

கிடைத்த வேலையைச் செய்யாமல் படித்த வேலைக்காகக் காத்திருந்து வெற்றி காணும் ஒரு இளம் பொறியாளனின் கதைதான் வேலையில்லா பட்டதாரி.
‘என் பெயர் ரகுவரன்’ என்று தனுஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இடத்திலிருந்து படம் தொடங்குகிறது. ரகுவரனை சதா சர்வ காலமும் திட்டித்தீர்க்கும் அப்பாவாக சமுத்திரக்கனி. செல்ல அம்மாவாக சரண்யா பொன்வண்ணன். வழிய வழியக் காதல் செய்யும் ஷாலினியாக அமலா பால். இவர்களைச் சுற்றித்தான் முதல் பாதி நகர்கிறது.
கட்டிடத் துறையில் பொறியியல் படிப்பை முடித்த ரகுவரனின் ஒரே விருப்பம், படித்த அதே துறையில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான். இதைப் புரிந்துகொள்ளாத சமுத்திரக்கனி பார்க்கும் போதெல் லாம் உதவாக்கரை என்று மகனைத் திட்டுவதைப் பழக்கமாக வைத்திருக் கிறார். இந்தச் சூழலில் ஷாலினி பக்கத்து வீட்டிற்குக் குடி வருகிறாள். ரகுவரனின் வெகுளித்தனத்தை ரசிக்கும் ஷாலினி, ஒரு கட்டத்தில் அவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள்.
எதிர்பாராத விதமாக வீட்டில் ஒரு அசம்பாவிதம் நடக்க, பழி ரகுவரன் மீது விழுகிறது. அவனும் குற்ற உணர்ச்சியில் குமைகிறான். ஆனால் அதன் பிறகு வரும் திருப்பம் அவனுக்குப் புதிய பாதையைக் காட்ட, தான் விரும்பும் வேலையைப் பெறுகிறான். சிறப்பாகப் பணியாற்றியதால் பெரிய புராஜக்ட் ஒன்றின் பொறுப்பும் கிடைக்கிறது. ஆனால் அதே புராஜக்டை எடுக்க முயன்று தோற்றவர்கள் அதைச் சீர்குலைக்க முயல்கிறார்கள். பணபலமும் அதிகார பலமும் கொண்ட அவர்களது சவாலை ரகுவரன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதே மீதிக் கதை.
படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமாக நகர்ந்தாலும் தனுஷின் பல படங்களில் பார்த்த காட்சிகள் என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பு ஏற்படத்தான் செய்கிறது. படித்த துறையில்தான் வேலைக்குப் போவேன் என்னும் பிடிவாதத்தை இயக்குநர் மேலும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். நாயகனின் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்கே நாயகி குடிவருவதும், அவளைப் பார்ப்பதற்காகப் பந்தை உள்ளே போட்டுவிட்டு எடுக்கப் போவதும் கற்பனை வறட்சியைக் காட்டுகிறது. நாயகிக்கு மெல்ல மெல்லக் காதல் வரும் விதம் இயல்பாக உள்ளது.
இரண்டாம் பாதியில் கதை தடம் மாறுகிறது. சுரேஷ் கிருஷ்ணா, ஷங்கர் போன்ற பெரிய பட்ஜெட் இயக்குநர்கள் கையாள வாய்ப்புள்ள சமூக ஃபேண்டசி வகை திரைக்கதையை தனுஷ் என்ற நடிகனை மட்டும் நம்பி எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் படைத்திருக்கிறார் இயக்குநர் வேல்ராஜ்.
பொறியியல் படித்து வேலையில்லாமல் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கேள்விக்குரிய எதிர்காலம், எளிய மனிதர்களின் வீட்டுக் கனவைப் பயன்படுத்தி கார்ப்பரேட்கள் அடிக்கும் கொட்டம் போன்ற சமகால யதார்த்தத்தைச் சுற்றிக் கதை பின்னப்பட்டுள்ளது. படத்தில் பேசப்படும் பிரச்சினைகளும், பின்னணியும் நிஜம். ஆனால் தனுஷ் கண்டுபிடிக்கும் சாகசத் தீர்வுகள் ஃபேண்டசி. சமீபத்தில் சென்னையில் நடந்த கட்டிட விபத்து இந்தப் படத்தைப் பார்க்கும்போது நிச்சயம் ஞாபகத்துக்கு வரும்.
மகனைப் பார்க்கும் போதெல்லாம் திட்டுவதையே வேலையாக வைத்திருக்கும் அப்பாவுக்கு மகன் கொடுக்கும் மரியாதை ரசிக்க வைக்கிறது. குடித்துவிட்டு வரும் மகனை அப்பாவிடம் அடி வாங்காமல் காப்பாற்றி அவர் வெளியே போனதும், ‘என்னடா இது பழக்கம்’ என்று பின்னி எடுக்கும் இடத்தில் ஆகட்டும், முதன்முதலாக வேலைக்கு போய் வாங்கிய சம்பளத்தில் 40 ஆயிரம் ரூபாயை செலவழித்ததற்காக அப்பா திட்டும்போது எதிர்த்துப் பேசும் மகனை அடிக்கும் அம்மாவாக நடித்திருக்கும் இடத்திலும் வாழ்ந்திருக்கிறார் சரண்யா. அமலா பாலுக்கும், தனுஷுக்குமான காதல் காட்சிகளில் குறை சொல்ல ஒன்றுமில்லை.
பாசம், காதல், கோபம், மகிழ்ச்சி, நடனம் என எல்லா இடங்களிலும் தனுஷின் நடிப்பை வஞ்சகம் இல்லாமல் பாராட்டலாம்.
அமலா பால் திருமணத்திற்குப் பிறகு வெளிவந்திருக்கும் முதல் படம் இது. அழகான அடுத்த வீட்டுப் பெண்ணாக கண்ணால் பேசி, சகஜமாக நடிக்கிறார்.
சிறப்புத் தோற்றத்தில் வரும் சுரபி, வில்லன் அமிதேஷ், விவேக் ஆகியோர் படத்துக்கு வண்ணம் சேர்க்கிறார்கள். அனிருத்தின் பின்னணி இசை படத்துக்கு சுருதியைக் கூட்டுகிறது. ‘வாட் எ கருவாடு’, ‘வேலையில்லா பட்டதாரி’ பாடல்கள் இளவட்டங்களை ஆட்டம் போட வைக்கின்றன. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், முதன் முறையாக ஒரு இயக்குநராக நின்று விளையாடியிருக்கிறார். ஒளிப்பதிவு, இயக்கம் இரண்டு வேலைகளின் பொறுப்பும் சேர்ந்ததின் அழுத்தத்தைப் படத்தின் சில காட்சிகள் பிரதிபலிக்கின்றன.
தனுஷின் 25-வது படம் இது. ‘காதல் கொண்டேன்’, ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘3’, ‘புதுப்பேட்டை’ என்று அவர் நடித்த பல படங்களை ‘வேலையில்லா பட்டதாரி’ ஞாபகப்படுத்துகிறது. அது பலமா, பலவீனமா என்பது தெரியவில்லை.