திரைப் பார்வை: தண்டட்டி | பெண்கள் வாழாத வாழ்வு

திரைப் பார்வை: தண்டட்டி | பெண்கள் வாழாத வாழ்வு
Updated on
3 min read

‘தண்டட்டி' என்கிற தலைப்பைப் பார்த்ததும் வடித்த காதுகளுடன் ஒரு வயதான முகம் ஞாபகத்தில் வந்து ஆடியது. காலத்தில் தொலைந்து போன ஓர் ஆபரணம். அதன் மீது உணர்வுகளை ஏற்றி திரைக்கதையை வடிவமைத்துள்ளார் இயக்குநர் ராம் சங்கையா.

தங்கப்பொண்ணு என்கிற வயதான பெண்மணியாக ரோகிணி. அவர் திடீரெனக் காணாமல் போகிறார். அவரைத் தேடித் தர வேண்டிக் கண்ணீருடன் காவல் நிலையத்தில் வந்து நிற்கிறார்கள் பேரனும் தங்கப் பொண்ணுவின் மகள்களும். இதை விசாரிக்கும் போலீஸ் ஏட்டு கதாபாத்திரத்தில் பசுபதி. எளிய அறத்தைக் கைவிடாத அந்தக் காவலர் பேரனுடன் சேர்ந்து தங்கப்பொண்ணுவைத் தேடுகிறார்‌. அப்போது இருவருக்கும் நடக்கும் உரையாடலின் வழி தங்கப்பொண்ணுவின் கடந்த கால வாழ்க்கையை அறிந்து கலங்குகிறார் பசுபதி.

அதன் பின் நான்கு நாட்களாகக் காணாமல் போன தங்கப்பொண்ணு கிடைக்கிறார். ஆனால் கிடைத்ததும் இறந்து போகிறார். நான்கு மகள்கள், ஒரு மகன் ஆகியோர் தங்கப்பொண்ணு இறந்ததும் அவரது தண்டட்டியைக் கைக்கொள்ள திட்டமிடுகின்றனர்‌. அவர்கள் யார் கைகளிலும் கிடைக்காமல் தண்டட்டி இழவு வீட்டில் தொலைந்து போகிறது. வில்லங்கத்துக்குப் பெயர் போன கிடாரிப்பட்டி கிராமம் தொலைந்து போன தண்டட்டியைத் தேடும் பொறுப்பைக் காவலர் பசுபதியிடம் ஒப்படைக்கிறது. இழவு வீட்டில் நடக்கும் சம்பவங்களை வைத்துக் கிராமிய வாழ்வு ஒளிரும் படத்தைத் தந்துள்ளார் இயக்குநர்.

வழக்கமானவற்றிலிருந்து விலகி, இதுபோன்று கிராம வாழ்விலிருந்து கதை சொல்லும் பாணியை முயல்வதே பாராட்டுக்குரியது. தண்டட்டியைக் குறியீடாகக் கொண்டு யோசித்தால், இக்கதை இன்றைய அவசர வாழ்வையும் சேர்த்தே பேசுகிறது. மனிதர்கள் பொருள்களுக்காக, பணத்துக்காக, தங்கள் மனிதக்கோட்டு எல்லையை மீறத் துணிகின்றனர். அம்மா, மகள், மகன் இவர்களுக்கிடையேயான உறவுகூட ஒரு கட்டத்தில் நகை, நிலம் ஆகியவற்றுக்குள் வந்து நின்று, அதன் புனிதத்துவங்களை மண்ணில் கட்டிப் புரள வைத்துவிடுகிறது.

ராம் சங்கையா
ராம் சங்கையா

ரோகிணி கதாபாத்திரம் துரோகங்களை மட்டுமே வாழ்வில் எதிர்கொள்கிறது. அவருக்கான வாழ்வை அவர் வாழவே இல்லை. மகள்களின் பேராசை, சகோதரனின் வன்முறை, குடிகார மகனால் எதிர்கொள்ளும் சங்கடங்கள் இவற்றுக்கிடையே வயோதிகத்தோடு மல்லுக்கட்டும் ஒரு வாழ்வு. எல்லா வீடுகளிலும் இது போன்ற கதை கொண்ட ஒரு பெண் இருக்கவே செய்கிறாள். அவளின் கதையும் அவளது மனதில் புதைந்துகிடக்கும் உண்மைகளும் அவளது உடலோடு சேர்ந்து எரிந்து விடுகின்றன.

பசுபதி, ரோகிணி இருவருக்கும் மிகையான நடிப்பைத் தர ஏதுவான காட்சிகள் இருக்கின்றன. என்றபோதும் அக்காட்சிகளின் உணர்வு நிலைக்கு ஏற்ப அவர்கள் அளவாக மனதுள் கையாண்டு தாம் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு இயல்பான, அளவான நடிப்பின் வழியாக நேர்மை செய்திருக்கின்றனர். அதே நேரம் மிகையான நடிப்பைக் கோரும் கதாபாத்திரங்களில் வரும் தீபா ஷங்கர், செம்மலர் அன்னம், பூவிதா, ஜானகி என மகள்களாக வருபவர்களும் ‘உரக்க’ நடித்துப் பொருந்திப் போகின்றனர்.

நாக்கைத் துருத்திக் கொண்டு நாள்தோறும் தள்ளாடிக் கொண்டு திரியும், பார்த்தவுடன் ஊரே விலகி நடக்கும் வழக்கமான ஒரு கிராமத்துக் கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா. அவரால் இயன்றவரை போதையைப் பார்வையாளர்களுக்குள் கடத்த முயல்கிறார். இழவு வீட்டுச் சடங்குகள், அங்கு இயல்பாக நிகழும் சம்பவங்கள் ஆகியன யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளன. வேடிக்கைகள் நிறைந்த படத்தில் ஓர் அழுத்தமான பின்னணிக் கதை உள்ளது. இளவயது ரோகிணியாக அம்மு அபிராமி அதற்கு மிகப் பொருத்தமான தேர்வு. தண்டட்டி மீது ஏற்றப்பட்டிருக்கும் உணர்வுக்குள் பார்வையாளர்களை இக்காட்சிகள் உடனடியாகப் பிணைக்கின்றன.

ஒரு கட்டத்தில் தண்டட்டியைத் தங்கப்பொண்ணுவின் கைகளில் தராமல் அவளை எரியூட்டிவிடக் கூடாது என்று நம் மனமும் சேர்ந்தே பதறுகிறது. தேனி மாவட்ட மலையோரக் கிராமம், வீடுகள், காவல் நிலையம் ஆகியவற்றை இயல்புறக் காட்சிப்படுத்தியிருக்கிறது மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு. இழவு வீட்டில் ஒரு காட்சியில் தண்டட்டியை யாரெல்லாம் எடுத்திருக்கக் கூடும் என்று நாம் சந்தேகப்படும் ஒவ்வொருவர் முகபாவத்திலும் கேமரா நின்று வரும். காட்சியின் வழி கதை சொல்லும் நேர்த்தி அது. பின்னணி இசை அழுத்தமாக இருப்பதா, வேடிக்கையாக இருப்பதா என்பதில் ஒரு சில இடங்களில் மட்டும் தடுமாற்றம் தெரிகிறது.

"வெறும் கதையில் மட்டுமே கேட்டது அப்பத்தா வாழ்விலும் நடந்திருக்கிறது" என்று பேரன் ஓர் இடத்தில் பேசுவான். ஒவ்வொரு வசனமும் கதையோடு இணைந்து வெளிப்படுவது சிறப்பு. 2000 ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப்பூம்பட்டினம் செழிப்பாக இருக்கிறது என்பதைக் குறிப்பிடும் ‘அகல் நிகர் வியன் முற்றத்துச் சுடர்'’ என்று தொடங்கும் ஒரு பாடல் பட்டினப் பாலையில் வரும். வீட்டு முற்றத்தில் உலர்த்தியிருக்கும் உணவுப் பொருட்களைத் தின்ன வரும் கோழிகளை விரட்ட, தமது காதில் அணிந்திருக்கும் வளைந்த அடிப்பாகத்தைக் கொண்ட கனத்தக் குழையினை (காதணி) காதலி கழற்றி எறிவர் என்று அப்பாடல் பொருள் உணர்த்துகிறது. அந்த ஆபரணம் தண்டட்டி என்று குறிப்பிடப்படவில்லை. அதே நேரம் தங்க ஆபரணத்தை வெகு சாதாரணமாக ஒரு எறிகல்லாகப் பயன்படுத்தும் வாழ்வும் தமிழரிடம் இருந்துள்ளது.

ஆனால், இன்று பொருள் நுகர்வு மிக்க வாழ்வில் தண்டட்டிக்காகப் பெற்ற தாயின் அன்பையே புறந்தள்ளி நிற்கும் அவலம் நம்மிடம் உண்டு என்பதைக் குத்திக்காட்டுகிறது படம். அதே ஆபரணத்தை, ரத்தமும் சதையுமான ஒரு அன்புக்காகத்தான் அந்தத் தாய் தனது மனதுக்குள் நீண்ட காலமாகப் பொத்தி வைத்திருக்கிறாள்.

வாழ்வின் அவலங்களை நேரடியாகப் பேசாமல் பின்னணியில் வைத்துப் பேசுவதுதான் கலையின் பலம். ‘தண்டட்டி’ படம் கிராமங்களில் செல்லரித்து நிற்கும் சாதியின் முகம், பெண்கள் வாழாத வாழ்வு, மனிதர்களின் உறவுகளில் பொருட்கள், உடைமைகள் மீது நிலைகுத்தி தேங்கி நிற்கும் அவல நாட்டத்தை, அழுத்தமும் வேடிக்கையாகவும் பேசும் இப்படம், தமிழ் சினிமாவின் அசலான முயற்சிகளில் ஒன்றாக மலர்ந்திருக்கிறது.

- ஸ்டாலின் சரவணன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in