

தொலைக்காட்சிகளில் சரித்திரத் தொடர்கள் என்பவை ஒரு தனியான, பிரம்மாண்டமான பிரிவு. பிரம்மாண்டம் என்பது அவற்றின் பட்ஜெட்டில் மட்டுமல்லாது, அத்தொடர்களில் காட்டப்படும் விஷயங்களையும் சேர்த்துத்தான். திரைப்படங்களைவிடவும் சரித்திரத் தொடர்களில் கதை நடக்கும் பின்னணி, அந்த இடம், கதாபாத்திரங்கள் ஆகியவற்றை மிகவும் விரிவாகப் பேசியிருப்பார்கள். இதனால் கதைகளின் பின்னணி பற்றி நம் மனதில் நன்றாகவே பதியும்.
ஓடிடிக்களில் ஏராளமான சரித்திரத் தொடர்கள் உள்ளன. அவற்றில் பல தொடர்கள் மிகப் பிரபலமானவையும்கூட. அவற்றில் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ போன்ற ராஜா ராணி ஃபேண்டஸி தொடர்களும் உண்டு. அதேசமயம் ‘Hernn’ போன்ற, உண்மையாக நடந்த சம்பவங்களை அப்படியே பின்பற்றிய டிவி சீரீஸ்களும் உண்டு. இவற்றில் இன்று நாம் பார்க்கப்போகும் சீரீஸ், பின்னணிகளை அப்படியே வைத்துக்கொண்டு கற்பனைக் கதாபாத்திரங்கள் சிலவற்றின் மூலம் கதையை நகர்த்தும் தன்மை கொண்டது.
ஊறுகாய் அளவு உண்மை
தமிழில் சரித்திரப் படங்களை எடுத்துக் கொண்டால், மிகச் சில படங்களே வந்துள்ளன. அவற்றிலும் பெரும்பாலான படங்கள் நாற்பதுகள், ஐம்பதுகள், அறுபதுகளிலேயே வெளிவந்துவிட்டன (சரித்திரப் படங்கள் என்றால், ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘சிவந்த மண்’ போன்ற கற்பனை ராஜா - ராணிக் கதைகளையும்தான் குறிப்பிடுகிறேன். பின்னணியில், சமகாலத்தில் நடக்காமல் சரித்திர காலத்தில் கதை நடந்தால் அது சரித்திரப் படம் என்கிற வகையில்). முன்னர் வெளிவந்த பல சரித்திரப் படங்களில் ஆன்மிகம் சேர்ந்திருந்தது. அவற்றின் இடையிலேயே ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற தேசப்பற்றுப் படங்களும் வெளிவந்தன. இடையில் ‘மதுரை வீரன்’ போன்ற கதைக்களன் கொண்ட படங்களும் உண்டு. இவற்றில் ‘இருவர்’, ஓரளவு உண்மைக் கதையுடன் புனைவைச் சேர்த்தது. ‘நாயக’னும் அப்படியே. அதே மணி ரத்னம், ‘பொன்னியின் செல்வன்’ போன்ற முற்றிலும் புனைவான – மிக மிகக் குறைந்த உண்மைத் தகவல்கள் கொண்ட சரித்திர ராஜா ராணிப் படங்களும் எடுத்திருக்கிறார். இந்த வகையான படங்களுக்கு ‘Swashbuckling Films’ என்று பெயர். எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ வகை. ஹாலிவுட் நடிகர் எரால் ஃப்ளின் (Errol Flynn) நடித்த சில படங்கள் இப்படிப்பட்டவை. இந்த வகையில் பிரபலமான நடிகர் அவர்.
வழிகாட்டும் பாலிவுட்!
ஆனால், பிற நாடுகளின் சரித்திரப் படங்கள், சீரீஸ்களுடன் ஒப்பிட்டால், தமிழிலும் இந்தியாவிலுமே துல்லியமான தகவல்களோடு, நேர்த்தியாக எடுக்கப்பட்ட சரித்திரப் படங்களும் சீரீஸ்களும் மிகக் குறைவு. இப்போது சில வருடங்களாகத்தான் இந்திய மொழிகளில் சரித்திரக் கதைகள் சீரீஸ்களாகவும் படங்களாகவும் ஓரளவு பரவலாக எடுக்கப்பட்டு வருகின்றன. ‘கங்குபாய் ஹத்தியவாடி’ ஓர் உதாரணம். சஞ்சய் லீலா பன்சாலி இப்போதெல்லாம் சரித்திரக் கதைகளையே எடுக்கிறார். சோனி லைவில் உள்ள ‘ராக்கெட் பாய்ஸ்’ இன்னோர் உதாரணம். இது, மிக நன்றாக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு சீரீஸ். சுதந்திர இந்தியா எப்படி யெல்லாம் வானியலில் சிறப்பான சம்பவங்களைச் செய்யத் தொடங்கியது என்பதைப் பற்றியது இது. இம்மாதிரிச் சில படங்கள் இருந்தும் பொதுவில் உதாரணங்கள் குறைவே.
ஓடிடிக்களில் இருக்கும் கடல் போன்ற சரித்திரத் தொடர்களில் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போகும் சீரீஸ், ‘Taboo’. இது புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர் ஸ்டீவன் நைட் (Steven Knight) உருவாக்கிய சீரீஸ். இதன் மூலக் கதையைப் புகழ்பெற்ற நடிகர் டாம் ஹார்டியும் அவரது தந்தை எட்வர்ட் ஜான் ஹார்டியும் 2009இல் உருவாக்கினர். இதை ஸ்டீவன் நைட் கேட்க, அவருக்குப் பிடித்துப் போய் இந்த சீரீஸ் பிபிசி தயாரிப்பாக 2017இல் வெளியானது. நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டது.
தொலைந்தவன் திரும்பி வந்தான்!
கதை நடக்கும் காலகட்டம் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம். லண்டன் நகரம். அங்கே பல வருடங்கள் கழித்து, ஜேம்ஸ் டெலானி என்கிற கதாபாத்திரம் திரும்பிவருகிறது. காரணம்? அவனது தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. அதுவரை ஜேம்ஸ் இறந்துவிட்டதாகவே அனைவரும் நம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவனது வருகை மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்துகிறது. திரும்பிவந்த ஜேம்ஸ், ஒரு காட்டுவாசி போல இருக்கிறான். அவனது செயல்கள், அவன் பேசும் முறை ஆகிய எல்லாமே வன்முறை நிரம்பியதாக இருக்கிறது.
உயிலின்படி ஜேம்ஸின் தந்தைக்கு அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் ஒரு சிறிய நிலம் சொந்தமாக இருக்கிறது. அந்தக் காலகட்டம் (1814), பிரிட்டனும் அமெரிக்காவும் சண்டையிட்டுக் கொண்டிருந்த தருணம். பிரிட்டனது கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரம் எல்லையற்றதாக இருந்தது (கிழக்கிந்திய கம்பெனி தமிழின் சரித்திரப் படங்களில் மிகப் பிரபலம் என்பது உங்களுக்குத் தெரியும்). அவர்களுக்கு ஜேம்ஸின் தந்தை அமெரிக்காவில் வாங்கியிருக்கும் நிலத்தின் மீது கண். அந்த நிலத்தை ஜேம்ஸின் உறவுக்காரப் பெண் ஸில்ஃபாவிடம் இருந்து அவர்கள் வாங்க முயற்சிக்கும்போதுதான் ஜேம்ஸ் லண்டனுக்கு வருகிறான். இந்தத் திட்டம் பற்றி அறிந்து அதைக் கெடுத்துவிடுகிறான். அந்த நிலத்தை கிழக்கிந்தியக் கம்பெனி சொல்லும் விலைக்கு விற்பதில் அவனுக்குச் சம்மதம் இல்லை. தனது தந்தை இறந்ததைப் பற்றிய முக்கியமான உண்மை ஒன்றையும் ஜேம்ஸ் கண்டுபிடிக்கிறான்.
கறுப்பு வண்ணம்
இந்தத் தருணத்தில் தொடங்கி கதையில் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. காணாமல் போன ஜேம்ஸ் எங்கிருந்தான்? எப்படியெல்லாம் மாறினான்? அவனுக்கு அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக ஊரில் பேசிக்கொள்வது உண்மையா? ஜேம்ஸின் நோக்கம் என்ன? தனது தந்தையின் இறப்பு பற்றிக் கண்டுபிடித்த ஜேம்ஸின் நிலை என்ன? பிரிட்டனும் அமெரிக்காவும் சண்டையிட்ட போர் என்ன ஆனது?
இத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் சீரீஸ் இது. ஒரே ஒரு சீசன் மட்டுமே. அதில் எட்டு எபிசோட்கள். பிபிசி எடுக்கும் சீரீஸ்கள் எப்போதுமே நல்ல வரவேற்பு பெறுபவை. அதேபோல் இந்த சீரீஸும் நன்றாகவே பாராட்டப்பட்டது.
ஜேம்ஸ் டெலானியாக நடித்த டாம் ஹார்டி உண்மையாகவே நடிப்பில் பின்னி எடுத்திருப்பார். ஸ்டீவன் நைட் எழுதிய ‘பீகி பிளைண்டர்ஸ்’ (Peaky Blinders) சீரீஸ் உங்களைக் கட்டாயம் கவரக்கூடியது. அதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் டாம் ஹார்டி நடித்திருப்பார் (ஆல்ஃபீ என்கிற ஆல்ஃப்ரெட் சாலமன்ஸ்). அந்த சீரீஸில் நடித்துவந்தபோதுதான் இந்த ‘டாபூ’ சீரீஸீல் பிரதான வேடத்தில் டாம் ஹார்டி நடித்தார்.
இந்த சீரீஸைப் பொறுத்தவரை, இருண்மையானதொரு உணர்வு சீரீஸ் முழுதும் இருக்கும். கறுப்பு வண்ணம் சீரீஸின் பல காட்சிகளிலும் வரும். கதாநாயகன் ஜேம்ஸின் மனதில் இருக்கும் பிரச்சினைகளின் வெளிப்பாடு அது. அவனது கதாபாத்திரத்தின் தன்மை அது.
மிக நேர்த்தியாக, இருண்மை கலந்து, பின்னணியில் சரித்திரத் தகவல்கள் கலந்து விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட சீரீஸ்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் தாராளமாக ‘டாபூ’வைப் பார்க்கலாம். டாம் ஹார்டி பல படங்களில் நடித்துவருவதால் இதன் இரண்டாம், மூன்றாம் பாகங்களுக்கு இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஆனால், முதல் சீசனிலேயே முழுமையான ஒரு கதை காட்டப்பட்டிருக்கும் என்பதால், பாதியில் விடப்பட்ட நிலை பார்ப்பவர்களுக்குக் கிடைக்காது என்பது இதன் சிறப்பம்சம்.