

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் ‘மாமன்னன்’ படம், பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மனிதர்களிடம் இருக்கிற சாதி வெறி குறித்துத் தனது முதல் படத்தில் பேசியவர், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் மண்டிக் கிடக்கும் சாதிய மனோபாவம் குறித்து அடுத்த படத்தில் பதிவுசெய்தார். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர், அதிகாரத்துக்கு வருவது குறித்து ‘மாமன்னன்’ வாயிலாகப் பேச முயன்றுள்ளார்.
சாதியப் படிநிலை, அதைக் கட்டிக்காக்கும் சமூகக் கட்டமைப்பு – இவைதான் இவரது படங்களின் மையச் சரடு. சாதி ஆணவத்துடன் செயல்படுகிற மனிதர்களிடம் மன மாற்றம் ஏற்படாதவரை இங்கே எதுவுமே மாறப்போவதில்லை எனத் தன் முதல் படத்தில் சொன்னதைத்தான் ‘மாமன்ன’னிலும் அழுத்தமாக நிறுவியிருக்கிறார் மாரி செல்வராஜ். தான் சார்ந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் முன்னால் நின்றபடியே பேசுகிற சட்ட மன்ற உறுப்பினர் மாமன்னன், அவைத் தலைவராக உயர்வதற்கான சாத்தியங்களையும் இப்படத்தில் கவனப்படுத்தியுள்ளார்.
மாற்றத்துக்கு வித்திட வேண்டும் பெண்கள்: சமூக நீதி அரசியலைப் பேசுகிற கட்சிகளில் நிலவுகிற சாதிய ஒடுக்குமுறையில் தொடங்கி, ஒடுக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்படுகிற அங்கீகாரம், எளிய மனிதர்களிடம் குடிகொண்டிருக்கும் சாதிப்பற்று, கம்யூனிசம், அருந்ததியர் வாழ்க்கை, அடிமுறை, இளையோர் சமூகம் எனப் பல்வேறு தளங்களையும் இந்தப் படம் தொட்டுச் செல்கிறது.
எந்தத் தடை வந்தாலும் நாம் நம் இலக்கை அடைவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்கிற கருத்தைத்தான் படத்தின் தொடக்கமும் முடிவும் வலியுறுத்துகின்றன. சில இடங்களில் வசனங்கள் ஆழ்ந்த பொருளைத் தருகின்றன. ஆண் ஒருவன் வீட்டுக்கு வெளியே இழைக்கிற எல்லா வகை அநீதியையும் கண்டுகொள்ளாமல் அமைதிகாத்து அவனுடன் வாழும் பெண்ணுக்கும் பங்கு உண்டு.
பெரும்பாலான பெண்கள், சாதியைப் போற்றிப் பாதுகாப்பதன் மூலம் வீட்டில் தங்கள் இருப்பையும் அதிகாரத்தையும் உறுதிசெய்துகொள்வதாக நம்புகிறார்கள். சாதியின் பெயரால் சொந்த மகளையும் மகனையும் கொல்லத் துணிகிற கொடூரத்துக்கும் அதுவே காரணம்.
இப்படியொரு இறுக்கமான சமூகக் கட்டமைப்பில் பெண்களிடம் ஏற்படுகிற மாற்றம் எவ்வளவு முக்கியம் என்பதை ரத்னவேல் கதாபாத்திரத்தின் மனைவி ஜோதி மூலம் இயக்குநர் உணர்த்தியிருக்கிறார். ஒரு காட்சியில் மாமன்னனையும் அவருடைய மகன் அதிவீரனையும் கொல்வதற்காகத் துப்பாக்கியை எடுக்கும் தன் கணவனை அறைக்குள் அடைத்துவைக்கிறார் ஜோதி.
அதன் மூலம் தன் கணவனைக் கொலைக் குற்றத்திலிருந்து காக்க நினைக்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு இருக்கிற அதிகார அரசியல் பலத்துக்குக் கொலையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதை ஜோதி உணராதவர் அல்ல.
இன்னொரு காட்சியில் துக்க வீட்டில் மாமன்னன் தரப்புக்கும் ரத்னவேல் தரப்புக்கும் இடையே மோதல் நிகழ்கிறபோது அதைத் தடுக்கும்படி தன் கணவனைக் கேட்பார் ஜோதி. இந்த இரண்டு காட்சிகளும் முக்கியமானவை. பெண்கள் நினைத்தால் எதையெல்லாம் தடுக்கலாம் என்பதற்கான சான்றுகள் இவை. தன் கணவன் தவறிழைக்கும் இடங்களில் எல்லாம் ஜோதி முள்மேல் நிற்பது போன்ற முகபாவத்துடன் இருப்பதும் குறிப்பிடத்தகுந்தது.
இளையோர் சக்தி: தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் என அவரவர் பிரச்சினை குறித்து அவரவர் மட்டுமே பேச வேண்டும் என்கிற மனநிலைதான் பெரும்பான்மையோரிடம் இருக்கிறது. இவை தனித்தனி பிரச்சினைகள் அல்ல; இவை சமூகத்தின் பிரச்சினை என்கிற புரிதல் வருகிறபோதுதான் அனைவரும் இணைந்து குரல்கொடுக்க வேண்டியதன் அவசியம் விளங்கும்.
கம்யூனிச சிந்தனை கொண்டவராகக் காட்டப்படும் லீலாவும் அதிவீரனும் தங்களைக் குறித்துப் பேசிக்கொள்வதும் இதைத்தான். இடதுசாரிகள் சில நேரம் மேட்டுக்குடி மனோபாவத்துடன் நடந்துகொள்வதாகப் பொதுவாகக் குற்றச்சாட்டு உண்டு. அதிவீரனின் வலி, வேதனை குறித்து எதுவுமே தெரிந்துகொள்ளாமல் தவறாக நினைத்திருந்ததாக லீலா சொல்கிற காட்சி அப்படியானதொரு படிமம்தான்.
ஆணைப் போல உடை அணிந்திருந்தாலும் வெட்கப்படுவதாக லீலாவிடம் அதிவீரனின் அம்மா சொல்வது, மாற்றம் புறத்தில் மட்டுமல்ல அகத்திலும் வேண்டும் என்பதைக் காட்டுகிறது. தேர்தல் பரப்புரையின்போது தன் நண்பன் வீட்டுக்குச் செல்லும் அதிவீரன், “இப்போதுகூட என் பிரச்சினையைப் பற்றி நான்தான் பேசணுமா?” என்பார். அழிக்கப்பட வேண்டிய சமூக இழிவு குறித்து அனைவரும் பேச வேண்டும் குறிப்பாக இளைஞர்கள் பேச வேண்டும் என்பதைத்தான் அதிவீரனின் சொல் உணர்த்துகிறது.
இந்தப் படம் உணர்த்த விரும்பும் மற்றுமொரு முக்கியமான செய்தி கல்வி. கல்வி தருகிற அறிவும் தெளிவும் அடிமைத்தளையிலிருந்து நாம் விடுபடுவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கும். அதிகாரத்தை நோக்கி நம்மை நகர்த்தும். முந்தைய தலைமுறையின் சாதிய அழுக்கு நம் மீது படாமல் நம்மை மீட்கும். தேசிய நுழைவுத் தேர்வு, அரசுத் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் மாணவர்கள் படிப்பது, மாமன்னனைத் தேர்தல் பரப்புரைக்குத் தங்கள் ஊருக்குள் நுழைவதை அனுமதிக்காத பெற்றோரை எதிர்த்து அவர்களுடைய பிள்ளைகள் திரள்வது போன்றவை மாற்றத்துக்கான வெளிப்பாடுகள். இளைஞர்கள் செல்ல வேண்டிய பாதையும் இதுதான்.
அதீத வன்முறை: துண்டு துண்டான காட்சிகள் படத்தின் ஆற்றொழுக்குக்குப் பின்னடைவு. கல்லூரி ஆண்டு விழா, உத்வேகமூட்டும் பாடல், நாயகனின் குத்தாட்டம் போன்றவை கிளிஷேவாகிவிட்டன. புத்தர் சிலை, பெரியார் சிலை, அம்பேத்கர் ஒளிப்படம், நாய் – பன்றி எதிர்நிலை என ஏராளமான குறியீடுகள். பெண்ணுடல் மீதான வன்முறைக்கு எதிராகப் படம் எடுப்பதாகச் சொல்லிக்கொண்டு அதில் பெண்ணுடலையே விற்பனைப் பொருளாகச் சிலர் பயன்படுத்திவிடுவார்கள். வன்முறைக்கு எதிரான படங்களும் சில நேரம் அப்படி அமைந்துவிடுவது உண்டு.
பந்தயத்தில் தோற்ற நாயை ரத்னவேல் கொல்லும் காட்சி, கோயில் குளத்தில் குளிக்கும் சிறுவர்களை ஊர்ப் பெரியவர்கள் கல்லால் தாக்கிக் கொல்லும் காட்சி, பன்றிகளை நாய்கள் கடித்துக் குதறும் காட்சி போன்றவை அதீத வன்முறையோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. யதார்த்தம் இதைவிடக் குரூரமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதைப் படமாக எடுக்கிறபோது பார்வையாளர்களுக்கு நாம் எதைத் தந்து அனுப்புகிறோம் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
சாதிப் பெருமை பேசும் படங்கள், விருப்பமில்லாத பெண்ணைப் பின்தொடர்ந்து இம்சிக்கும் ‘ஸ்டாக்கிங்’கைக் காதல் என்று விதந்தோதும் படங்கள், ஆணாதிக்கத்தை விதந்தோதும் நாயகப் பிம்பப் படங்கள், பிற்போக்குத்தனங்களைக் கடைவிரிக்கும் குடும்பப் படங்கள், நகைச்சுவை என்கிற பெயரில் பெண்களையும் மாற்றுத்திறனாளிகளையும் இழிவாகச் சித்தரிக்கும் மூன்றாந்தரப் படங்கள், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான படங்கள் போன்றவை வந்து குவிகிற தமிழ்த் திரையுலகில், சமூக நீதியின் அவசியத்தை முன்வைக்கும் ‘மாமன்னன்’களின் வரவுகள் வரவேற்கப்பட வேண்டியவை.
- brindha.s@hindutamil.co.in