிரேசில் எல்லையில் பழங்குடிப் பெண்ணான உஷே என்பவர் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து இன்னும் சில கிறிஸ்துவக் கன்னியாஸ்திரிகளின் பிணங்களும் கண்டெடுக்கப்படுகின்றன. கொலம்பியத் தலைநகர் பொகொதாவில் இருந்து இந்தக் கொலைகளைத் துப்பறிய வருகிறார் பெண் போலீஸ் அதிகாரியான ஹெலெனா. உள்ளூரில் ரேய்னால்டோ என்கிற பழங்குடி நபர் ஒருவர் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். அவரது இனத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர் (அதற்கான காரணம் சீரீஸில் பின்னால் பேசப்படும்). ரேய்னால்டோ, ஹெலனா இருவரும் இணைந்து கொலைகளுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.

அவர்களின் விசாரணை, அமேசானைச் சிறுகச்சிறுக அழிக்க நினைக்கும் ஒரு கும்பலை நோக்கித் திரும்புகிறது. அதேவேளை, கொலை செய்யப்பட்டு இறந்துபோன உஷேவின் பின்னணியும் நமக்குச் சொல்லப்படுகிறது. போலீஸ் அதிகாரி ஹெலெனா, தனக்கும் அந்தக் காட்டுக்கும் இருக்கும் தொடர்பை மெல்ல மெல்ல உணரத் தொடங்குகிறார்.

மேஜிக்கல் ரியலிசம்: மிக இயல்பாகவும் விறுவிறுப்பாகவும் செல்லும் இந்த சீரீஸில் சொல்லப்படும் விஷயங்கள் ஏராளம். கூடவே, மேஜிக்கல் ரியலிசம் என்று சொல்லப்படும் ஒரு பாணி, இந்த சீரீஸை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. இயல்பாகக் கதை நகரும்போது, திடீரென்று ஓர் அதிசயமான விஷயம் நடந்து, பின்னர் மறுபடியும் கதை இயல்பாகச் செல்வதே மேஜிக்கல் ரியலிசம். இந்த சீரீஸில் இப்படிப்பட்ட மேஜிக்கல் ரியலிசச் சித்தரிப்புகள் அங்கங்கே வருகின்றன.

ஆனால், அவை, கதையை இன்னும் அழுத்தமாக நமது மனதில் பதிக்கவே செய்கின்றன (தென் அமெரிக்கா - மேஜிக்கல் ரியலிசம் என்றதுமே கேஃப்ரியேல் கார்ஸியா மார்க்கோஸின் நினைவு அவரைப் படித்தவர்களுக்கு வரலாம்).1 இத்தொடரில் காட்டப்படும் முக்கியமான விஷயம் அமேசான் காடு. - இந்த சீரீஸ் முழுவதும் ஒரு கதாபாத்திரமாக வந்துபோகிறது காடு.

அந்தக் காட்டில் பழங்குடியினரின் வாழ்க்கை, அவர்களது சட்டதிட்டங்கள், காட்டை அழிக்க நினைக்கும் கொடூரக் கும்பல், அவர்களுக்கும் பழங்குடியினருக்குமான யுத்தம், கொலைகளைத் துப்பறியும் ஹெலெனாவும் ரெய்னால்டோவும் தங்களைப் பற்றி அறிந்துகொள்வது, காடுகளில் தடயங்களைத் தேடிச் செல்வது என்று எந்தக் காட்சியை எடுத்துக்கொண்டாலும் பிரம்மாண்டமான பச்சை பசேல் அமேசான் காடு நம் கண்களை நிறைத்துக்கொண்டே இருக்கிறது. அந்தக் காட்டைப் பற்றியே அனைவரும் பேசுகையில் ஓர் உயிருள்ள கதாபாத்திரமாகவே அது மாறிப்போகிறது.

இன்னும் சில தொடர்கள்: இந்தத் தொடரைப் பார்க்கையில் பிரபல இயக்குநர் வெர்னர் ஹெர்ஸாக் நினைவுக்கு வந்தார். தென் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட அவரது படங்கள் புகழ்பெற்றவை; உலகெங்கும் பல விருதுகள் வாங்கியவை. குறிப்பாக அவரது ‘Aguirre, the Wrath of God’, ‘Fitzcarraldo’ ஆகிய இரண்டு படங்கள். அவற்றுக்கும் ‘Green Frontier’ சீரீஸுக்கும் தொடர்பு இருக்கிறது. ஒரே ஒரு சீசன் - மொத்தம் எட்டு எபிசோட்கள். நெட்ஃபிளிக்ஸில் இந்த சீரீஸைப் பார்க்கலாம்.

தென்னமெரிக்கா ஏன் தொடக்கத்தில் இருந்தே ஐரோப்பிய நாடுகளால் கைப்பற்றப்பட்டுக்கொண்டே இருந்தது என்று யோசித்தால், துளிகூட இரக்கமே இல்லாத, தீவிர மதவாதிகளான ஸ்பெயின், போர்ச்சுகல் முதலிய நாடுகளிலிருந்து சாரிசாரியாகப் படைகள் புறப்பட்டுச் சென்று, கொடூரமான தளபதிகளின் கீழ் அப்பாவித் தென் அமெரிக்கப் பழங்குடியினரை ஈவு இரக்கமே இல்லாமல் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து, தங்களது மதத்தை நிலைநாட்டியிருக்கிறார்கள்.

தென் அமெரிக்காவைச் சூறையாடியிருக்கிறார்கள். ஐரோப்பிய வெறியர்களின் வருகைக்கு முன்னர் தென் அமெரிக்கா உண்மையிலேயே அமைதி நிரம்பிய பகுதியாகவே இருந்திருக்கிறது. அப்போது இருந்த தென் அமெரிக்கப் பழங்குடியினர்களுக்குள் சண்டைகள் இருந்திருக் கின்றன - அதிருப்திகள் இருந்திருக்கின்றன என்றாலும் யாருமே ஐரோப்பியர்கள் அளவுக்குத் தென் அமெரிக்காவைச் சூறையாடவில்லை. இந்த வரலாற்றுக்கும் Green Frontier சீரீஸுக்குமே தொடர்புகள் உண்டு. இந்த சீரீஸில் வரும் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்துக்கு ஐரோப்பிய வேர்கள் உண்டு.

எப்படி ஸ்பெயின் நாடு தென் அமெரிக்காவுக்குப் படைகளை அனுப்பியது என்பதை அறிய, ‘Hernn’ சீரீஸைப் பார்க்கலாம். இது ஸ்பானிஷ் தளபதி ஹெர்ன்யன் கார்ட்டெஸ் பற்றியது. அதேபோல் ‘Boundless’ என்கிற சீரீஸைப் பார்த்தால் போர்ச்சுகல் நாடு எப்படி உலகை முழுக்கவே கண்டுபிடித்துவிட வேண்டும் என்கிற வெறியுடன் நாலா பக்கமும் ஆட்களை அனுப்பியது என்பது தெரியவரும். இதில், புகழ்பெற்ற ஆய்வாளர் ஃபெர்டினாண்ட் மெகல்லன் ஒரு முக்கியமான கதாபாத்திரம்.

- rajesh.scorpi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in